Archive | September 23, 2011

மலர்: 2 இதழ்: 140 உம்மில் நிலைத்திருக்கும் விசுவாசத்தை தாரும்!

 

யோசு:2:11 “……உங்கள் தேவனாகிய கர்த்தரே உயர வானத்திலும், கீழே பூமியிலும் தேவனானவர்.”

கடந்த இரண்டு வருடங்களாக உலக பொருளாதார நிலைமையால் எங்கள் கம்பெனியின் ஏற்றுமதி மிகவும் குறைவுபட்டது. அநேக தொழிலாளர்கள் இருந்ததால் வேலையை நிறுத்தமுடியாமல் தொடர்ந்துவந்தோம். நாங்கள் தயாரித்த ஆடைகள் குவிய ஆரம்பித்தது. ஒரு வருடம் எப்படியோ சமாளித்து விட்டேன், அடுத்த வருடம்  என்னால் கம்பெனியில் வேலை செய்தவர்களின் ஊதியம், பராமரிப்பு இவற்றை சமாளிக்க முடியாமல் திணறினேன். என்னுடைய உடல்நிலை பாதிக்கப்பட்டது. 

 ஒருநாள் டிவி போட்டபோது ஒரு ஊழியக்காரர்,  “ ஒருவேளை நீங்கள் இன்று பலத்த தொழில் நஷ்டத்தில் இருக்கலாம்!  போதுமான விசுவாசத்தோடு கேளுங்கள், இப்பொழுதே உங்கள் பிரச்சனைகள் தீர்ந்துவிடும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.  தொடர்ந்து அவர் போதுமான விசுவாசத்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது, அந்த மாதம் ஊதியம் கொடுக்க எனக்குத் தேவையான இலட்சக்கணக்கான பணத்தை நினைத்துப் பார்த்தேன்! தலை சுத்தியது! கர்த்தரை எனக்காக கிரியை செய்ய வைக்கத் தேவையான  விசுவாசம் என்னிடத்தில் இல்லை போலும்! ஆண்டவரே விசுவாசமே இல்லாத உம்முடைய இந்த மகள்மேல் கிருபையாயிரும் என்று சொல்லிவிட்டு எழுந்து விட்டேன்.

என்னைப்போல உங்களில் சிலர் பலவிதமான கடினமான சோதனைகளில் போய்க் கொண்டிருக்கலாம்! ஒருவேளை உங்கள் விசுவாசம் நொறுங்கிப்போன நிலைக்குக் கூட இந்த சோதனைகள் உங்களை கொண்டு செல்லலாம்.

இன்னும் சில நாட்கள் நாம் தொடர்ந்து நம்முடைய விசுவாசத்தின் அஸ்திபாரத்துக்குத் தேவையான கற்களைப் பற்றி பார்க்கலாம்! இதற்கு ஆதாரமாக நாம் விசுவாச அதிகாரம் என்றழைக்கப்படும் எபிரேயர் 11 ம் அதிகாரத்தைப் பார்ப்போம். இந்த அதிகாரத்தில் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பு, மோசெ போன்ற விசுவாச கதாநாயகர்கள் பெயரே இடம் பெற்றிருக்கும் இடத்தில்,  இரண்டு பெண்கள் பெயரும் இடம்பெற்றுள்ளது! ஒன்று விசுவாசத்தின் தந்தையாகிய ஆபிரகாமின் மனைவி சாராளின் பெயர், மற்றொன்று நம்முடைய ராகாபின் பெயர்.

விசுவாசத்தினாலே ராகாப் என்னும் வேசி வேவுகாரரை சமாதானத்தோடே ஏற்றுக்கொண்டு , கீழ்ப்படியாதவர்களோடே கூடச் சேதமாகாதிருந்தாள். (எபி:11:31)

அதுமட்டுமல்ல இந்த அதிகாரத்தில் இடம் பெற்றிருப்பவர்கள் கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனமாகிய இஸ்ரவேல் மக்கள். ராகாப் என்கிற கானானிய ஸ்திரியோ விசுவாசத்தின் மேல் அஸ்திபாரம் போட்டவள்.

 ராகாப் போட்டிருந்த அஸ்திபாரத்தின் முதல் கல் என்ன என்று பார்ப்போம்! அவள் வேவுகாரரை நோக்கி யோசு 2: 2 ல், உங்கள் தேவனாகிய கர்த்தரே உயர வானத்திலும், கீழே பூமியிலும் தேவனானவர் என்றாள்.

இதை ஒரு நிமிடம் என்னோடு சிந்தியுங்கள்! எரிகோவில் வாழ்ந்து வந்த அத்தனைபேரும்தானே கர்த்தர் இஸ்ரவேல் மக்களை வனாந்தரத்தில் வழிநடத்தி வருவதைப்பற்றி கேள்விப்பட்டிருந்தார்கள்!  ஆனால் ராகாப் மட்டுமே அவரை விசுவாசித்தாள்! அந்தக் கர்த்தரைப் பற்றி அவளுக்கு எந்த ஞானமும் இருந்திருக்க முடியாது, ஆனாலும் இஸ்ரவேலை வழிநடத்தும் கர்த்தர் மகா பெரியவர் என்று விசுவாசித்தாள்!

நம் எல்லோருடைய வாழ்விலும் ஏதாவது ஒரு சமயத்தில் நமக்குள் விசுவாசம் இருக்கிறதா அல்லது இல்லையா என்ற கேள்வி எழலாம்! அதனால் தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு கடுகு அளவு விசுவாசம் இருந்தால் கூட பெரிய காரியத்தை சாதிக்கலாம் என்றார்.  நல்லவேளை கிறிஸ்து இயேசு நம்மிடம் நம் தகுதிக்கு ஏற்ற விசுவாசம் வேண்டும் என்றோ அல்லது அவர் செய்கிற அற்புதத்தின் அளவுக்கு தக்கபடி நமக்கு ‘போதுமான’ விசுவாசம் வேண்டும் என்றோ கூறவில்லை.

விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது. (எபி:11:1)

இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைப் பற்றி முற்றிலும் அறிந்து கொள்ளும் முன்னரே ராகாப் என்கிற வேசி, தான் கேள்விப்பட்டவைகளையும், தான் சந்தித்த மனிதரையும், பரத்திலிருந்து கொடுக்கப்பட்ட அடையாளமாக கொண்டு, காணப்படாதவைகளை விசுவாசித்தாள்.

உம்மை தரிசிக்கும் பரிசுத்தத்தை தாரும்!

உம் சத்தம் கேட்கும் தாழ்மையை தாரும்!

உம்மை சேவிக்கும் அன்பை தாரும்!

உம்மில் நிலைத்திருக்கும் விசுவாசத்தை தாரும்!

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

 

பின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும்.

ராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி!  இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். உங்கள் கருத்துகளைத் தவறாமல் எழுதுங்கள்!