Archive | July 19, 2016

மலர் 6 இதழ்: 435 பள்ளத்தாக்கான வாழ்க்கை மாறும்!

யோசுவா 7:26 ..” அவன்மேல் இந்நாள் வரைக்கும் இருக்கிற பெரிய கற்குவியலைக் குவித்தார்கள்; இப்படியே கர்த்தர் தன் கோபத்தின் உக்கிரத்தை விட்டு மாறினார்; ஆகையால் அவ்விடம் இந்நாள்வரைக்கும் ஆகோர் பள்ளத்தாக்கு என்னப்படும்.

ஒசியா: 2:15 அவளுக்கு திராட்சத்தோட்டங்களையும், நம்பிக்கையின் வாசலாக ஆகோரின் பள்ளத்தாக்கையும் கொடுப்பேன்.”

நான் முதன்முறையாக ஆகானின் கதையை என்னுடைய சன்டே ஸ்கூலில் கேட்ட ஞாபகம் இருக்கிறது! அன்று எனக்கு பழைய ஏற்பாட்டின் தேவன் மீது அதிக பயம் வந்தது. கடவுள் ஆகானுக்கு மட்டும் அல்ல, அவன் குடும்பத்துக்கும் ஒரு துளி கூட இரக்கம் காட்டாதவராக என் மனதில் பட்டார். தவறு செய்தால் தண்டிப்பவராக மட்டுமே எனக்குத் தோன்றினார்.

வேதத்தை ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின விசேஷம் வரை படித்து, கர்த்தருடைய அநாதி அன்பையும், கிருபையையும் உணராமல், தம்முடைய அநாதி தீர்மானத்தை நிறைவேற்ற அவர் சரித்திரம் முழுவதும் கிரியை செய்து கொண்டிருக்கும் அற்புதத்தை அறியாமல், ஆங்காங்கே கதை வாசிக்கிற கிறிஸ்தவர்களுக்கும் அவர் அப்படித்தான் தோன்றுவார்.

ஆகானின் கதை மிகவும் பரிதாபமானதுதான்! தேவனாகிய கர்த்தரின் சித்தப்படி எரிகோவை அழிக்கப் புறப்பட்ட இந்த வீரன், பொருளாசை என்ற சலனத்துக்கு சற்று இடம் கொடுத்ததால், அவன் நோக்கம் தடுமாறி, கண்களால் கண்ட பொருட்களை இச்சித்து, தனக்கு சொந்தமல்லாத சாபத்தீடானவைகளை தனக்கு சொந்தமாக்கிக்கொண்டு, அவற்றை தன் கூடாரத்தில் ஒளித்து வைத்தான் என்று பார்த்தோம்.

கர்த்தரால் அழிவுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட சாபத்தீடான காரியங்களை நாம் துணிந்து செய்யும்போது, அவை நம்மை மட்டும் அல்ல, நம் குடும்பத்தையும் சாபத்துக்குள்ளாக்கி விடுகின்றன. இதுதான் ஆகானின் குடும்பத்துக்கும் நடந்தது.

கர்த்தருக்கு பிரியமில்லாத காரியங்களை செய்து அவற்றை நம் வாழ்க்கையில் ஒளித்து வைப்போமானால், நம்முடைய அந்த செயல்கள் நம் குடும்பத்துக்கும் அழிவைக் கொண்டுவரும். இதைத் தவிர்க்க வேண்டுமானால் நாம் கர்த்தருடைய கட்டளைகளுக்கு செவி கொடுத்து அவருடைய பாதுகாப்பு வளையத்துக்குள் தங்கியிருப்பதே நலம்!

ஆகானின் வாழ்க்கையால் அவனுக்கும், அவன் குடும்பத்துக்கும், இஸ்ரவேல் மக்களுக்கும் ஏற்பட்ட தோல்விக்கு அப்பால் எதையோ என்னால் காண முடிகிறது!

ஒருநிமிடம் என்னோடு இஸ்ரவேல் மக்களின் பாளயத்துக்கு வாருங்கள்! ஆயி ஒரு சிறு நகரம் இரண்டாயிரம் அல்லது மூவாயிரம் பேர் போனால் வெற்றி பெறலாம் என்று போய் படு தோல்வியை பெற்று வந்திருக்கிறார்கள். அதற்கு காரணம் ஆகான் பொருளாசையால் செய்த பாவம் என்று அறிந்ததும் எல்லோர் மனதிலும் ஒரு வலி! இனி எப்படி இதிலிருந்து வெளியே வருவது என்ற கேள்விக்குறி எல்லார் முகத்திலும் தெரிகிறது அல்லவா?

எரிகோவின் வெற்றியில் ஆவிக்குரிய வாழ்க்கையின் சிகரத்துக்கே ஏறிய அவர்கள், ஆயியின் தோல்வியில் ஆவிக்குரிய வாழ்க்கையின் பள்ளத்தாக்குக்கே வந்துவிட்டர்கள்.

ஆவிக்குரிய வாழ்க்கையின் பள்ளத்தாக்கு என்ன என்பதை அனுபவித்திருக்கிறீர்களா? ஒருவேளை நீங்கள் ஆகானைப்போல எடுத்த ஒரு முடிவு, ஒரு இச்சை, ஒரு பாவம், உங்களை ஆகோர் பள்ளத்தாக்கில் விட்டிருக்கலாம்! கர்த்தருடைய பிரசன்னத்தைவிட்டு பிரிந்து பள்ளத்தாக்கில் விழுந்த நீங்கள், கற்களுக்கு அடியே புதைந்து, அதிலிருந்து வெளியே வரமுடியாமல் திணறிக்கொண்டிருக்கலாம்.

ஆகானின் விஷயத்தில் மன்னிக்கத்தெரியாதவராய், கொடூரமாய் நம் கண்களுக்கு தெரிந்த தேவனாகிய கர்த்தர், ஆவிக்குரிய பள்ளத்தாக்கில் விழுந்து கிடக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு மன்னிப்பின் நற்செய்தியை வைத்திருக்கிறார்!

ஏசாயா 65:10 என்னைத் தேடுகிற என் ஜனத்துக்கு சாரோன் ஆட்டுத்தொழுவமாகவும், ஆகோரின் பள்ளத்தாக்கு மாட்டுக்கிடையாகவும் இருக்கும்.

இன்று நம்முடைய பள்ளத்தாக்கான வாழ்க்கையிலிருந்து நாம் கர்த்தரைத் தேடும்போது, அது நாம் வாசம்பண்ணி இளைப்பாறும் இடமாக மாறும்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மத்தேயு:11:28 ல் ”வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்! நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் “ என்றார்.

ஒசியா: 2:15 ல் “ அவளுக்கு .. நம்பிக்கையின் வாசலாக ஆகோரின் பள்ளத்தாக்கையும் கொடுப்பேன்.” என்று  தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்டுள்ளது.

ஆகோரின் பள்ளத்தாக்கு, உன்னுடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் பள்ளத்தாக்கு ஒருநாள் உன் நம்பிக்கையின் வாசலாக மாறும்! என்ன அருமை பாருங்கள்!

நாம் கர்த்தரைத் தேடும்போது கர்த்தர் நம்முடைய பள்ளத்தாக்கை, நம்முடைய தோல்விகளை, நம்முடைய பாவமான வாழ்க்கையை மறந்து, மன்னித்து, அதை ஒரு அழகிய இளைப்பாறும் இடமாகவும், நம்பிக்கையின் வாசலாகவும் மாற்றிப்போடுகிறார்.

தோல்விகளின் பள்ளத்தாக்கில் வேதனையிலும் வலியிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறாயா? கர்த்தரிடம் வா! உன் வாழ்க்கை நிச்சயமாக மாறும்!

 

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

premasunderraj@gmail.com

 

பின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும்.

ராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி!  இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். உங்கள் கருத்துகளைத் தவறாமல் எழுதுங்கள்!