Archive | September 20, 2011

மலர்: 2 இதழ்: 137 நீ யார்ப் பக்கம்?

 

யோசுவா 2:2 அப்பொழுது எரிகோவின் ராஜா ராகாபண்டைக்கு ஆள் அனுப்பி உன்னிடத்தில் வந்து உன் வீட்டுக்குள் பிரவேசித்த மனுஷரை வெளியே கொண்டுவா; அவர்கள் தேசத்தையெல்லாம் வேவுபார்க்கும்படி வந்தார்கள் என்றான்.

நாம் ராகாபைப் பற்றி படித்துக்கொண்டிருக்கிறோம். இஸ்ரவேலின் வேவுக்காரர் இருவர் வேசியான அவளுடைய வீட்டுக்குள் பிரவேசித்து அங்கே தங்கினார்கள் என்று நேற்று பார்த்தோம்.

சில நேரங்களில் பிரச்சனைகள் நாம் அழைக்காமலே நம் வாசலைத் தட்டுகின்றன என்பது எவ்வளவு உண்மை! ராகாப் இந்த இரு வேவுகாரரையும் தன் விட்டுக்கு அழைத்தாளா? யாரும் அழையாத விருந்தாளிகளாகத் தானே வந்தனர்! அவர்களோடு ராகாபுக்கு ஆபத்தும் வந்து வாசலைத் தட்டியது!

எரிகோவின் ராஜாவிடமிருந்து ராகாப் வீட்டுக்கு ஆள் வந்தனர். நம்முடைய தமிழ் வேதாகமத்தில் ராஜா ஆள் அனுப்பி சொல்லச்சொன்னான் என்று எழுதப்பட்டிருக்கிறது ஆனால் ராஜா ’ஆள் அனுப்பி’ என்ற வார்த்தையின் எபிரேய மொழியாக்கம் ’ராஜா ஆள் அனுப்பி ராகாபை தன்னண்டை வரவழைத்து’ என்ற அர்த்தத்தை கொடுக்கிறது. அப்படியானால் ராகாப் அரசனால் வரவழைக்கப்பட்டு பயமுறுத்தப்பட்டிருப்பாள். பின்னர் ராகாப் பயந்து அந்த மனிதரை நம்மிடம் ஒப்படைத்துவிடுவாள் என்ற நம்பிக்கையில் அரசன் அவளை வீட்டுக்கு அனுப்பியிருப்பான். அரசகட்டளை அவள் தலையின்மேல் ஊசலாட ராகாப் வீடு திரும்பினாள்.

இதை வாசிக்கும்போது அரசகட்டளை தலைக்குமேல் ஊசலாடும்போது அரசனுக்கல்ல கர்த்தருக்கே கீழ்ப்படிவோம் என்று முடிவெடுத்த இரு பெண்மணிகள் ஞாபகத்துக்கு வருகின்றனர். சிப்பிராள், பூவாள் என்ற இரு எபிரேய மருத்துவச்சிகளை பார்வோன் கூப்பிட்டு எபிரேய ஸ்திரிகளுக்கு பிரசவம் பார்க்கும்போதே ஆண்பிள்ளைகளை கொன்றுவிடும்படி பேசினான் (யாத்தி:1:15).  இந்த வசனத்தில் ’பேசி’ என்ற வார்த்தையின் எபிரேய மொழியாக்கம் நிச்சயமாக தேநீர் விருந்துக்கு அழைத்துப் பேசினான் என்று அர்த்தம் இல்லை!  அவர்களுக்கு கட்டளையிட்டான் என்றுதான் அர்த்தம். அவர்கள் பார்வோனின் மிரட்டலுக்கு பயப்படாமல் இஸ்ரவேலின் தேவனுக்கு கீழ்ப்படியத் துணிந்தனர்!

சிப்பிராளும், பூவாளும் பார்வோனிடம் ஞானமாகப் பேசிய விதத்தையும், ராகாப் எரிகோவின் ராஜாவின் கட்டளைக்கு ஞானமாக நடந்து கொண்ட விதத்தையும் படிக்கும்போது, கர்த்தர் நம் உள்ளத்தில் எது சரியென்று சொல்கிறாரோ அதற்காக துணிந்து நிற்கவும், செயல்படவும் பெலமும் தைரியமும் நம் ஒவ்வொருவருக்கும் வேண்டும் என்று என் உள்ளத்தில் ஆவல் எழுந்தது.

எரிகோவின் ராஜாவின் எச்சரிப்பைக் கேட்ட ராகப், ஒரு நொடி கூட பின்னோக்கவில்லை, இஸ்ரவேலின் ராஜாதி ராஜாவுக்கு கீழ்ப்படிய முடிவு செய்தாள். உடனடி நடவடிக்கையாக ராகப் அந்த இரண்டு மனிதரையும் ஒளித்து வைத்தாள் என்று பார்க்கிறோம் (யோசு:2:4) ஒரு சாதாரணப் பெண்ணாக ஏதோ வயிற்றைக் கழுவ பிழைப்பை நடத்திக் கொண்டிருந்த ராகாப் யாரோ எப்படியோ போகட்டும் நமக்கென்ன என்று அந்த ஊரில் வாழ்ந்த மற்றவர்களைப் போல தன் வாழ்க்கையை தொடர்ந்திருக்கலாம், ஆனால் ராகாப் தனக்கு இஸ்ரவேலின் தேவனுக்கு சேவை செய்யும்படியாய் கிடைத்த தருணத்தை  இழக்கவில்லை.

ராகாப் எரிகோவின் ராஜாவுக்கு கீழ்ப்படிந்திருந்தால் ஒருவேளை வெகுமதிகள் பெற்றிருக்கலாம்! இஸ்ரவேலின் தேவனுக்கு கீழ்ப்படிந்ததால் அவள் உயிரையே இழந்திருக்கலாம்! ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாகிய கர்த்தரை சேவிப்பதை தெரிந்து கொண்ட கணத்தில் கர்த்தர் அவளைத் தமக்கு சுதந்தரமாகும்படி தெரிந்துகொண்டார்.

இஸ்ரவேலின் தேவனா? எரிகோவின் ராஜாவா? என்று ராகாபுக்கு வந்த சோதனை நமக்கு ஒவ்வொரு நாளும், நாம் செய்யும் ஒவ்வொரு சாதாரண காரியங்களிலும் வரலாம்! சிப்பிராள், பூவாளைப் போல, ராகாபைப் போல கர்த்தருக்காக உறுதியாய் நிற்பாயா அல்லது உலகத்தை பிரியப்படுத்துவாயா?

என்னுடைய கவலையெல்லாம் கர்த்தர் என் பக்கம் இருக்கிறாரா என்பது இல்லை, நான் அவர் பக்கம் இருக்கிறேனா என்பதுதான் என்ற            ஆபிரகாம் லிங்கனைப் போல நீ யார் பக்கம் இருக்கிறாய் என்று சிந்தித்துப்பார்!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

 

பின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும்.

ராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி!  இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். உங்கள் கருத்துகளைத் தவறாமல் எழுதுங்கள்!