Archive | September 16, 2011

மலர்: 2 இதழ்: 135 நீயும் சிறந்து விளங்குவாய்!

 

யோசுவா: 1: 9  நான் உனக்குக் கட்ளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார்..”

மோசே இஸ்ரவேல் மக்களை எகிப்திலிருந்து வழிநடத்த கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்ட தாசன். யாத்திராகமம் 3 ம் அதிகாரத்திலிருந்து உபாகமம் 34 ம் அதிகாரம் வரை வேதத்தில் மோசேயுடைய ஊழியத்தைபற்றிப் படிக்கிறோம்.  நீண்ட காலம் தலைவராயிருந்த மோசேயை இழந்ததும் மக்கள் துக்கமடைந்தனர். இன்னும் வனாந்தரத்தை தாண்டவில்லை! யோர்தானைக் கடக்க வேண்டும்! எதிரிகளை முறியடிக்கவேண்டும்! கானானை சுதந்தரிக்க வேண்டும்! அதற்குள் மோசே எடுத்துக்கொள்ளப் பட்டதும் ஒரு கணம் அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகள் போல பரிதபித்தனர். ஆனால் கர்த்தரோ அவர்களைக் கைவிடவில்லை. கர்த்தர் யோசுவாவை ஆயத்தம் பண்ணியிருந்தார்.

நாம் இன்றிலிருந்து யோசுவா புத்தகத்தை படிக்க ஆரம்பிக்கப் போகிறோம். அதற்கு முன்னால் இன்று இந்த யோசுவா யார்? என்று சற்று ஆராய்வோம்!

யோசுவா என்னும் பெயருக்கு எபிரேய மொழியில் ‘ யெகோவாவே இரட்சகர்’ என்ற அர்த்தம் உண்டு. அவன் இளம் பிராயத்திலேயே கர்த்தருடைய இரட்சிப்பை கிருபையாய் அடைந்தவன். எகிப்தின் அடிமைத்தனத்தில் பிறந்த அவன் எப்பிராயீம் கோத்திரத்தை சேர்ந்த நூனின் தலைப் பிள்ளை. எகிப்தில் தலைப்பிள்ளைகள் சங்காரம் பண்ணப்பட்ட இராத்திரியிலே கர்த்தருடைய துதனாவர் கடந்து வந்த போது, நூனின் வீட்டுவாசலில் ஆட்டுக் குட்டியின் இரத்தம் இருந்ததால் அவனுடைய தலைப் பிள்ளையாகிய யோசுவா இரட்சிக்கபட்டான்!

தன்னுடைய வாலிப வயதிலேயே கர்த்தரை விசுவாசித்தவன். அவன் மோசே மூலமாய் கர்த்தர் செய்த அற்புதங்களையெல்லாம் கண்களால் கண்டவன். செங்கடல் பிளந்தபோது அதன் வழியாய்க் கடந்து வந்தவன். விசுவாசம் அவனுக்குள் வேரூன்றியிருந்தது.

யாத்தி:17:13 ல் யோசுவாவை ஒரு நல்ல போர்ச்சேவகனாகப் பார்க்கிறோம். ஒரு சேனைத் தலைவனாக அவன் அமலேக்கியரோடு போராடி வெற்றி பெற்றான். ஒரு சேனையை யுத்தத்தில் நடத்தும் திறமையும், பட்டயத்தை உபயோகப்படுத்தும் பயிற்சியும் எங்கிருந்து வந்தது யோசுவாவுக்கு? ஒருவேளை அவன் எகிப்தில் யுத்த வீரனுக்கான பயிற்சி பெற்றிருக்கலாம். மோசே தன்னுடைய மக்களுக்காக பார்வோனின் அரண்மனையை விட்டுக்கொடுத்தது போல ஒருவேளை யோசுவாவும் எகிப்தின் சேனையில் பதவியேற்காமல் தன் ஜனங்களோடு புறப்பட்டு வந்திருக்கலாம் என்ற யூகம் உள்ளது! யோசுவா எதிரிகளை எதிர்த்து போராடும் மனத்தைரியம் கொண்டவனாக இருந்தான்.

யாத்திராகமம் 24 ம் அதிகாரம் 13ம் வசனத்தில் நாம் யோசுவாவை மோசேயுடைய ஊழியக்காரன் என்று வாசிக்கிறோம். இஸ்ரவேலின் தலைவனான மோசேக்கு அவன் ஊழியம் செய்தான். நாற்பது வருட வனாந்தர நாட்களில் இஸ்ரவேலின் பாளயத்துக்கு வெளியே மோசே தனியாக ஒரு கூடாரம் அமைத்து அதில் கர்த்தரோடு பேசுவது வழக்கம்(யாத்தி:33:7-11). அப்படியாக மோசே சென்றபோதெல்லாம் ஊழியக்காரனான யோசுவா கூடாரத்துக்கு வெளியே தங்கியிருப்பான். அவன் ஒரு நல்ல போர்ச்சேவகன் மட்டும் அல்ல, கர்த்தருடைய பிரசன்னத்தையும் அவருடைய மகிமையையும் உணர்ந்தவன்!

எண்ணாகமம் 13 ம் அதிகாரத்தில் யோசுவா கானானை வேவு பார்க்க காலேபோடும் இன்னும் பத்து பேரோடும் சேர்ந்து மோசேயால் அனுப்பப்படுவதைப் பார்க்கிறோம். மற்ற பத்துபேரும் அங்குள்ள சூழ்நிலைகளைக் கண்டு பயந்து மக்களைப் பயப்படுத்தியபோது யோசுவாவும், காலேபும் சுற்றியுள்ள சூழ்நிலைகள் தங்கள் விசுவாசத்தை மேற்கொள்ளாமல் தைரியமாக நாம் கானானை சுதந்தரிப்போம் என்றனர்! இஸ்ரவேல் மக்கள் விசுவாசிக்காததால் இன்னும் நாற்பது வருடங்கள் வனாந்தரத்தில் அலைய வேண்டியிருந்தபோதிலும், அவர்களுடைய தலைமுறையினர் எல்லோரும் வனாந்தரத்தில் மரித்தபோதிலும் யோசுவாவும் காலேபும் தாங்கள் கானானை சுதந்தரிப்போம் என்ற விசுவாசத்தில் தளரவேயில்லை.

உபாகமம் 34: 9 ல் யோசுவா ஞானத்தின் ஆவியினால் நிறையப்பட்டான் என்று பார்க்கிறோம். கர்த்தருடைய ஊழியத்தை செய்ய தேவையான உதவி நமக்கு பரத்திலிருந்து அருளப்படுகிறது என்பதற்கு யோசுவாவே உதாரணம்!

கர்த்தர் யோசுவாவை தெரிந்து கொண்டு அவனை தன்னுடைய ஊழியத்துக்காக ஆயத்தப்படுத்தியிருந்தார். மோசேயைப் போல யோசுவாவும் ஒரு சாதாரண மனிதனாகப் சில தவறுகளை செய்தாலும் அவன் கர்த்தரால் தெரிந்து கொள்ளப்பட்ட ஒரு தலைவனாக சிறந்து விளங்கியதின் இரகசியம் என்ன? அவன் கர்த்தருடைய வார்த்தையின் மேல் வைத்திருந்த அசைக்கமுடியாத நம்பிக்கை!

யோசுவாவிடம் இருந்த குணநலன்கள் நம்மிடம் உள்ளதா? இரட்சிப்பின் அனுபவம் உள்ளதா? கர்த்தர் மேல் விசுவாசம் வேரூன்றியிருக்கிறதா? ஒரு நல்ல போர்ச்சேவகனாக கர்த்தருடைய வார்த்தை என்னும் பட்டயத்தைக் கொண்டு எதிரியாகிய சாத்தானை எதிர்த்து போராடும் திறமை உள்ளதா? ஊழிய மனப்பான்மை உள்ளதா? சூழ்நிலைகளைக் கண்டு தளராத தைரியம் உள்ளதா? ஆவியானவரால் நிரப்பப்பட்டிருக்கிறீர்களா? எல்லாவற்றுக்கும் மேலாக கர்த்தருடைய வார்த்தைகளில் அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளதா? இவையே ஒரு சிறந்த கிறிஸ்தவ தலைமைத்துவத்தின்  அடையாளங்கள்!

இவை நம்மில் காணப்படுமானால் கர்த்தர் நம்மையும் நமக்கு கொடுத்திருக்கிற பொறுப்புகளில் சிறந்து விளங்க செய்வார்! நீயும் தெரிந்து கொள்ளப்பட்டிருக்கிறாய்!

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

 

பின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும்.

ராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி!  இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். உங்கள் கருத்துகளைத் தவறாமல் எழுதுங்கள்!