கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

மலர் 6 இதழ்: 436 பெலன் தாரும் எனக்கு!

யோசுவா: 8:1 ”… நீ யுத்த ஜனங்கள் யாவரையும் கூட்டிக்கொண்டு எழுந்து ஆயிபட்டணத்தின்மேல் போ,..”

சில வருடங்களுக்கு முன்பு என்னுடைய எண்பது வயதான அப்பா படுக்கையில் இருந்தார்கள். இருதயக் கோளாரினால் பாதிக்கப்பட்ட அவர்களால் தானாக எழும்பவோ அல்லது எதையும் செய்யவோ முடியவில்லை. இந்திய ராணுவத்தில் இருந்த அவர்களுடைய கைகளில் நல்ல பெலன் இருந்ததது, மனதில் தைரியம் இருந்தது ஆனால் கால்களும், சரீரமும் பெலனிழந்து போய்விட்டன. இரண்டு மூன்று தடவை தானாக எழும்ப முயற்சி செய்ததால் கீழே விழுந்து விட்டார்கள்.

ஒருநாள் காலையில் உணவருந்த அவர்கள் தானாக எழும்ப முயற்சி செய்தபோது நான் ‘அப்பா உங்க உடம்பைப்பற்றி எனக்குத் தெரியும், நீங்களே எழும்ப முயற்சி செய்தால் விழுந்து விடுவீர்கள், என்னைப்பிடித்துக் கொண்டு எழும்புங்கள் என்று சொன்னேன்.அதன் பின்னர் ஒவ்வொரு முறையும் தன் கையை என் கைக்குள் பின்னிக் கொண்டு எழுந்திருப்பார்கள்.

நான் இந்த தியானத்தை எழுத ஆரம்பித்தபோது இந்த சம்பவத்தை பரிசுத்த ஆவியானவர் எனக்கு ஞாபகப்படுத்தினார்.

ஆகோர் பள்ளத்தாக்கின் வேதனையையும், தோல்வியையும் தாங்கமுடியாமல், கர்த்தருடைய பிரசன்னத்தில் முகங்குப்புற கிடந்த யோசுவாவை நோக்கி கர்த்தர் எழுந்திரு என்பதைப் பார்க்கிறோம். யோசுவா! நீ முகங்குப்புற விழுந்துகிடப்பதென்ன?

எழுந்திரு! நீ எழுந்து நிற்க வேண்டிய நேரம் வந்தாயிற்று!

சரீர பெலவீனத்தோடு படுத்திருக்கும் என் அப்பாவிடம் நான் சொன்ன வார்த்தைகளும், ஆவிக்குரிய பெலவீனத்தோடு முகங்குப்புற கிடக்கும் யோசுவாவிடம் கர்த்தர் கூறிய வார்த்தையும் பலகோணங்களில் ஒரே மாதியாக இருப்பதாகத் தோன்றியது.

அப்பாவுடைய சரீர பெலவீனத்தை நான் நன்கு அறிந்ததைப் போல, அவர்களுக்கு என்ன செய்கிறது எங்கெல்லாம் வலி இருக்கிறது எல்லாவற்றையும் நான் அறிந்தது போல, யோசுவாவின் ஆவிக்குரிய பெலவீனத்தை கர்த்தர் அறிந்திருந்தார். அவனை உள்ளும் புறமுமாக அறிந்திருந்தார். அவன் உள்ளத்தில் ஏற்பட்ட காயம், வலி, வேதனை அத்தனையும் அவருக்குத் தெரியும்.

நான் என்னுடைய அப்பாவிடம் கூறியதுபோல கர்த்தர் யோசுவாவை நோக்கி, உன்னுடைய சொந்த பலத்தில் எழும்ப முயற்சி செய்யாதே யோசுவா விழுந்து விடுவாய். உன்னுடைய பயம், கலக்கம் எல்லாவற்றையும் என்மேல் வைத்து விட்டு, என்னைப் பிடித்துக்கொண்டு எழுந்திரு என்கிறார்.

கர்த்தர் யோசுவாவை மட்டும் அல்ல நம்மையும் பார்த்து, ‘நான் உன்னை அறிவேன்! உன்னுடைய உள்ளும் புறமும் அறிவேன், உன்னுடைய தோல்வியையும், வேதனையும் அறிவேன். நீ முகங்குப்புற விழுந்து கிடப்பதையும் அறிவேன்.  நீயே எழும்ப முயன்றால் ஒருவேளை விழுந்துவிடுவாய், என்னைப் பிடித்துக்கொண்டு எழுந்திரு!  நீ ஒருவேளைக் காணவில்லையானாலும் என் கரம் உன்னைத் தாங்கிப் பிடித்திருக்கிறது. நீ பயப்படவும், கலங்கவும் வேண்டாம் என்கிறார்.

இன்று எப்படிப்பட்ட நிலையில் நீ இருந்தாலும், கர்த்தருடைய பலத்தை சார்ந்து எழுந்திரு! தேவனாகிய கர்த்தர் நம் தேவன்! அவரே நம் பலன்! ஆயியின் தோல்விகளைத் திரும்பிப் பார்க்காதே! கர்த்தரை நோக்கி, அவர் கரம் பிடித்து எழும்பு! உன் பெலவீனங்களை அவரிடம் ஒப்புக்கொடு, உனக்கு ஒளிமயமான எதிர்காலம் உண்டு.

 

உம்முடைய மேய்ச்சலின் பாதையில் அயராது நடந்து உமக்கு பின்செல்ல

எனக்கு பெலன் தாரும்!

தண்ணீரைக் கடந்து வரும்படி நீர் அழைக்கும்போது பயமின்றி கடக்க

எனக்கு பெலன் தாரும்!

மலைகளைத் தாண்டும்படி நீர் அழைக்கும்போது மகிழ்சியாகத் துள்ளியோட

எனக்கு பெலன் தாரும்!

உம்முடைய ஒளிமுகப் பிரகாசத்தை முகமுகமாய்க் காணும்வரை உம் வழிநடக்க

எனக்கு பெலன் தாரும்!

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

premasunderraj@gmail.com

 

பின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும்.

ராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி!  இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். உங்கள் கருத்துகளைத் தவறாமல் எழுதுங்கள்!

 

Leave a comment