Archive | October 25, 2016

மலர் 7 இதழ்: 505 சிம்சோனின் சிறுபிள்ளை போன்ற அடம்!

நியாதிபதிகள்: 14:2 (சிம்சோன்) திரும்ப வந்து தன் தாயையும் தகப்பனையும் நோக்கி; திம்னாத்திலே பெலிஸ்தரின் குமாரத்திகளில் ஒரு பெண்ணைக் கண்டேன்; அவளை எனக்குக் கொள்ள வேண்டும் என்றான்.

என்னுடைய வாழ்க்கையில் சிறு வயது முதல் இது வரைக்கும் ஏதாவது ஒரு பொருளைப் பார்த்து , அதன்மேல் ஆசைப்பட்டு அதை எப்படியாவது அடையவேண்டும் என்று அடம் பிடித்து அழுத ஞாபகம் எனக்கு இல்லவே இல்லை. சிறு வயதிலிருந்தே இதை’செய்யாதிருப்பாயாக’அதை விரும்பாதிருப்பாயாக என்ற கட்டளைகளை எனக்கு நானே சொல்லிக்கொள்ளக் கற்றுக்கொண்டேன்.

ஆனால் ஒருசிலர் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று அடம் பிடிப்பதைப் பார்த்திருக்கிறேன். அப்படி அடம் பிடித்து வாங்கியவை சிலருக்கு நீண்ட காலம் நிலைக்கவுமில்லை. முன்பின் யோசிக்காமல் எதையும் அதிக ஆசைப்பட்டு வாங்கிவிட்டு, இதை ஏன் வாங்கினேன் என்று வருத்தப்படுபவர்களையும், இந்த உறவு இல்லாவிடில் நான் உயிரோடே இருக்கமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்து விட்டு, பின்னர் திருமணமாகி சில வருடங்களிலேயே அந்த உறவின் புதுமை தீர்ந்தவுடனே அந்த உறவே வேண்டாம் என்றுத் தள்ளிவிடுபவர்களையும் பார்த்திருக்கிறோம்.

சிம்சோனின் வாழ்க்கையைப் பற்றி நாம் படித்துக் கொண்டிருக்கிறோம். பல வருடங்கள் குழந்தையில்லாமல் இருந்த பெற்றோருக்குப் பிறந்த அவனுக்கு அவன் பெற்றோர் அதிகமாக செல்லம் கொடுத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஏனென்றால் எப்படியோ அவனிடம் கண்ணால் கண்டதை உடனே அடையவேண்டும் என்று அடம் பிடிக்கும் குணமும் வளர்ந்திருந்தது.

நல்ல வாட்டசாட்டமான உடல், பெலமும் அழகும் உள்ளவன், வாக்குத்தத்தத்தின் பிள்ளை, தெரிந்துகொள்ளப் பட்டவன், இரட்சிக்கப்போகிறவன் , இவை அந்த ஊரில் உள்ள அத்தனைபேரின் பார்வையையும் அவன்மேல் திருப்பிற்று. அவர்கள் அத்தனைபேரின் கவனமும் அவன் தலையின் உச்சிக்கே ஏறிவிட்டது.

தான் அடம்பிடித்து கேட்டவைகளை அடைந்து பழகிவிட்ட சிம்சோன், திம்னாத்தில் அவன் கவனத்தை ஈர்த்த பெண்ணைப் பார்த்தவுடன் அவள் தனக்கு வேண்டும் என்று முடிவு செய்துவிட்டான். தேவனுடைய நோக்கத்தை தன் வாழ்வில் நிறைவேற்ற வேண்டுமே என்ற எண்ணம் அவனுக்கு சற்றும் தோன்றவில்லை.

தேவனுடைய பிள்ளைகளே எச்சரிக்கையாயிருங்கள்! திம்னாத்தின் பெண் சிம்சோனின் கவனத்தை தேவனிடத்திலிருந்து பிரித்து தன்வசப்படுத்தியது போல  உங்கள் கண்களையும் கவனத்தையும் ஈர்த்து உங்களை தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றப்பண்ணாமல் தடை செய்யும் அநேகப் பெண்கள் இன்றும் உலகத்தில் உண்டு.

திம்னாத்தின் பெண் ஒருவேளை நல்ல குணசாலியாயிருக்கலாம் ஆனால் அவள் சிம்சோனின் வாழ்க்கையில் தேவ சித்தம் அல்ல. நம்முடைய நோக்கத்திலிருந்து நம்மை விலக்கும் எந்தப் பொருளும் அல்லது எந்தப் பெண்ணும் நம்மை தவறான பாதையில் கொண்டுபோய் நிறுத்திவிடுவார்கள் என்பதை மறந்து போகாதீர்கள்.

இன்று எதை அடையவேண்டுமென்று சிறு பிள்ளையைப் போல அழுது அடம் பிடித்துக் கொண்டிருக்கிறாய்! நீ அடம் பிடித்து கேட்பது ஒருவேளை உன் அழிவுக்கு அஸ்திபாரமாகிவிடக்கூடும்.

நாம் ஒவ்வொருவரும் எனக்கு வேண்டும் , எனக்கு வேண்டும் என்று அடம் பிடித்து அடையும் குணத்தை அறவே ஒழித்து விட்டு, தேவனுடைய சித்தத்தை இந்தப் பூமியில் நிறைவேற்றும் கருவிகளாக வாழ வேண்டும் என்று கர்த்தர் நம்மிடம் விரும்புகிறார்.

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

Advertisements