Archive | October 12, 2016

மலர் 7 இதழ்: 496 கண்டிப்பது நன்மைக்கே!

நியாதிபதிகள்: 13:4 “ஆதலால் நீ திராட்சரசமும் மதுபானமும் குடியாதபடிக்கும், தீட்டானது ஒன்றும் புசியாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு”.

என்னுடைய அம்மா எதையும் எடுத்த இடத்தில் வைப்பார்கள், பயங்கர சுத்தம் வேறு. பாத்திரங்களை பளபளவென்று கழுவி வெயிலில் காயவைத்து எடுத்து உள்ளே வைப்பார்கள். அம்மாவுக்கு உடல்நலம் சற்று குன்றியபோது வேலைக்கு ஒரு பெண்ணை வைத்தோம். அந்தப் பெண் வந்து பாத்திரம் விளக்கி சென்றவுடன் அம்மா எடுத்து மறுபடியும் கழுவி வைப்பார்கள். அவர்கள் மட்டும் அல்ல, நானும்  அவ்வாறு இருக்க வேண்டுமென்று விரும்பினார்கள்.  சிலநேரங்களில் அம்மாவுடைய கண்டிப்பு எனக்கு கஷ்டமாகத் தோன்றியிருக்கிறது. அம்மா அதிக வருடங்கள் என்னோடு வாழவில்லை, ஆனாலும்  இன்று அம்மாவுடைய கண்டிப்பு தான் என்னுடைய வீட்டை நான் பராமரிப்பதற்கு எனக்கு உதவி செய்கிறது.

இந்த அனுபவம் தான் இன்றைய வேதாகமப்பகுதியில் எதிரொலிக்கிறது!

நேற்று நாம், தேவதூதனானவர் மனோவாவின் மனைவியிடம் வந்து மலடியாயிருந்த அவளுக்குப் பிறக்கப்போகிற பிள்ளை கர்த்தருக்கு அர்ப்பணிக்கப்பட வேண்டியவன், அதனால் அவள் இப்பொழுதே அந்த விரதத்தைக் கைக்கொள்ள வேண்டும் என்று  கூறுவதைக் கண்டோம்.

இதை வாசிக்கும்போது என்னுடைய அம்மாவைப் போல கர்த்தர் மிகவும் கண்டிப்பானவராக எனக்குப் பட்டார். எண்ணாகமம் 6: 3 வாசிக்கும்போது, “ அப்படிப்பட்டவன் திராட்சரசத்தையும் மதுபானத்தையும் விலக்கக்கடவன்; அவன் திராட்சரசத்தின் காடியையும்,மற்ற மதுபானத்தின் காடியையும், திராட்சரசத்தினால் செய்த எவ்விதமான பானத்தையும் குடியாமலும், திராட்சப்பழங்களையாவது திராட்ச வற்றல்களையாவது புசியாமலும், என்று கர்த்தர் கூறுவதைப் பார்த்து எனக்கு பிரம்மிப்பாக இருந்தது.

மறுபடியும் இதை தெளிவாகப் படியுங்கள்! இது ஏதோ மதுபானத்துக்கு கர்த்தர் போட்ட தடையில்லை! நாம் சாப்பிடும் திராட்சப் பழங்களையும், நாம் பாயாசத்தில் போடும் காய்ந்த திராட்சையையும் கூட தடை போடுகிறார்.

கர்த்தர் ஏன் இப்படி ஒரு கண்டிப்பு போடுகிறார் என்று என்னை ஆழமாகப் படிக்க வைத்தது. திராட்சப்பழத்தை சாப்பிடுவதால் என்ன தவறு? காய்ந்த திராட்சை உடம்புக்கு நல்லதுதானே? கர்த்தருடைய கண்டிப்புக்கு ஒரு அளவே இல்லையா? என்று என் எண்ணங்கள் ஓடியது.

நியாதிபதிகள் புத்தகத்தின் 16வது அதிகாரம் படிக்கும்போதுதான் எனக்கு இந்தப் புதிருக்கு விடை கிடைத்தது. பெலிஸ்தியர் அந்த நாட்களில் சோரேக் ஆற்றங்கரையில் குடியிருந்தனர். இதை நான் மிகுந்த ஆவலோடு எபிரேய அகராதியில் தேடினேன். நான் படித்த காரியம் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

நாகல் சோரேக் என்றழைக்கப்படும் இந்தப்பகுதி யூதேயாவின் மலைப்பிரதேசத்தில் அமைந்துள்ளது. இந்தப்பகுதியில் விளைந்த திராட்சையினால் இது இப்பெயர் பெற்றது. சோரேக் என்றால் திராட்சை அப்படியானால் பெலிஸ்தர் திராட்சைப் பள்ளத்தாக்கில் வாழ்ந்தனர்.

திடீரென்று தலைக்குள் ஒரு பெரிய 100 வாட்ஸ் பல்பு எரிவதுபோல தேவனாகிய கர்த்தரின் கண்டிப்புக்கு அர்த்தம் புரிந்தது. தமக்கு பரிசுத்தமாய் ஒப்புக்கொடுக்கும் தம் பிள்ளைகள், பரிசுத்தமில்லாத பெலிஸ்தியரோடு சம்பத்தப்பட்ட எதையும் தொடக்கூடாது  என்று கர்த்தர் விரும்பினார். அவர்களுடைய அநாகரிக வாழ்க்கை, கீழ்த்தரமானப் பழக்க வழக்கங்கள் எதுவுமே எந்தக்கோணத்திலும் நசரேயனுடைய வாழ்வில் வந்து விடக்கூடாது என்பதற்காகவே அவர்கள் வாழ்ந்த பள்ளத்தாக்கில் விளைந்த திராட்சைப்பழங்களைக் கூட சாப்பிட வேண்டாம் என்றார்.

இதை புரிந்து கொண்ட போது என்னுடைய பரலோகத் தகப்பனாகிய தேவனாகிய கர்த்தர் கண்டிப்பானவராக எனக்குத் தெரியவில்லை. மாறாக அவர், தன் பிள்ளைகளைப் பாதுகாக்கும், தன் பிள்ளைகளை நல்ல வழியில் நடத்தும்,  ஒரு நல்லத் தகப்பனாகத்தான் தென்பட்டார்.

நம் பிள்ளைகளுக்கு சில நேரங்களில் நாம் இப்படி செய்யாதே, அப்படி செய்யாதே என்று சொல்வது தேவையற்றக் கண்டிப்பு போலத் தெரியும். மோட்டார் பைக்கை எடுக்கும் போதெல்லாம் ஹெல்மெட் போடு என்று சொல்வதும், காரில் உட்காரும்போதெல்லாம் சீட் பெல்ட் போடு என்று சொல்வதும் தேவையில்லாத ஒரு புத்திமதியாகத் தெரியும். அவ்வாறுதான் கர்த்தருடைய கண்டிப்பும், புத்திமதியும் நமக்குத் தோன்றுகிறது.

ஒரு கண்டிப்பானத் தகப்பனாய் இஸ்ரவேலருக்கு சோரேக் பள்ளத்தாக்கோடு எந்த சம்பந்தமும் வேண்டாம் என்று கர்த்தர் விரும்பியது அவர்களைப் பரிசுத்தமாய் அவருக்கு அர்ப்பணிப்பதற்காகத்தான்! நம்மை அவ்வப்போது கண்டிப்பதின் மூலம் கர்த்தர் நம்மையும் பரிசுத்தமாக்க விரும்புகிறார்!

உங்கள் சகோதரி,

 

பிரேமா சுந்தர் ராஜ்

 

Advertisements