1 இராஜாக்கள் 17:10 அப்படியே அவன் எழுந்து சாறிபாத்துக்கு போனான்
எலியா தன்னுடைய பரமபிதாவாகிய தேவனாகியக் கர்த்தரின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து உருக்காலை என்று அர்த்தம் கொண்ட சாறிபாத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தான். அவன் மனதில் இந்த சீதோன் நாட்டைப் பற்றி என்ன எண்ணம் ஓடிக்கொண்டிருந்திருக்கும்? இஸ்ரவேலர் இவர்களை எதிரி என்று அல்லவா எண்ணினார்கள்! அந்த நாட்டு மக்களோடு அவன் எப்படி வாழ முடியும்?
ஒரு வருடத்துக்கு முன்பு அவன் அந்த கேரீத் ஆற்றண்டையில் வந்த போது, உணவுக்காக காத்திருந்த போது,அருவருக்கப்பட்ட பறவையான ஒரு காகம் தன் வாயில் அவன் உணவை ஏந்தி வந்த போது, எலியா தேவன் அளித்த உணவுக்காக அவரை ஸ்தோத்தரித்தான்.
இப்பொழுது ஒருவருடத்திற்கு பின்னர் மறுபடியும் ஒரு அருவருப்பான சூழலுக்கு தேவன் அவனை அழைத்துச் செல்கிறார். அவனை இஸ்ரவேல் நாட்டுக்குள் உள்ள ஒரு வீட்டுக்கு போகச் சொல்லவில்லை, சாறிபாத் என்ற பாகால் வழிபாட்டு மையத்தில் இருந்த ஒரு ஏழை விதவையின் வீட்டுக்கு போகச் சொல்கிறார். இன்னும் ஆழமாக இதைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் எலியா இனிமேல் தனிமையாக இயற்கை சூழலில் இருக்க வேண்டாம், சாறிபாத்தில் ஒரு அந்நிய நாட்டில், எலியாவின் தேவனை வெறுத்த மக்கள் வாழும் நாட்டில், அவன் இதுவரை அறியாத ஒரு பெண்ணின் வீட்டில் தங்கியிருக்கும் படியாகக் கட்டளை பெற்றான்.
கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து எலியா தான் வாழ்ந்து கொண்டிருந்த பள்ளத்தாக்கின் மறைவிடத்தை விட்டு, நேராக மத்தியதரைக்கடலின் ஓரத்தில் அமைந்திருந்த பாகால் வழிபாட்டு நகரமாகிய சாறிபாத்தை நோக்கி நடக்க ஆரம்பிக்கிறான்.
எலியாவை இஸ்ரவேல் அல்லாத சாறிபாத்திற்கு தேவன் அனுப்பியதின் மூலம் அவர் ஒரு இனத்தாருக்கோ, ஒரு நாட்டவர்க்கோ, அல்லது ஒரு திருச்சபையாருக்கோ, அல்லது ஒரு பிரிவினருக்கோ உரியவர் அல்ல என்று நமக்குத் தெளிவு படுத்துகிறார்.
அவர் ஆபிரகாமைத் தெரிந்து கொண்டு அவன் மூலமாக இந்த பூமியிலுள்ள அனைத்து ஜாதிகளையும் ஆசீர்வதிப்பதாக வாக்குக் கொடுத்தபோதே அவர் இஸ்ரவேலுக்கு மட்டுமே சொந்தமான தேவன் அல்ல என்று தெளிவு படுத்தினார்.
இஸ்ரவேல் மற்ற நாடுகளுக்கு முன்னர் சாட்சியாக வாழவேண்டுமென்பதே தேவ சித்தம். பாகால் வழிபாடு இஸ்ரவேலின் வட பகுதியை ஆக்கிரமித்து மக்களின் மனதை கொள்ளை கொண்டபோது, இஸ்ரவேல் சாட்சியாக வாழ வேண்டியத் தகுதியை இழந்தது. அதனால் கர்த்தர் எலியாவை தீரு சீதோன் நாட்டிலுள்ள ஒரு விதவையண்ட அனுப்பினார். எலியாவின் மூலம் தம்முடைய கிருபை அயல் நாட்டவருக்கும் உண்டு என்று தேவன் தெளிவு படுத்தினார்.
தேவன் நம்மிடம் எந்த நன்மையும் காணப்படாதபோது, நம்மைப் பற்றிய நற்சாட்சி ஏதுமில்லாத போது, நாம் தேவனையறியாத சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருந்தபோது நம்மை நேசித்தார். இஸ்ரவேலரல்லாத நம்மை அவ்ருடைய கிருபைத் தேடி வந்தது. அவருடைய கிருபைக்கு எல்லையில்லை!
அதைப்போலவே அவருடைய கிருபை நம்மை மட்டும் அல்ல, நம்முடைய அயலகத்தாரையும், நம்முடைய சமுதாயத்தாரையும், நம்முடைய நாட்டில் வாழ்பவர்களையும் கூட நாடுகிறது. கர்த்தரகிய இயேசுவைப் பற்றியும் அவருடைய கிருபையைப் பற்றியும் அவர்களுக்குக் கூறுவதற்கு பதிலாக நாம் ஏதோ நியாதிபதிபோல நடந்து கொள்கிறோம். இவர்களுக்கு கிறிஸ்து தேவையில்லை என்று நாமே முடிவு செய்கிறோம்.
எலியா விக்கிரக ஆராதனையின் மையமான சாறிபாத்துக்கு அனுப்பட்டது , அந்த மக்களையும் தேவன் நேசிக்கிறார் என்பதின் அடையாளம். கர்த்தராகிய இயேசு உன் மூலமாக தம்முடைய அன்பையும், கிருபையையும் உன்னுடைய அயலத்தாருக்கு கொடுக்க விருபுகிறார். எலியாவைப் போலக் கீழ்ப்படிந்து சாறிபாத்தை நோக்கி சுவிசேஷத்தை ஏந்திக் கொண்டு செல்வாயா?
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்
