1 இராஜாக்கள் 17:8-9 தேசத்தில் மழை பெய்யாதபடியினால், சிலநாளுக்குப்பின்பு அந்தஆறு வற்றிப் போயிற்று. அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாயிற்று. அவர் நீ எழுந்து சீதோனுக்கடுத்த சாறிபாத் ஊருக்குப் போய் அங்கே தங்கியிரு, உன்னைப் பராமரிக்கும்படி அங்கே இருக்கிற ஒரு விதவைக்குக் கட்டளையிட்டேன் என்றார்.
நான் இரும்புத்தாதுகளை உருக்கி இரும்பை எடுக்கும் பெரிய உருகாலைகளைப் பார்த்ததில்லை. கொஞ்ச நாட்களுக்கு முன்பு பழைய நகை ஒன்றை மாற்றுவதற்காக சென்றேன். அதை உருக்கும்படி என்னை உள்ளே அழைத்து சென்றனர். அங்கே பயங்கரமான சூடான ஒரு உபகரணத்தின்மேல் அந்த நகையை வைத்தனர். அது உள்ளே சென்று வெளியே வந்தபோது உருகி சின்னக் கம்பி போல வந்தது. உள்ளேயிருந்த சூட்டில் அந்த நகையிலிருந்த எல்லா அழுக்குகளும் நீங்கி சுத்தத் தங்கமாக வெளியே வந்தது.
இதை ஏன் இங்கு எழுதிக்கொண்டிருக்கிறேன் என்று நினைக்கிறீர்களா? சாறிபாத் என்ற வார்த்தைக்கு உருக்குதல் என்று அர்த்தம். இன்னும் ஆழமாக இதை எபிரேய மொழியில் பார்த்தால் உலோகங்களை உருக்கப் பயன்படுத்தப்படும் மட் பாத்திரம். மிகவும் அதிகமான சூட்டையும் தாங்கக்கூடிய பாத்திரம். உருகிய சுத்தமான உலோகத்தை சேர்க்க இப்படிப்பட்ட பாத்திரம் சூளையின் அடியில் வைக்கப்படும்.
வாருங்கள் இப்பொழுது நம்முடைய புதிரைக் கண்டுபிடிக்கலாம்.தேவனாகியக் கர்த்தர் நம்முடைய எலியாவை கேரீத் ஆற்றண்டைக்கு அனுப்பி காகங்களால் போஷித்து வந்தார். திடீரென்று அந்த ஆறு வற்றிப் போயிற்று. அவருடைய வார்த்தை எலியாவுக்கு உண்டாகி அவர் நீ எழுந்து சாறிபாத்துக்குப் போ என்றார். ஆனால் கர்த்தர் அவனை சாறிபாத்தில் உள்ள நோவா டெல் போன்ற நட்சத்திர விடுதிக்கு அனுப்பவில்லை!
அவன் 150 கிலோமீட்டர் தொலைவுக்கு நடக்கத் தன்னை ஆயத்தம்பண்ணிக் கொண்டான். அவனுடைய பிரயாணம் எங்கும் மறைவாக இல்லை, ஆகாபும், யெசெபேலும் அவனைத் தேடி கொண்டிருக்கும் இஸ்ரவேல் தேசத்தின் வழியாகத்தான். இந்தக் கட்டளையை எலியா தன் கனவிலும் எதிர்பார்த்திருந்திருக்க மாட்டான். அந்த தேசத்தின் எல்லையெங்கிலும் எலியாவை உயிரோடோ அல்லது பிணமாகவோ பிடிக்கும்படியான கட்டளை கொடுக்கப்பட்டிருந்தது.
அதுமட்டுமல்ல எலியா அந்த சாறிபாத்தில் தங்கும்படியான கட்டளை அவனுக்குக் கொடுக்கப்பட்டது. சாறிபாத் உலோகங்களை உருக்கப் பயன்படுத்தப்படும் பாத்திரம் போல பாகால் வழிபாடு என்ற அக்கினிச்சூளையில் இருந்தது. அதை ஆண்டு கொண்டிருந்த ராஜா வேறு யாருமில்லை! யெசெபேலின் தகப்பன் தான்.
எலியாவின் நிலையை யோசித்துப் பாருங்கள். அவன் காய்ந்து போன ஆற்றை சுற்றி நடக்க எடுத்த ஒவ்வொரு அடியும் அவனை உலோகங்களை உருக்கும் உருக்காலையை நோக்கிக் கொண்டு சென்றது. எப்படித்தான் இதை எலியா செய்தானோ எனக்குத் தெரியாது ஆனால் ஒன்றுமட்டும் தெரியும் எலியா கேரீத் ஆற்றண்டையிலே தேவனை முற்றிலும் சார்ந்து வாழக் கற்றுக் கொண்டிருந்தான்.
அன்பின் தேவனுடைய பிள்ளைகளே! நாம் வாசிக்கும் சங்கீதங்கள் அனைத்துமே வனாந்திர அனுபவத்தில் எழுதப்பட்டவைதான். நாம் வாசிக்கும் நிருபங்கள் அனைத்தும் சிறைவாசத்தில் எழுதப்பட்டவைதான். மிக உயர்ந்த விசுவாசிகள் அனைவருமே இவ்விதமான உருக்காலைகளைக் கடந்தவர்கள்தான்!
தேவன் இன்று உன்னை உருக்காலையை நோக்கி நடக்கச் செய்து கொண்டிருப்பாரானால், பயப்படாதே! எலியா இந்த அக்கினிப்பரீடசையை ஏற்றுக்கொண்டு கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்தான். தேவன் அவனோடிருந்தார்!
விவாகரத்து, கடன், திடீர் மரணம், மனசோர்வு, குற்ற உணர்வு, தனிமை , நம்பிக்கையின்மை, போன்ற பலவித உருக்காலைகளை நீ கடந்து கொண்டிருக்கலாம்! நீ கடந்து போகும் இந்தப்பாதையில் தேவன் உன்னோடும் இருப்பார்! நீ புடமிடப்பட்ட சுத்தத் தங்கமாய், தேவனுடைய கரத்தில் வல்லமையுள்ள பாத்திரமாய் இந்த அனுபவம் உன்னை உருவாக்கும்!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்
