Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

மலர் 6 இதழ் 340 துரோகியை மன்னிப்பது எப்படி?

ஆதி:44: 18 “ அப்பொழுது யூதா அவனண்டையிலே சேர்ந்து, ஆ என் ஆண்டவனே , உமது அடியேன் உமது செவிகள் கேட்க ஒரு வார்த்தை சொல்லுகிறேன் கேட்பீராக;  அடியேன் மேல் உமது கோபம் மூளாதிருப்பதாக; நீர் பார்வோனுக்கு ஒப்பாயிருக்கிறீர்

இன்று நாம் யோசேப்பின் வாழ்விலிருந்து இன்னுமொரு காரியத்தை கற்று கொள்ளப் போகிறோம்! அதற்கு முன்னால் ஒரே ஒரு கேள்வி!

உங்கள் வாழ்வில் யாரையாவது பார்த்து, ஏன் ஒருவேளை  உங்கள் உறவினரை பார்த்து, நாளுக்கு நாள் அவர்கள் பேசும் கொடிய வார்த்தைகளைக் கேட்டு இவர்களை கடவுள் மன்னிக்கவே மாட்டார் என்று கசப்போடு எண்ணியிருக்கிரீர்களா? சிலர் செய்வதும், பேசுவதும் கத்தியால் குத்துவது போல இருக்கும், ஆனால் தாங்கள் தான் பரிசுத்தவான்கள் என்ற நினைப்பில் இருப்பார்கள்!

 
நாம் சில நாட்களுக்கு முன் படித்த யூதாவை சற்று நினைவு கொள்வோம்! ஞாபகம் இருக்கிறதா யார் அவன் என்று? என்னுடைய அம்மா ஒரு பழமொழி சொல்லுவார்கள்! ‘பக்தியான பூனை ஒன்று பரலோகம் போகும்போது நெத்திலி கருவாட்டை ஒளித்துக்கொண்டு சென்றதாம் என்று’. தன் மருமகளை அவமதித்தவன்…… யாரும் பார்க்காத வேளையில் வேசியை தேடி சென்றவன்…….பின்னர் தன் விதவை மருமகள் கர்ப்பம்தரித்திருக்கிறாள் என்று கேள்விப்பட்டவுடன், பரிசுத்தவான் போல அவளை சுட்டெரிக்க வேண்டும் என்று சொன்னவன்….தான் அந்தக் குழந்தையின் தகப்பன் என்று அறிந்தவுடன் வாயை மூடிக் கொண்டவன்…..

இவை யாவற்றுக்கும் மேலாய் அவனுடைய பரிசுத்தமான வாழ்க்கையில் இன்னுமொரு நெத்திலியாக இருந்தது, அவன் யோசேப்பை இஸ்மவேலரிடம் விலைக்கு விற்று போட்டது. ஆதி: 37: 26 “யூதா தன் சகோதரரை நோக்கி, நாம் நம் சகோதரனைக் கொன்று அவன் இரத்தத்தை மறைப்பதினால் லாபம் என்ன? அவனை இஸ்மவேலருக்கு விற்று போடுவோம் வாருங்கள்.. என்பதைப் பார்க்கிறோம்.

யோசேப்பு பதினேழு வயது சிறுவன், அவனை விற்றுப் போடலாம் என்று யூதா எண்ணுகிறான்! ஏன் அவனை உண்மையிலேயே காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்திலா? இல்லை!  20 வெள்ளிக் காசுக்காகவே! பத்து சகோதரருக்கும், ஆளுக்கு  இரண்டு காசுகள் வீதம் கிடைக்குமல்லவா? எப்படி எண்ணம் பாருங்கள்! இவனை கொன்றால் நமக்கு என்ன லாபம்? இவனை விற்றால் நமக்கு கொஞ்சம் பணமாவது கிடைக்குமே! என்ற மோசமான எண்ணத்தில் வந்ததுதான் இந்த தூண்டுதல்.

இப்பொழுது 23 வருடங்களுக்கு பின்னர் எகிப்தின் அதிபதியான யோசேப்பின் முன்னால் நிற்கிறான் இந்த யூதா. யோசேப்பின் கண்கள் முன்னால் படம் போல வருகிறது அன்று நடந்த அபரீதமான சம்பவம், இவனைக் கொல்லுவதால் நமக்கு என்ன லாபம், விற்றுப் போடுவோம் என்று யூதா கூறியது காதுகளில் ஒலிக்கிறது. கசப்பான நினைவு ! மறக்கமுடியாத ஒரு வலி!  நான் ஒருவேளை யோசேப்பின் இருக்கையில் இருந்திருந்தால் அந்த துரோகியைக் கண்டவுடன் என் இரத்தக் கொதிப்பு ஏறிப்போயிருக்கும்.

ஆனால் யூதா பேச ஆரம்பித்தவுடன், (ஆதி: 44: 33, 34) அவன் குரலில் தம்பி பென்யமீனைக் காப்பாற்ற உண்மையான ஆவல் தெரிகிறது! பென்யமீனைக் கொண்டு செல்லாவிட்டால் தன் தகப்பனுக்கு தீங்கு நேரிடும் என்று அவன் பயத்தோடு கெஞ்சுவதை உணர்கிறோம். என்ன வித்தியாசம் நாம் அன்று கண்ட யூதாவுக்கும், இன்று யோசேப்பின் முன்  நிற்கின்ற யூதாவுக்கும்! அன்று நான், எனக்கு என்று சுயநலமாய் வாழ்ந்தவன், இன்று தன் தகப்பனுக்காய், தன் இளைய சகோதரனுக்காய் தன் ஜீவனை பணயம் வைத்து பேசுகிறதைப் பார்க்கிறோம்! இத்தனை மாறுதல் எப்படி  வந்தது? யூதா மனந்திருந்தி தேவனிடம் மன்னிப்பு பெற்றானோ?

யோசேப்பு யூதாவின் குரலில் இருந்த மாற்றத்தைக் கண்டான். தன்னை இஸ்மவேலருக்கு விற்றுப் போட்ட யூதாவை உடனே மன்னிக்கிறான்! எப்படிப்பட்ட மன்னிப்பு? நீ மனம் மாறிவிட்டதை நான் உணர வேண்டும் என்று கண்டிப்பு போட்டானா? அல்லது நான் உன்னை விட பரிசுத்தமானவன், நீ ஏன் சமுகத்தில் நிற்க தகுதியானவன் அல்ல என்ற பெருமை இருந்ததா? அல்லது அவனுடைய பழைய பாவங்களை நினைவுபடுத்தி ‘நீ குத்திய புண் இன்னும் ஆறவில்லை’ என்று குற்றம் சாட்டினானா? அல்லது அவனுடைய முதுகுக்கு பின்னால் அவனைப் பற்றி பேசினானா? எதுவுமே இல்லை! வெறும் மன்னிப்பு என்ற ஒரே வார்த்தையில் யூதாவின் பாவங்கள் கரைந்தோடின!

கர்த்தராகிய கிறிஸ்து இயேசு நம்முடைய பாவங்களை மன்னிக்கும்போது, நம்முடைய பாவங்களை மறந்து போகிறார் என்று வேதம் சொல்லுகிறது. பாவியாகிய நாம் மனந்திருந்தி அவருடைய சமூகத்துக்கு வரும் போது, கர்த்தர் நம்மைப் பார்த்து, சரி சரி , கையும் மெய்யுமாய் மாட்டிக் கொண்டதால் மனந்திருந்தினாய்! இன்னும் சில வருடங்கள் நல்லவனாய் வாழ்ந்து காட்டு பின்னர் மன்னிப்பதைக் குறித்து யோசிக்கிறேன் என்று சொல்லுகிறாரா?  இல்லை! அளவிட முடியாத கிருபையால் நம்மை மன்னித்து கிழக்குக்கும் மேற்குக்கும் எவ்வளவு தூரமோ அவ்வளவாய் நம் பாவங்களை விலக்குகிறார்.

இப்படிப்பட்ட மகா மேன்மையான குணத்தை  யோசேப்பின் வாழ்வில் காண்கிறோம்! நம் வாழ்வில் தீங்கு இழைத்தவர்களை நாம் எப்படிப் பார்க்கிறோம்? நம்மால் மன்னிக்க முடிகிறதா? உன்னுடைய அண்டை வீட்டுக்காரர் உனக்கு விரோதமாய் செய்த தவறுகளை மன்னித்து விட்டாயா? உன்னுடைய உறவினர் உனக்கு விரோதமாய் செய்தவையை, இயேசு கிறிஸ்து உன் பாவங்களை மன்னித்து மறந்தது போல மன்னித்து விட்டாயா?

நீ கசப்பான நினைவுகளோடு, மறக்கமுடியாத வலியோடு , மன்னிக்கவே முடியாது என்று வெறுக்கிற உன் உறவினர் ஒருவர் ஒருவேளை மனந்திருந்தியிருந்தால் கிருபையே உருவான நம் தேவன் மன்னித்து, மறந்து விட்ட பாவங்களை மன்னியாமல் இருப்பதற்கு நீ யார்? மன்னிப்பது நம்முடைய தேவனின் குணம்!

கர்த்தருடைய வார்த்தை உங்களை ஆசீர்வதிக்கட்டும்!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment