Archive | September 14, 2011

மலர்: 2 இதழ்: 133 வாழ்க்கையின் தூண்!

 

உபாகமம்: 33:3 மெய்யாகவே அவர் ஜனங்களை நேசிக்கிறார். அவருடைய பரிசுத்தவான்கள் எல்லாரும் உம்முடைய கையில் இருக்கிறார்கள். அவர்கள் உம்முடைய பாதத்தில் விழுந்து  உம்முடைய வார்த்தைகளினால் போதனையடைவார்கள்.

 

நாம் மோசே இஸ்ரவேல் மக்களுக்கு கொடுத்த கடைசி உபதேசத்தைப் படித்துக் கொண்டிருக்கிறோம். நம்முடைய வாழ்க்கை என்னும் வீட்டின் அஸ்திபாரம் கன்மலையாகிய கிறிஸ்து என்றும், நம்முடைய வீட்டின் முதல் தூண் நாம் பயப்படும் வேளையிலும், நாம் இடறும் வேளையிலும், அவருடைய பாதத்தில் விழுந்து அவர் கால்களை விடாமல் பிடித்துக்கொள்ளும் வாழ்க்கை என்றும் பார்த்தோம்.

இன்று கிறிஸ்துவை அஸ்திபாரமாகக்கொண்டு கட்டப்பட்ட வீட்டின் இரண்டாவது தூணாக அமைவது என்ன என்று பார்க்கப்போகிறோம்.

 “உம்முடைய வார்த்தைகளினால் போதனையடைவார்கள்”. கர்த்தருடைய வார்த்தைகள் நம்மை போதித்து வழிநடத்தும் என்பது நான் என் வாழ்க்கையில் அனுபவித்திருக்கிற ஒரு உண்மை.

முப்பத்து மூன்று வருடங்களுக்கு முன்னால் நான் வேதாகமக் கல்லூரியில் கடைசி ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது, ஒருநாள் எல்லா மாணவர்களும் ஆசிரியர்களும் கூடியிருந்த சபையில் அவர்கள் முன்பாக ஒரு பிரசங்கம் பண்ணிக் காட்ட வேண்டியதிருந்தது. அதை நான் முடித்துவிட்டு வெளியே வரும்போது எங்கள் கல்லூரியின் தலைமை ஆசிரியர் என்னை அழைத்து நீ ஒரு பெரிய பிரசங்கியாக வருவாய் என்று என்னால் நிச்சயமாக கூற முடியும் என்றார். அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் என் உள்ளத்தில் தெளிவான குரலில் நீ பிரசங்கிக்கப் போவதில்லை போதிக்கப் போகிறாய் என்றார். அன்றிலிருந்து இன்றுவரை வேதத்தை சிறியோர் பெரியோருக்கு போதிக்கும் கிருபையை கொடுத்திருக்கிறார். இந்த ராஜாவின் மலர்கள் மூலமாக நான் உங்களோடு கர்த்தருடைய வார்த்தையை பகிர்ந்து கொள்வதும் கர்த்தருடைய அநாதி தீர்மானம் அல்லவா!

மோசே நாற்பது ஆண்டுகள் தேவனை முகமுகமாய் அறிந்த அனுபவத்தில் நம்மை நோக்கி கர்த்தருடைய வார்த்தைகளின் போதனையை ஏற்றுக்கொள்ளும்படி கூறுகிறார். என்னுடைய அனுபவத்தில் நான் இன்று உங்களுக்கு சாட்சியாக சொல்லுகிறேன் வேதவார்த்தைகள் ஜீவனுள்ள வார்த்தைகள், அவை உங்களை போஷிக்கும், உங்களை வழிநடத்தும், உங்களைக் காக்கும், தேவனோடு நெருங்கி வாழவும், அவருடைய திருமுக பிரகாசத்தை நாம் காணவும் நமக்கு உதவும். கர்த்தருடைய வார்த்தை நமக்கு மனமகிழ்சியைக் கொடுக்கும், ஆறுதலைக் கொடுக்கும், நம் பாதைக்கு தீபமாக இருக்கும். இது நிச்சயமாக என் அனுபவம் மாத்திரம் அல்ல, என்னைப் போன்ற உங்களில் பலருடைய அனுபவமும் தான்!

நம்மில் அநேகர் பிரசங்கத்தை கேட்கும்போது ஆம் ஆம் என்று தலையசைக்கிறோம். ஆனால் அவற்றை ஒரு காதில் கேட்டு விட்டு மறுகாதில் விட்டுவிடுவோம். இங்கு மோசே உம்முடைய வார்த்தைகளினால் போதனையடைவார்கள் என்கிறார். போதனையடைவார்கள் என்ற வார்த்தைக்கு அர்த்தம்  அவற்றைக் காதுகளால் கேட்பது மட்டும் அல்ல, அவை நம் வாழ்வின் அங்கமாக வேண்டும். அவற்றை நாம் உட்கொள்ள வேண்டும். கர்த்தருடைய வார்த்தைகளில் நம் வாழ்க்கை வேரூன்றியிருக்கும் போதுதான் நாம் நல்ல கனி கொடுக்கும் மரமாக வாழ முடியும்.

அனுபவ முதிற்சியுள்ள மோசே இஸ்ரவேல் மக்களைப் பார்த்து ‘ கர்த்தருடைய வார்த்தைகளால் போதனையடையும்படி’  தன்னுடைய கடைசி உபதேசத்தில் கூறுகிறான். இன்று கர்த்தருடைய வார்த்தை உன் வாழ்வில் அங்கமாக இருக்கிறதா? அதுவே நாம் கற்பாறையாகிய கிறிஸ்துவின் மேல் கட்டும் வாழ்க்கை என்னும் வீட்டின் இரண்டாவது பெலமான தூண்!

கர்த்தருடைய வார்த்தையானது பாதைக்கு தீபம்!

அது நாம் இருளில் நடக்கும்போது

வழிகாட்டும், நம் கால்கள் தவறாதபடி காக்கும்!

கர்த்தருடைய வார்த்தையானது கொழுந்து விட்டு எரியும் அக்கினி!

அது நம்முடைய சாட்சியை

தைரியமாக பறைசாற்ற உதவும்!

கர்த்தருடைய வார்த்தையானது ஒரு சுத்தியைப் போன்றது!

அது கல்லான நம் இருதயத்தை உடைத்து, நொறுக்கி,

நாம் அவருடைய சித்தப்படி வாழ நம்மை உருவாக்கும்!

கர்த்தருடைய வார்த்தையானது ஒரு சிறிய விதையைப் போன்றது!

அது நல்ல நிலமாகிய நம் இருதயத்தில் விழும்போது

நம்மை நற்கனி கொடுக்கும் மரமாய் மாற்றும்!

கர்த்தருடைய வார்த்தையானது இருபுறமும் கருக்குள்ள பட்டயம்!

அது நம் இருதயத்துக்குள் ஊடுருவி சென்று,

நம்மை ஆராய்ந்து பரிசுத்தமாய் நாம் வாழ உதவும்!

கர்த்தருடைய வார்த்தையானது சத்துணவைப் போல!

நாம் குழந்தைகளான போது பாலைப் போல நம்மை புஷ்டியாக்கும்!

நாம் பெரியவர்களான போது மாமிசத்தைப் போல நம்மை திருப்தியாக்கும்!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

பின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும்.

ராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி!  இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். உங்கள் கருத்துகளைத் தவறாமல் எழுதுங்கள்!