Archive | July 4, 2016

மலர் 6 இதழ்: 424 தன் குடும்பத்தை இரட்சித்த ராகாப்!

யோசுவா: 6: 25 எரிகோவை வேவுபார்க்க யோசுவா அனுப்பின ஆட்களை ராகாப் என்னும் வேசி மறைத்து வைத்தபடியினால் அவளையும் அவள் தகப்பன் வீட்டாரையும் அவளுக்குள்ள யாவையும் யோசுவா உயிரோடே வைத்தான்.”

நமக்கு முன்னே பின்னே தெரியாத இரண்டு பேர் நம் வீட்டுக்குள் வந்து இந்தப் பட்டணம் அழியப்போகிறது, அதில் வாழ்கிற அத்தனைபேரும் அழிந்து போவார்கள் என்றால் நாம் என்ன செய்வோம். உடனே நம் மனதில் என்ன தோன்றும்! ஐயோ என் தம்பி குடும்பத்துக்கு இதை உடனே தெரியப்படுத்த வேண்டும்!, தங்கை குடும்பம் ஒரு இருபது மைல் தொலைவில் இருக்கிறார்களே அவர்களுக்கு உடனே சொல்ல வேண்டும்! அம்மா அப்பாவை உடனே நம்மிடம் கூட்டிக்கொண்டு வந்து விட வேண்டும்! என்றுதானே மனம் பதைக்கும்!

இஸ்ரவேல் மக்கள் சீனாய் வனாந்தரத்தைக் கடந்து, கானானின் எல்லைகளை அடைந்தவுடன் ராகாபின் வயிறு பிசைய ஆரம்பித்தது! எத்தனையோ நாட்கள் மன அழுத்தங்களால் இராத்திரி முழுவதும் தூங்காமல் புரண்டு புரண்டு படுத்துவிட்டு காலையில் ஜீரண மாத்திரை சாப்பிடுவோமல்லவா அப்படிப்பட்ட அனுபவம் தான் ராகாபுக்கும்.

அவள் கானானை நோக்கி வந்து கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான இஸ்ரவேல் மக்களைக்குறித்து அவள் கவலைப்பட வில்லை! அவர்களை வழிநடத்திக் கொண்டு வரும் தேவனாகிய கர்த்தருக்கு பயந்தாள்! அவரைப்பற்றிய பயமும், விசுவாசமும் அவளுக்குள் வளர வளர அவளால் அமைதியாக இருக்கமுடியவில்லை. தன்னுடைய குடும்பத்தாருக்கு அவரைப்பற்றி கூற ஆரம்பித்தாள்.  இஸ்ரவேலர் எரிகோவண்டை வந்து சேருமுன்னர் ராகாப் தன் குடும்பத்தாருக்கும், தன் நண்பர்களுக்கும் சுவிசேஷத்தை கூறி அவர்களை தன்னண்டை கூட்டி சேர்த்து விட்டாள்! (யோசு:6:23) எரிகோ பட்டணம் அக்கினியால் சுட்டெரிக்கப்படுமுன்னர் அவள் தகப்பனும், அவள் தாயும், அவள் சகோதர்களும், அவள் குடும்பத்தார் யாவரும் இரட்சிக்கப்பட்டார்கள் என்று படிக்கிறோம்.

இதேவிதமாக சோதோம், கொமொரா என்ற பட்டணங்கள் தேவ தூதரால் சுட்டெரிக்கப்பட்டது ஞாபகம் உள்ளதா? அங்கே லோத்தின் மருமக்கள் லோத்தின் வார்த்தையைக் கேட்டு நகைத்தார்கள். கர்த்தர் லோத்தின் மீது இரக்கம் காட்டியதால் அவனையும்,அவன் மனைவியையும், இரு மகள்களையும் கைகளைப் பிடித்து இழுத்து வந்து வெளியே விட்டனர். அவர்கள் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட ஆபிரகாமின் குடும்பத்தார்!!

இங்கே ஒரு கானானிய ஸ்திரி, ராகாப் என்னும் வேசி, கர்த்தரை தன் முழுமனதோடு விசுவாசித்ததால் தான் எரிகோவின் அக்கிரமங்களிலிருந்து வெளியே வந்தது மட்டுமல்ல தன் முழு குடும்பத்தாரையும் வெளியே கொண்டு வந்தாள்.

அவள் முழு குடும்பமும் இரட்சிக்கப்பட்டது! என் மனதைத் தொட்ட வேதபகுதி இது! இதன் மூலம் ராகாப் எப்படிப்பட்டவள் என்று நாம் அறிந்து கொள்ள முடிகிறது அல்லவா?

 “ ராகாபால் தன் தகப்பனையும் தாயையும் எரிகோவில் விட்டு செல்ல முடியவில்லை, அதனால் அவள் இஸ்ரவேலின் தேவனிடம் ஒன்றை மாத்திரம் கேட்கிறாள், அது அவள் வீட்டுக்குள் அடைகலம் புகும் அவள் குடும்பத்தார் அனைவருக்கும் இரட்சிப்பு கிடைக்க வேண்டும்.” என்று இதைப்பற்றி எழுதும்போது சார்லஸ் ஸ்பர்ஜன் அவர்கள் கூறுயிருக்கிறார்.

நம்மில் எத்தனை பேருக்கு நம் குடும்பத்தின் இரட்சிப்பைக் குறித்த பாரம் உள்ளது? உன் குடும்பம் உன்னால் இரட்சிப்பு என்னும் ஆசீர்வாதத்தைப் பெற்றிருக்கிறார்களா? உன் குடும்பம் உன் பார்வையில் எவ்வளவு முக்கியம்? இன்று கர்த்தருடைய நாள் வருமானால் உன் குடும்பத்தை பின்னால் விட்டு விட்டு நீ தனியே கானானுக்குள் பிரவேசிப்பாயா அல்லது உன் முழு குடும்பமும் உன்னோடு கானானுக்குள் வருவார்களா? உன் குடும்பத்துக்கு சுவிசேஷத்தை கூறுவதை அலட்சியமாக எண்ணுகிறாயா? அல்லது உன் குடும்பத்தின் இரட்சிப்புக்காக ஒவ்வொருநாளும் ஜெபிக்கிறாயா?

ராகாபைப்போல நாம் நம் குடும்பத்தில் உள்ள யாவருக்கும் சாட்சியாக மாறும்போது, பரம பிதாவானவர் ராகாபின் குடும்பத்தார் யாவரையும் எரிகோவிலிருந்து இரட்சித்தது போல நம் குடும்பத்தையும் இரட்சித்து காப்பாற்றுவார்!

நம்மில் ஒருசிலர் தூர தேசத்தில் விளக்கு ஸ்தம்பமாக பிரகாசிப்பது கர்த்தருடைய சித்தமாயிருக்கலாம்! ஆனால் நம்மில் அநேகர் நம் வீட்டில், நம் குடும்பத்தில் விளக்காய் பிரகாசிப்பதே கர்த்தருடைய திரு சித்தம்!

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்