Archive | July 18, 2016

மலர் 6 இதழ்: 434 எதை ஒளித்து வைத்திருக்கிறாய்?

 யோசுவா: 7:21 ”கொள்ளையிலே நேர்த்தியான ஒரு பாபிலோனிய  சால்வையையும், இருநூறு வெள்ளிச்சேக்கலையும், ஐம்பது சேக்கல் நிறையான ஒரு பொன்பாளத்தையும், நான் கண்டு அவைகளை இச்சித்து, எடுத்துக்கொண்டேன். இதோ அவைகள் என் கூடாரத்தின் மத்தியில் பூமிக்குள் புதைந்திருக்கிறது.

பலநாட்களாக நாம் ஆகானைப்பற்றி படித்துக்கொண்டிருக்கிறோம். இஸ்ரவேலின் சேனையில் ஒரு போர்வீரனாக, தேவனாகிய கர்த்தரின் சித்தப்படி எரிகோவை அழிக்கப் புறப்பட்ட இந்த வீரன், பொருளாசை என்ற சலனத்துக்கு சற்று இடம் கொடுத்ததால், அவன் நோக்கம் தடுமாறி, கண்களால் கண்ட பொருட்களை இச்சித்து, தனக்கு சொந்தமல்லாத சாபத்தீடானவைகளை தனக்கு சொந்தமாக்கிக்கொண்டான் என்று நாம் இதுவரைப் பார்த்தோம்.

அந்தப்பொருட்களை ஆகான் என்ன செய்தான் பாருங்கள்! தன்னோடு எடுத்துச் சென்று தன் மனைவி, பிள்ளைகள் வாழ்ந்த கூடாரத்தில் மறைத்து வைத்தான்.

ஆகான் எடுத்த இந்த முடிவு ஒன்றும் புதிதானதல்ல! கண்களால் கண்டதும், கண்டதை இச்சித்ததும், இச்சித்ததை தனக்கு சொந்தமாக்கியதும், மறைத்து வைத்ததும், அன்று ஏதேன் தோட்டத்தில் ஏவாளும், பின்னர் அரண்மனையின் உப்பரிகையில் தாவீதும் எடுத்த முடிவுதான்.

ஏதேன் தோட்டத்தில், தன்னுடைய சாயலாக உருவாக்கின தன் பிள்ளைகளோடு பேசி உறவாட பரம தகப்பன் வந்தபோது ஆதாமும், ஏவாளும் சாபத்தீடான காரியத்தை செய்தபடியால் ஒளித்துக்கொண்டிருந்தனர். ஏன்? பரமபிதாவாகிய கர்த்தர்மேல் உள்ள பயம் அவர்களை ஒளித்துக்கொள்ள செய்ததா?  இல்லை! தங்களுடைய செயலால்தான் அவர்கள் ஒளித்துக்கொள்ள வேண்டியிருந்தது! அதையேதான் இங்கு ஆகான் செய்கிறான். சாபத்தீடானவைகளை தன் கூடாரத்துக்குள் கொண்டு சென்று, அவற்றை பூமியிலே ஒளித்துவைத்தான்.

நாம் நம் பார்வைக்கு இன்பமானவைகளை கண்ணை எடுக்காமல் பார்க்க முடிவெடுத்தபோது, அவற்றின் மேல் ஆசை வைக்க முடிவெடுத்தபோது, அவற்றை நமக்கு சொந்தமாக்கிக்கொள்ள முடிவெடுத்தபோது, நாம் ஒளித்துக்கொள்ள வாஞ்சிக்கிறோம், ஏனெனில் நம்முடைய சாபத்தீடான இந்த செயலால், தேவனாகிய கர்த்தரோடு நமக்கு உள்ள உறவு அறுந்து போகிறது. இதைத்தான் ’நாம் கர்த்தருக்கு விரோதமாக செய்யும் பாவம்’ என்று ஆகானைப்பற்றிய நம்முடைய முதல்நாள் தியானத்திலேயே படித்தோம்.

ஆகான் யோசுவாவின் முன்னால், தான் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்ததாகக் கூறினான். ஏனெனில் அவன் கர்த்தரால் சாபத்தீடானவைகள் என்று அழிவுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டவைகளை, கண்டான், இச்சித்தான், தனக்கு சொந்தமாக்கினான், ஒளித்துவைத்தான்.

கர்த்தருக்கு விரோதமாக ஆகான் பாவம் செய்தான் என்று ஆரம்பித்த நாம், ஆகானின் வாழ்க்கை என்னும் வட்டத்தை ஒரு சுற்று சுற்றிவிட்டு தொடங்கிய இடத்துக்கே வந்து விட்டோம்.

திருடவேண்டும் என்ற எண்ணத்தோடு எரிகோவுக்கு சென்றவன் அல்ல ஆகான்! நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை புசிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தோட்டத்தில் அலையவில்லை ஏவாள்! பத்சேபாள் குளிப்பதை காணவேண்டுமென்று உப்பரிகையின் மேல் ஏறவில்லை தாவீது! இவர்கள் மூவருமே கர்த்தரையும், அவருடைய வார்த்தைகளையும் அறிந்தவர்கள்தான்!

நம்மில் பலரும் இப்படித்தான்! ஆனால் கண்களின் இச்சையும், இருதயத்தின் ஆசைகளும் நம்மை நிலைத்தடுமாற செய்து, கர்த்தரால் சாபம் என்று அழைக்கப் பட்டவைகளை நமக்கு சொந்தமாக்கிக் கொண்டால் தவறு இல்லை என்று நம்பவைத்து விடுகின்றன!
தேவனுடைய சேனையின் வீரனாய் ஆரம்பித்து, அழிவில் முடிவடைந்த ஆகானின் வாழ்க்கைப் பயணம்  நமக்கு ஒரு எச்சரிக்கையாயிருக்கட்டும்!  வேதத்தில் எழுதப்பட்ட எல்லா சம்பவங்களும் நமக்கு ஒரு எச்சரிக்கையாகவே எழுதப்பட்டுள்ளன!

வேதத்தின் வெளிச்சத்தில் உன்னை ஆராய்ந்து பார்! உன்னுடைய வாழ்க்கை என்னும் கூடாரத்தில் உன்னையும் கர்த்தரையும் விரோதியாக்கும் எதையாவது அல்லது யாரையாவது சிற்றின்பம் என்னும் பெயரில் ஒளித்து வைத்திருக்கிறாயா?

ஒன்றும் இல்லை என்று உன்னையே நீ ஏமாற்றிக்கொள்ளாதே!

 

என்னுடைய ஜெபமாகிய இந்த வரிகள் இன்று உன் ஜெபமாகட்டும்!

 

நான் உம்மைவிட்டு விலகும் போது என்னை பற்றிக்கொள்ளும்!

நான் உம்மைவிட்டு திரும்பும்போது உம்மிடமாய்த் திருப்பிக்கொள்ளும்!

நான் உம்மைவிட்டு ஒளித்துக்கொள்ளும்போது என் ஒளிப்பிடத்தை கண்டுபிடியும்!

நான் என்னையே காயப்படுத்தும்போது என்மேல் அன்பு கூறும்!

நான் மற்றவர்களைக் காயப்படுத்தும்போது என் நோக்கத்தை முறியடியும்!

நான் குழந்தையைப்போல அழும்போது உம்

அன்பின் கரத்தினால் என்னை அரவணைத்துக் கொள்ளும்!

 

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

premasunderraj@gmail.com

 

பின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும்.

ராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி!  இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். உங்கள் கருத்துகளைத் தவறாமல் எழுதுங்கள்!