2 சாமுவேல் 12:23 ….கர்த்தர் எனக்கு இரங்குவாரோ, எப்படியோ, என்று உபவாசித்து அழுதேன்.
இந்த 2 சாமுவேல் 12 ம் அதிகாரத்தில் நம்முடைய பரமபிதா ஏதோ நமக்கு சத்து நிறைந்த உணவு கொடுப்பது போல புதைந்திருக்கிறது இந்த அருமையான வசனம்.
தாவீது தன்னுடைய ஊழியரைப்பார்த்து தன்னுடைய குழந்தை உயிரோடு இருந்தபோது உபவாசித்து அழுததைப்பற்றிக் கூறும்போது, ஒருவேளை கர்த்தர் அந்தக் குழந்தை மேல் இரக்கம் காட்டுவாரோ என்று நினைத்ததாகக் கூறுகிறான்.
இங்கு தாவீது கர்த்தருடைய இரக்க குணத்தின்மேல் சந்தேகப்பட்டு இதைக் கூறவில்லை. தாவீதின் வாழ்க்கையில் கர்த்தருடைய இரக்கத்தையும் தயவையும் அதிகமாக அனுபவித்தவன் அவன். தன்னுடைய வனாந்திர வாழ்க்கையில் காடு மேடு, மலை பள்ளம் என்று சவுலுக்கு பயந்து ஓடிய காலத்தில் தாவீது இந்த வசனத்தை எழுதினான்.
சங்: 34:8 கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள், அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.
கர்த்தர் கொடுக்கும் இரக்கம் என்ற விருந்தை ருசித்தவன் அவன். அதனால் அவனுக்கு இரக்கமே உருவான தேவன் தன் குழந்தை மேல் இரங்குவார் என்ற எண்ணம் தான்.
மிகச்சிறிய தீர்க்கதரிசன புத்தகமாகிய யோவேல் 2:13 ல்
நீங்கள் உங்கள் வஸ்திரங்களையல்ல, உங்கள் இருதயங்களைக் கிழித்து உங்கள் தேவனாகிய கர்த்தர் இடத்தில் திரும்புங்கள், அவர் இரக்கமும், மன உருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர், அவர் தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமாயிருக்கிறார்.
என்று பார்க்கிறோம். அப்போஸ்தலனாகிய பேதுரு இந்தக் கிருபையை அனுபவித்திருந்தார். மூன்றுமுறை மறுதலித்த பின்னரும் அவரை ஏற்றுக்கொண்ட மாபெரும் கிருபை!
பாவியாகிய என்மேல் இரக்கம் காட்டி அவருடைய பிள்ளையாக்கிய கிருபை!
தாவீதும் இந்தக் கிருபையைத்தான் அனுபவித்திருந்தான். அதனால்தான் கர்த்தரிடத்தில் கிருபையைத் தேடி சென்றான். தன்னுடைய எல்லாத் தவறுகளுக்கும் மத்தியில், தாவீது தேவனுடைய இரக்கத்தைத் தேடினான்.
தேவனுடைய கிருபையை உங்கள் வாழ்க்கையில் ருசித்தது உண்டா? அவரை விட்டு பின்வாங்கி ஓடிய போதும் கரம் நீட்டி அணைத்த அந்தக் கிருபை!
ஒருவேளை இன்னும் ருசிக்காமல் இருப்பீர்களானால், இன்று அவரிடம் வாருங்கள்!
உங்கள் இருதயங்களைக் கிழித்து அவருடைய கிருபாசனத்தண்டை வரும்போது, அவர் நல்லவர் என்பதை ருசிக்க முடியும்! தாவீதைப்போல, பேதுருவைப் போல, என்னைப்போல எப்படிப்பட்ட பாவியையும் மன்னிக்க வல்லவர்! வந்து ருசித்து பாருங்கள்!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்