Archive | July 1, 2016

மலர் 6 இதழ்: 423 உன்னத ஸ்தானத்தைப் பெற்ற ராகாப்!

மத்தேயு: 1: 1-5 “ ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்துவினுடைய வம்ச வரலாறு: ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான்; யாக்கோபு யூதாவையும் அவன் சகோதரரையும் பெற்றான்;

யூதா பாரேசையும் சாராவையும் தாமாரிடத்தில் பெற்றான்; பாரேஸ் எஸ்ரோமைப் பெற்றான்; எஸ்ரோம் ஆராமைப் பெற்றான்;

ஆராம் அம்மினதாபைப் பெற்றான்; அம்மினதாப் நகசோனைப் பெற்றான்; நகசோன் சல்மோனைப் பெற்றான்; சல்மோன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான்; போவாஸ் ஓபேதை ரூத்தினிடத்தில் பெற்றான்; ஓபேத் ஈசாயைப் பெற்றான்.”

வேதத்தில் நாம் வாசிக்க விரும்பாத பகுதி வெறும் பெயர்கள் இடம்பெறும் வம்சவரலாறு அல்லவா? வேதத்தை கடமைக்காக வாசிப்பதை விட்டு விட்டு, அதைக் கூர்ந்து படிக்க ஆரம்பிக்கும் வரை நான் கூட அப்படித்தான் செய்தேன். வேதத்தை நாம் கூர்ந்து படிக்கும்போதுதான் அதில் திரும்ப திரும்பக் கூறப்பட்டுள்ள கட்டளைகளும், வம்ச வரலாற்றின் பெயர்களும் எவ்வளவு முக்கியமானவைகள் என்று தெரிய வரும்!

இன்றைக்கு நாம் மத்தேயு 1 ம் அதிகாரத்தில் வரும் வம்ச வரலாற்றுப் பட்டியலைப் பார்க்கப் போகிறோம்!

நேற்று இஸ்ரவேல் மக்கள் ராகாபையும், அவள் குடும்பத்தையும் பாளயத்துக்கு வெளியே தங்க வைத்தனர் என்று பார்த்தோம். அவள் நம்மைவிடக் குறைவு பட்டவள் என்ற எண்ணம்தான் காரணம். அவள் தன் உயிரைப் பணயம் வைத்து வேவுகாரரைக் காப்பாற்றியதால் நன்மை பெற்ற அவர்கள், ராகாபிடம் நீ எங்களுக்கு செய்த உதவிக்காக எங்களோடு வரலாம் ஆனால் எங்களிடம் இடம் இல்லை என்று சொன்னது போல அவளைப் பாளயத்துக்கு புறம்பேத் தங்க வைத்தனர்.

ஆனால் கர்த்தர் அவளுக்காக என்ன திட்டம் வைத்திருந்தார்? இஸ்ரவேலரைப் போல பாளயத்துக்கு புறம்பே விட்டு விடுவாரா? இல்லவே இல்லை! உலகமே ஆச்சரியப்படக்கூடிய அளவுக்கு அவளுக்காக ஒரு மிகப்பெரிய, மிகப் பிரமாதமான திட்டத்தை வைத்திருந்தார்!

அதைத்தான் நாம் மத்தேயு 1 ம் அதிகாரத்தில் இயேசுவின் வம்சவரலாற்றில் பார்க்கிறோம்!

தேவனாகிய கர்த்தர் தம்முடைய ஒரேபேரான குமாரனை இந்த உலகத்தில் அனுப்பும்போது, அவர் வந்து பிறப்பதற்காக ஒரு அருமையான வம்சத்தை தான் தேர்ந்தெடுத்திருப்பார் இல்லையா? நாம் நம் பிள்ளைகளுக்கு அப்படித்தானே செய்வோம்? இயேசுவானவர் உலகில் அவதரித்த வம்ச வரலாற்றை சற்றுப் பார்க்கும்போது நாம் தலையை பிய்த்துக்கொண்டு பிதாவானவர் இந்த வம்சத்தைப் பற்றி ஏதாவது ஆராய்ச்சி செய்தாரா இல்லையா என்று எண்ணத் தோன்றுகிறது!

இந்த வம்ச வரலாற்றில் வருகிற ஒருசிலரை நாம் ஞாபகப்படுத்தி பார்ப்போம்! முதலில் தாமாரைப் பற்றி சிந்திப்போம்! யூதாவின் மருமகளாகிய தாமாரைப் பற்றி நாம் பல நாட்கள் ராஜாவின் மலர்களில் படித்தோம்!

யூத குலத்தின் தகப்பனாகிய யூதா ஆசை வெறியில் அடையாளம் தெரியாமல், அவன் மருமகளாகிய தாமாரை ஒரு வேசி என்று எண்ணி நெருங்கி விட்டு பின்னர் அவள் கர்ப்பவதியானாள் என்று தெரிந்தவுடன், விரல் நீட்டி  குற்றவாளியாக தீர்த்து,அவளை சுட்டெரிக்க வேண்டும் என்கிறான். இந்தப் பொருட்களை உடையவன் எவனோ அவனாலே நான் கர்ப்பவதியானானேன் என்று தாமார் அடையாளம் கூறியதும் குற்றவாளி தான் என்பதை உணருகிறான்!

ஷ்ஷ்ஷ்!!!! இயேசு கிறிஸ்துவின் வம்சவரலாற்றில் இந்த யூதாவும் தாமாரும் இடம் பெற்றிருக்கின்றனர்!

மோவாபிய பெண்ணாகிய ரூத்தும் இயேசு கிறிஸ்துவின் வம்சத்தில் இடம் பெற்றிருக்கிறாள்! ரூத் வேசித்தனம் எதுவும் பண்ணவில்லை என்றாலும் அவள் ஒரு மோவாபிய ஸ்திரி, லோத்துக்கும் அவனுடைய குமாரத்திக்கும் இடையே ஏற்பட்ட அருவருப்பான உறவினால் பிறந்த மோவாபின் வழி வந்தவள். கர்த்தரால் அருவருக்கப்பட்டு மோவாபியரிடம் பெண் கொள்ளவும் பெண் கொடுக்கவும் கூடாது என்று கட்டளையிடப்பட்ட வம்சத்தை சேர்ந்தவள்!

இவர்கள் மட்டும் அல்ல, தாவீது ராஜா விபசாரமும், கொலையும் பண்ணினவன் தானே! சாலொமோன் மாத்திரம் என்ன தொடர்ந்து தவறே செய்யவில்லையா? இவர்களும் இடம் பெற்றிருக்கின்றனர்!

கடைசியாக நம்முடைய ராகாபும் இயேசு கிறிஸ்துவின் வம்சத்தில் இடம் பெற்றிருக்கிறாள்! முதலில் ராகாப் ஒரு கானானிய ஸ்திரி, இரண்டாவது அவள் ஒரு வேசி! இந்த இரண்டுமே ராகாபுடைய பெயருக்கு எதிராய் தொற்றிக்கொண்டிருந்தது.

ராகாபுடைய கடந்த காலம் தேவனாகிய கர்த்தர் அவளுக்காக வைத்திருந்த மகிமையான எதிர்காலத்துக்கு தடையாக இருக்க முடியவில்லை! எப்படிப்பட்ட எதிர்காலம்! இயேசு கிறிஸ்துவின் வம்ச வரலாற்றில் இடம் பெறும் மகா பெரிய எதிர்காலம்!

 

இஸ்ரவேல் மக்கள் ராகாபை பாளயத்துக்கு புறம்பே தங்க வைத்திருக்கலாம்! கர்த்தரோ அவளை தன் குமாரனாகிய இயேசுவின் வம்சத்துக்குள் ஏற்றுக்கொண்டார். அவள் ’அறிந்த’ தேவனாகிய கர்த்தர் அவளுடைய வம்சத்தை தனக்கு சொந்தமாக்கிக் கொண்டார்! தம்முடைய பிள்ளை என்ற உயர்ந்த, உன்னதமான ஸ்தானத்தை அவளுக்கு கொடுத்தார்!

இந்த கதை நமக்கு நம்பிக்கையூட்டுகிறது அல்லவா? யாராவது இனி உங்களுடைய கடந்த காலத்தைப் பற்றி பேசினால் கவலைப்படாதீர்கள்! உங்கள் குடும்பத்தின் பின்னணியைப் பற்றி பேசி சிரித்தால் கவலையே வேண்டாம்! தாமாரை, ரூத்தை, ராகாபை தன் வம்ச வரலாற்றில் ஏற்றுக்கொண்ட தேவன் உங்களுக்கும் இடம் வைத்திருக்கிறார். அவர் உங்கள் கடந்த காலத்தை கிழக்குக்கும் மேற்குக்கும் உள்ள தூரம் போல எறிந்து விட்டார். தனக்கு புதிதாய் பிறந்த குழந்தையை ஒரு தாய் பார்ப்பது போல உங்களைப் பார்க்கிறார்!

உலகத்தாரைப் பற்றியும், உன் கடந்த காலத்தைப் பற்றியும் கவலைப்படாதே! கர்த்தரிடம் வா! பாவியாகவே வா! நீ நீயாகவே வா! இயேசு உன்னைத் தம் கரம் நீட்டி அழைக்கிறார்! அவரை ஏற்றுக்கொள்! உனக்கும் ஒரு உன்னத ஸ்தானம் காத்திருக்கிறது!

 

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்