Archive | September 28, 2011

மலர்: 2 இதழ்: 143 புதிய பிணைப்பு! புதிய சக்தி!

 

எபி:11:31 விசுவாசத்தினாலே ராகாப் என்னும் வேசி வேவுகாரரை சமாதானத்தோடே ஏற்றுக்கொண்டு, கீழ்ப்படியாதவர்களோடே கூடச் சேதமாகாதிருந்தாள்.”

நான் என்னுடைய 13 ம் வயதில் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதால், பள்ளியிலும், கல்லூரியிலும் அநேக காரியங்களுக்கு மறுப்பு சொல்ல வேண்டியதிருந்தது. ஒரு கை மாறி மறு கைக்கு இரகசியமாய் மாற்றப்பட்ட கதை புத்தகங்களை மறுதலித்தது, கும்பலாய் டிக்கட் வாங்கி தியேட்டருக்கு படம் பார்க்க சென்ற நண்பர்களோடு போக மறுதலித்தது, சிற்றின்பமான காரியங்களை பேசி சிரித்து நேரம் கழிப்பது,  இப்படி பல காரியங்களில் நான் தனிமையாக நின்றேன். நான் வகுப்புக்கு செல்லும்போது எல்லோருடைய கண்களும் என்மேல் இருப்பதை உணர்வேன். அநேக வருடங்கள் கழிந்து போனாலும் ஒன்று மட்டும் தெளிவாக ஞாபகத்தில் உள்ளது. எவ்வளவுதூரம் நான் இப்படிப்பட்ட காரியங்களில் பங்கு பெறுவதை வெறுத்தேனோ, அவ்வளவுதூரம் நான் தனிமையாக, மற்றவர்கள் களிகூறும் சிற்றின்ப வட்டத்துக்கு வெளியே,  நின்றதையும் வெறுத்தேன். என்றாவது ஒருநாள் தவறி அந்த வட்டத்துக்குள் போய்விடுவோமோ என்ற பயம் கூட இருந்தது!

உங்களுக்கு இந்த அனுபவம் உண்டா? நீங்கள் வேலை செய்யும் இடத்திலோ, அல்லது உங்கள் குடும்பத்திலோ வட்டத்துக்கு வெளியே தனிமையாக நிற்கிரீர்களா? எல்லோருடைய பார்வையும் உங்களை துரத்துகிறதா?

ஏதேன் தோட்டத்தில் ஆதாமும் ஏவாளும் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் மாற ஆசைப்பட்டு, கர்த்தருடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படியாமல் போன நாளிலிருந்து, நாம் ஒவ்வொருவரும் நன்மை தீமை அறியும் கனியை அவர்கள் புசித்தற்கான விலையைக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்!

நாம் ராகாபுடைய வாழ்க்கையிலிருந்து, நம்முடைய வாழ்வின் அஸ்திபாரக் கற்களைப் பற்றி படித்துக் கொண்டிருக்கிறொம்! அஸ்திபாரத்திற்கு விசுவாசம் என்னும் ஆரம்பம் ஒரு அஸ்திபாரக் கல் என்றால்,  விசுவாசத்தின் மூலம் கர்த்தரைப் பற்றிய வெளிப்படுத்துதலை பெற்றுக்கொள்ளுதல் அதற்கு தேவையான இன்னொரு கல் என்றும், பாதுகாக்கப் படுதல் நம்முடைய வாழ்வின் அஸ்திபாரத்துக்கு தேவையான மற்றொரு கல் என்றும் பார்த்தோம். கர்த்தர் ராகாபை ஒரு நல்ல தகப்பனாக, தம்முடைய செட்டைகளின்கீழே பாதுகாத்தார்.

இன்று நாம் காண்கிற அஸ்திபாரக் கற்களில், அடுத்த கல் மறுதலித்தல் என்பதே.

உண்மையில் சொல்லப்போனால் நான் இதை எழுதும்போது ராகாபுடைய வாழ்க்கையை பூதக் கண்ணாடிப் போட்டு பார்த்தேன். வேசி என்று அழைக்கப்பட்ட அவள் கீழ்ப்படியாதவர்களோடே சேதமாகாமல் இருக்க என்ன செய்திருப்பாள்? எவற்றை மறுதலித்திருப்பாள்? சிற்றின்பத்தையா அலங்கத்தின் மேல் வாழ்ந்த வாழ்க்கையையா? எப்படி அவள் எபிரேயர் 11 ம் அதிகாரத்தில் விசுவாசத்தின் கதாநாயகர்களின் பட்டியலில் இடம் பிடித்தாள்?

விசுவாச வாழ்க்கையில் நிலைத்திருக்க நாம் எவற்றை மறுதலிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறோம்? சிற்றின்பமாய் இருக்கலாம்! ஆனால் அதைவிட மிக மிக முக்கியமான ஒன்று உள்ளது!

ராகாப் விசுவாசித்தபோது, கர்த்தருடைய வெளிப்படுத்துதலை பெற்றுக்கொள்ள ஆரம்பித்தபோது, கர்த்தரால் பாதுகாக்கப்பட்டபோது, அவள் ஒரு புதிய இராஜ்யத்தின் பிள்ளையானாள்! இனி எரிகோவின் அதிகாரத்துக்கு கீழே அவள் இல்லை! அவளுடைய விசுவாசம் அவளை ஒரு கர்த்தருடைய அதிகாரத்துக்கு கீழே கொண்டு வந்தது.

ஒரு மின்சாரக் கருவி,  எந்த பிணைப்பில் பொறுத்தப்பட்டுள்ளதோ அந்த இடத்திலிருந்து மின்சாரத்தை வாங்கி இயங்குவது போல,  அவள் பழைய வாழ்க்கையான எரிகோ இராஜ்யத்தின் பிணைப்பிலிருந்து தன்னை எடுத்து புதிய வாழ்க்கையான கர்த்தரின் இராஜ்யத்தில் பிணைத்து விட்டாள். இப்பொழுது அவள் இயங்கும் சக்தி அவளுக்கு புதிய பிணைப்பான கர்த்தரிடமிருந்து வந்தது!

மறுபடியும் கேட்கிறேன்! ராகாபைப் போல நீங்கள் வேலை செய்யும் இடத்திலோ, அல்லது உங்கள் குடும்பத்திலோ, வட்டத்துக்கு வெளியே தனிமையாக நிற்கிரீர்களா? எல்லோரும் தெரிந்து கொள்ளும் பாதையை நீங்கள் மறுதலிப்பதால் எல்லோருடைய பார்வையும் உங்களை துரத்துகிறதா? தவறி அவர்களுடைய வட்டத்துக்குள்ளேயே போய்விடுவோமோ என்ற பயம் உள்ளதா? ராகாபைப் பார்!

 ராகாபைப் போல அழிந்து போகும் எரிகோவை மறுதலித்து விட்டு, உன்னை இஸ்ரவேலின் கர்த்தரோடு பிணைத்துக் கொள்! ராகாபுக்கு தனியே நிற்கும் வல்லமையை கொடுத்த கர்த்தர் ஒவ்வொரு நாளும் உனக்கும் வல்லமையை கொடுப்பார்!

நீ தீமையை மறுதலிக்காவிட்டால் நன்மையை நேசிக்க முடியாது!

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

 

பின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும்.

ராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி!  இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். உங்கள் கருத்துகளைத் தவறாமல் எழுதுங்கள்!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisements