Archive | September 30, 2011

மலர்: 2 இதழ்: 145 ராகாப் நம் வீட்டுக்குள் பிரவேசிக்க முடியுமா?

 யோசுவா: 6:23 அப்பொழுது வேவுகாரரான அந்த வாலிபர் உள்ளே போய்  ராகாபையும், அவள் தகப்பனையும், அவள் தாயையும், சகோதர்களையும், அவளுக்குள்ள யாவையையும், அவள் குடும்பத்தார் அனைவரையும் வெளியே அழைத்துக்கொண்டுவந்து அவர்களை இஸ்ரவேல் பாளயத்துக்கு புறம்பே இருக்கும்படி பண்ணினார்கள்.

தன்னுடைய வாழ்வின் அஸ்திபாரத்தை கர்த்தர்மேல் உறுதியாகப் போட்ட ராகாப், வேவுகாரர் அவ்விடம்விட்டு போன பின்னர் அமைதியாக கவனித்து வந்தாள். இஸ்ரவேலர் ஆறு நாட்கள் எரிகோவை சுற்றிவந்தபோது அவள் என்ன நினைத்திருப்பாள்? ஏழாவது நாள் அவர்கள் ஏழுதரம் எரிகோவை சுற்றி வந்து ஏழாவதுதரம் எக்காளம் ஊதி ஆர்ப்பரித்தபோது அவள் மனநிலை எப்படியிருந்திருக்கும்?

எத்தனைமுறை விசுவாசிகளாகிய நாமும் செய்வதறியாது இப்படி அமைதியாக நம்மை சுற்றி நடப்பவைகளை கைக்கட்டி பார்த்துக்கொண்டிருக்கவேண்டிய சூழ்நிலைகள் வருகின்றன! அப்படிப்பட்ட சமயத்தில் நம் விசுவாசம் தடுமாறுகிறதா அல்லது ராகாபைப்போல் உறுதியாய் இருக்கிறதா?

ராகாபின் விசுவாசம் உறுதியாய் இருந்ததற்கு காரணம் அவள், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் மேல் விசுவாசம் என்னும் ஆரம்பக்  கல்லையும், விசுவாசத்தின் மூலம் கர்த்தரைப் பற்றிய வெளிப்படுத்துதலை பெற்றுக்கொள்ளுதல் , பாதுகாக்கப் படுதல், உலகத்தை மறுதலித்தல், நம்பிக்கை என்ற கற்களை உபயோகப்படுத்தி தன் அஸ்திபாரத்தை உறுதியாய்ப் போட்டதினால்தான்!

கர்த்தர் தம் பிள்ளையான ராகாபை நேசித்ததால் அவளை எரிகோவிலிருந்து பிடுங்கி, அவளைத் தமக்கு சொந்தமான ஜனமாகும்படி செய்தார்.

ஒரு புறஜாதியான பெண்ணாய், கர்த்தரை அறியாத தேசத்தில் பிறந்து வளர்ந்தாலும் கர்த்தரைப் பற்றும் விசுவாசத்தில் உறுதியாய் இருந்த ராகாபை இஸ்ரவேல் மக்கள் எப்படி நடத்தினர் என்று அறிய என் உள்ளத்தில் ஒரு ஆர்வம் எழுந்தது.

நாம் வாசிக்கிற இந்த வேதபகுதி நமக்கு அதை தெளிவாகக்காட்டுகிறது! அவர்களை (ராகாபின் குடும்பத்தை)  இஸ்ரவேல் பாளயத்துக்கு புறம்பே இருக்கும்படி பண்ணினார்கள். பாளயத்துக்கு புறம்பே என்ற வார்த்தையை படித்தவுடன் எனக்கு என்னுடைய் கிராமம் தான் ஞாபகம் வந்தது.

நான் சென்னையில் வளர்ந்தாலும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள என்னுடைய சொந்த கிராமத்துக்கு அடிக்கடி போயிருக்கிறேன். எங்கள் ஊரில், ஊருக்கு துணி துவைப்பவர்களின் குடும்பமும், ஊர் ஜனத்துக்கு முடி வெட்டுபவர்களின் குடும்பமும் மாத்திரம் ஊரைவிட்டு வெளியே கால்வாய் ஓரத்தில் குடியிருக்கிறார்கள். அவர்கள் நம்மைவிட குறைவானவர்கள் ஆதலால் அவர்களை ஊருக்கு வெளியே இருக்கவேண்டும் என்ற எண்ணம்தான் இதற்கு காரணம்!

இங்கு இஸ்ரவேல் மக்கள் ராகாபையும், அவள் குடும்பத்தையும் பாளயத்துக்கு வெளியே தங்க வைத்தனர் என்று பார்க்கிறோம்! அவள் நம்மைவிடக் குறைவு பட்டவள் என்ற எண்ணம்! ராகாப் எந்தவிதத்தில் குறைவு பட்டிருந்தாள்?

மோசே சீனாய் மலையிலிருந்து வரத்தாமதித்தவுடன் பொன் குன்றுக்குட்டியை வார்ப்பித்து தேவன் என்று வழிபட்டார்களே அந்த இஸ்ரவேலரைவிட குறைவு பட்டவளா?

கானானுக்குள் நுழைந்தவுடன் அங்கிருந்த மக்களின் உருவத்தைப் பார்த்து பயந்து நம்மால் கானானை சுதந்தரிக்க முடியாது என்று மோசேயிடம் வந்து அழுதார்களே அந்த இஸ்ரவேலரைவிடவா?

மன்னியுங்கள்! அங்கிருந்த இஸ்ரவேலரில் அநேகரை விட அவள் கர்த்தரை அதிகமாக அறிந்திருந்தாள், அவரை உறுதியாக விசுவாசித்தாள்! வானத்தையும் பூமியையும் படைத்தவரையும், சிவந்த சமுத்திரத்தை பிளந்தவரையும், எமோரியரின் ராஜாவை முறியடித்தவரையும் அவள் அறிந்திருந்தது மட்டும் அல்ல அவருக்காக அவள் எரிகோவின் ராஜாவிடம் தன் உயிரையும் பணயம் வைத்து இஸ்ரவேலின் வேவுகாரரின் உயிரைக் காப்பாற்றினாள்.

அப்படிப்பட்டவள் இஸ்ரவேலின் பாளயத்துக்குள் சேர்க்கப்படவில்லை!

எத்தனைமுறை நீங்களும் நானும் இப்படிப்பட்ட காரியத்தை செய்கிறோம்? ஒருவேளை ராகாப் என்னுடைய வீட்டுக்குள் பிரவேசிக்க முயன்றிருந்தால் அவளை நான் ஏற்றுக்கொண்டிருந்திருப்பேனா? அதெப்படி முடியும்? அவள் நம்மில் ஒருத்தி இல்லை அல்லவா? நம்மைவிட குறைவு பட்டவள், என்று நாம் நினைக்கலாம்! ஆம்! நம்மில் ஒருத்தி இல்லை! நம்மைவிட அதிகமாய் அவளுடைய பரம பிதாவின் சாயலைத் தரித்தவள்!

நாம் ஒருவரையொருவர் உயர்ந்தவர் தாழ்ந்தவர், நல்லவர் கெட்டவர் என்று நியாயம் தீர்த்துக்கொண்டிருந்தால் நமக்கு அவர்களை நேசிக்க நேரமிருக்காது!  என்று அன்னை தெரேசா கூறியிருக்கிறார்.

நாம் கர்த்தருடைய அன்பையும் ஆசிர்வாதத்தையும்  நம்மிடம் தேக்கி வைக்கும் நீர்த்தேக்கம் போன்றவர்களாய் இருக்கக்கூடாது! கர்த்தருடைய அன்பை மற்றவர்கள் பெற்று அனுபவிக்க உதவும் ஆசிர்வாதத்தின் கால்வாய்களாக இருக்கவேண்டும்!

 

நேசிக்கக்கூடாத அவலநிலையில் வாழ்ந்து கொண்டிருந்த என்னை நீர் நேசித்தீர் ஐயா!

நீர் என்னை நேசித்தவிதமாய் நான் மற்றவர்களை நேசிக்க எனக்குள் உம் நேசத்தை தாரும் ஐயா!

 

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்