யோசுவா: 7: 2 – 4 “…… அந்த மனுஷர் போய் ஆயியை வேவுபார்த்து, யோசுவாவினிடத்தில் திரும்பி வந்து அவனை நோக்கி, ஜனங்கள் எல்லாரும் போகவேண்டியதில்லை, ஏறக்குறைய இரண்டாயிரம் மூவாயிரம் பேர் போய் ஆயியை முறிய அடிக்கலாம்; அவர்கள் கொஞ்சம் பேர்தான் என்றார்கள். அப்படியே ஜனங்களில் ஏறக்குறைய மூவாயிரம் பேர் அவ்விடத்திற்குப் போனார்கள்; ஆனாலும் அவர்கள் ஆயியின் மனுஷருக்கு முன்பாக முறிந்தோடினார்கள்.
எங்கள் வீட்டின் முதல் மாடியில் என் மகனும், மருமகளும் குடியிருக்கிறார்கள். ஒருநாள் அவர்கள் புதிதாய் வாங்கி வந்த ஒரு கடிகாரத்தை சுவரில் மாட்ட ஆணியடித்த போது, அந்த ஓட்டையிலிருந்து நீர் கசிய ஆரம்பித்தது. அந்த சுவரில் எந்த தண்ணீர் இணைப்பும் இல்லாததால், எப்படி நீர்க் கசிவு ஏற்பட்டது என்று ஆராய ஆரம்பித்தோம். மாடியில் மின்சார இணைப்புகாக கொடுக்கப்பட்ட ஒரு சிறிய குழாய் ஒன்று தரைமட்டமாக வெட்டப்பட்டிருந்தது. அப்பொழுது வேலை செய்தவர்கள் அலட்சியமாக அதை வெட்டி விட்டு, மூடாமல் விட்டிருந்ததால், பல வருடங்களாக சிறிது சிறிதாக அதனுள்ளே புகுந்த நீர், அந்த சுவற்றில் தங்கிவிட்டது. பெருமழையால் கூட ஏற்படாத சேதம் இந்த மிகசிறிய ஓட்டையால் ஏற்பட்டிருந்தது.
சில சிறு காரியங்களை நாம் அலட்சியப்படுத்தும்போது அது பெரும் சேதாரத்தை உண்டு பண்ணும் என்பது எவ்வளவு உண்மையாகிவிட்டது பாருங்கள்!
இப்படித்தான் நடந்தது இஸ்ரவேல் மக்களுக்கும்! அவர்கள் எரிகோவைப் பார்த்தவுடன் பயந்தனர்! ஐயோ! அந்த நகரை சுற்றிலும் மதில் இருக்கிறது, அதை எப்படி கைப்பற்றுவது? என்று கர்த்தருடைய உதவியை நாடினர்.
ஆனால் இன்று நாம் வாசிக்கிற வேத பகுதியில், அவர்கள் ஆயியைக் கண்டு பயப்படவே இல்லை என்று பார்க்கிறோம்! ஆயியின் ஜனங்கள் கொஞ்சம் பேர்தான், அதனால் நாம் எல்லாரும் போகவேண்டியதில்லை, நாம் இரண்டாயிரம் மூவாயிரம் பேர் போய் ஆயியை முறிய அடித்து விடலாம் என்று எண்ணி, கர்த்தருடைய உதவியை நாடாமல் அவர்கள் ஆயியை நோக்கி சென்றனர்.
என்ன நடந்தது! அவர்கள் ஆயியின் மனுஷருக்கு முன்பாக முறிந்தோடி, தோல்வியைத் தழுவினர்.
இப்படித்தான் நடக்கிறது என்னுடைய, உங்களுடைய வாழ்க்கையிலும்!
பெரிய பாவங்கள், பெரிய பிரச்சனைகள் நம் வாழ்க்கையில் எரிகோவைப் போல உயர்ந்து நிற்கும்போது, அந்த மதிலை உடைக்க நமக்கு கர்த்தரின் பெலன் தேவைப்படுகிறது. நம்முடைய பாவத்திலிருந்து அல்லது பிரச்சனையிலிருந்து விடுதலை வேண்டும் என்று நாம் கர்த்தரை நோக்கி ஓடுகிறோம். ஆனால் நாம் ஆயியைப் போன்ற சிறிய பாவங்களை, பிரச்சனைகளை நாமே பார்த்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறோம்! சில நேரங்களில் அவற்றைப் பாவம் என்றே எண்ணுவதில்லை!
ஆயி போன்ற சிறிய பாவங்கள் என்ன என்று நமக்கே தெரியும்! அந்த பெருமை! அந்தப் பிடிவாதம்! அந்த ஆணவம்! இவை எனக்குப் பிறக்கும்போதிலிருந்தே இருக்கிறது! என் பிறவிக் குணங்களை நான் என்ன செய்ய முடியும்! நான் என்ன கொலை செய்கிறேனா? அல்லது விபசாரம் செய்கிறேனா? இவை ஒன்றும் எனக்கு பெரிதாய் தெரியவில்லை! என்று நாம் எண்ணுகிறோம் அல்லவா?
வேதம் கூறுகிறது பூவும் பிஞ்சுமாய் இருக்கிற திராட்சத்தோட்டங்களை குழிநரிகளும், சிறு நரிகளும் கெடுத்துவிடும் என்று (உன்னதப்பாட்டு:2:15). நம்மில் மறைந்து கிடக்கும், நமக்கு மிகவும் பழகிப்போன, பாவம் என்று தெரியாத பெருமை, பிடிவாதம், ஆணவம் போன்ற சிறுநரிகள், நாம் கிறிஸ்துவுக்காக கனி கொடுக்க முடியாமல் செய்துவிடும்!
தொடர்ந்து சில நாட்கள் நாம் இஸ்ரவேல் மக்களின் வாழ்க்கையிலிருந்து ஆயியின் பாடத்தை கற்றுகொள்ளப் போகிறோம்!
ஆனால் இன்று தயவுசெய்து நம்முடைய வாழ்க்கையில் உள்ள ஆயி போன்ற பாவங்களை அலட்சியப்படுத்தாதீர்கள்!
ஒரு நாள் அது நம் கிறிஸ்தவ வாழ்க்கையை கனியற்ற வாழ்க்கையாக்கி நம்மை நெருப்புக்கு இரையாக்கிவிடும்!
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்

Today message is very useful for me.
In every situation whether it may be small or big problem we should depend on the Lord only.
Without God we are zero.
Thank you sister! God Bless!