Archive | September 29, 2011

மலர்: 2 இதழ்: 144 என் மனமே ஏன் எனக்குள் தியங்குகிறாய்?

  எபி:11:31 “விசுவாசத்தினாலே ராகாப் என்னும் வேசி வேவுகாரரை சமாதானத்தோடே ஏற்றுக்கொண்டு, கீழ்ப்படியாதவர்களோடே கூடச் சேதமாகாதிருந்தாள்.”

நாம் ராகாபுடைய வாழ்க்கையிலிருந்து, நம்முடைய வாழ்வின் அஸ்திபாரக் கற்களைப் பற்றி படித்துக் கொண்டிருக்கிறொம்! அஸ்திபாரத்திற்கு விசுவாசம் என்னும் ஆரம்பம் ஒரு அஸ்திபாரக் கல் என்றால்,  விசுவாசத்தின் மூலம் கர்த்தரைப் பற்றிய வெளிப்படுத்துதலை பெற்றுக்கொள்ளுதல் அதற்கு தேவையான இன்னொரு கல் என்றும், பாதுகாக்கப் படுதல் நம்முடைய வாழ்வின் அஸ்திபாரத்துக்கு தேவையான மற்றொரு கல் என்றும் பார்த்தோம். அஸ்திபாரக் கற்களில், அடுத்த கல் உலகத்தை மறுதலித்தல் என்று நேற்று பார்த்தோம். இன்று அவளுடைய விசுவாச வாழ்க்கையின் அஸ்திபாரத்துக்கு நம்பிக்கை என்பது அடுத்த கல் என்று பார்க்கிறோம்!

 ராகாப் இஸ்ரவேலின் கர்த்தரைப் பற்றிக் கேள்விப்பட்டாள். அவர் சிவந்த சமுத்திரத்தை இரண்டாய் பிளந்ததையும், தம் மக்களை வழிநடத்தியதையும், பார்வோனின் சேனையை கடலில் மூழ்கப்பண்ணினதையும், இஸ்ரவேலை வனாந்தரத்தில் மன்னா மூலம் போஷித்ததையும், அவர்கள் எமோரியரின் சேனையை முறியடித்ததையும் கேள்விப்பட்டிருந்தாள். இப்பொழுது இஸ்ரவேலின் வேவுகாரர் இருவரும் எரிகோவுக்குள் வந்ததும், கர்த்தர் அவர்களுக்கு தேசத்தைக் கொடுத்தாரென்ற பயம் வந்து விட்டது. சந்தேகமில்லாமல் அவள் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரே உண்மையான தேவன் என்று விசுவாசித்தாள்.

ஆனால் நம்மில் பலரைப் போல அவள் உள்ளத்தில் சிறு எண்ணம்! எப்படி இவர்களை நம்புவது?

என்னுடைய தோட்டத்தில் ஒருசெடியைப் பார்த்தேன். அது வேர்க்கடலை செடி போலவே இருந்தது! ஆனாலும் சந்தேகம்! ஒவ்வொரு நாளும் அதைப் பார்ப்பேன், அது கடலையா அல்லது காட்டு செடியா? என்று! பல நாட்கள் பராமரித்துவிட்டு கடைசியில் அது காட்டு செடியாக இருந்தால் என்ன செய்வது? இதே செடி என்னால் விதைக்கப்பட்டு முளைத்திருந்தால் எனக்கு பிரச்சனையே இருந்திருக்காது! சந்தோஷமாக அதன் வளர்ச்சியைப் பார்த்துக்கொண்டு அது பூமிக்கு அடியிலே என் கண் காணாத இடத்திலே எனக்காக கனி கொடுக்கிறது என்று பொறுமையோடு இருந்திருப்பேன் அல்லவா?

அப்படித்தான் ராகாபின் உள்ளமும் எண்ணியது! இந்த வேவுகாரர் கடலைச் செடியா? அல்லது காட்டுச் செடியா? எப்படி நம்புவது!

ஒன்றும் புரியாமல் ராகாப் அவர்களைப்பார்த்து ”உங்கள் கர்த்தரே உயர வானத்திலும், கீழே பூமியிலும் தேவனானவர்,.. என் தகப்பன் குடும்பத்துக்கு தயவு செய்வோம் என்று கர்த்தர்பேரில் எனக்கு ஆணையிட்டுக் கொடுங்கள்” என்கிறாள். (யோசு: 2:11,12) இதை வாசிக்கும்போது ராகாப் வேவுகாரரை அல்ல, அவள் கர்த்தரை அறிந்ததால் அவரையே திடமாய் நம்பினாள் என்ற உண்மை எனக்கு தெளிவாகப் புரிந்தது. அவளுடைய விசுவாச வாழ்க்கையின் அஸ்திபாரம், வானத்தையும், பூமியையும் ஆளும் தேவனாகிய கர்த்தரே தன் வாழ்வையும் ஆளுகை செய்பவர் என்ற நம்பிக்கைதான்!

இன்று நம்முடைய வாழ்க்கையை நம்மால் கட்டுப்படுத்த முடியுமா? எத்தனையோ காரியங்கள் நம்முடைய கட்டுப்பாட்டை மீறி நடக்கின்றன! நாம் நினைப்பதெல்லாம் நடப்பதேயில்லை! ஆனால் நம் வாழ்க்கை நம்முடைய தேவனாகிய கர்த்தரின் கரத்தில், அவருடைய உள்ளங்கைகளில் உள்ளது என்பதை நாம் உறுதியாக நம்பும்போது நாம் எதற்கும் கலங்க வேண்டிய அவசியமில்லை! அவரே நம்மை ஆளுபவர்!

என் மனமே ஏன் எனக்குள் தியங்குகிறாய்? ஏன் எனக்குள் கலங்குகிறாய்? ஏன் இந்த தவிப்பு? ஏன் இந்த பயம்? இருளைப்போக்க வரும் சூரியனைப் போல கர்த்தர் உன்பக்கம் இருக்கிறார்! இயேசுவுக்கு அன்பான சீஷனாகிய யோவான் அவருடைய மார்பில் சாய்ந்திருந்ததைப் போல அவர்மேல் சாய்ந்திருந்து வாழ்க்கை என்னும் பிரயாணத்தை தொடரு! உன்னுடய முழு பாரத்தையும் அவர்மேல் இரக்கிவிடு!

நீ அவர் கரத்தை பிடித்து நடக்க முயற்சிக்காதே! வழுவி விடுவாய்! அவர் உன் கரத்தை பிடித்து வழிநடத்த அனுமதி! கரம் பிடித்து நடத்தும் வேலையை அவர் செய்யட்டும்! அவரை முற்றிலும் நம்புவதை மாத்திரம் நீ செய்! உன்னை நிச்சயம் அக்கரை சேர்ப்பார்!

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

 

பின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும்.

ராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி!  இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். உங்கள் கருத்துகளைத் தவறாமல் எழுதுங்கள்!

 

 

Advertisements