Archive | October 26, 2016

மலர் 7 இதழ்: 506 கண் போன போக்கிலே!

நியாதிபதிகள்: 14:3    அப்பொழுது அவன் தாயும் அவன் தகப்பனும் அவனை நோக்கி: நீ போய் விருத்தசேதனமில்லாத பெலிஸ்தரிடத்தில் ஒரு பெண்ணைக்கொள்ளவேண்டியதென்ன? உன் சகோதரரின் குமாரத்திகளிலும், எங்கள் ஜனமனைத்திலும் பெண் இல்லையா என்றார்கள். சிம்சோன் தன் தகப்பனை நோக்கி :அவள் என் கண்ணுக்குப் பிரியமானவள், அவளையே எனக்குக் கொள்ளவேண்டும் என்றான்.

நாம் சிம்சோனைப் பற்றிப் படிப்பதைத் தொடருவோம்.

தேவனுடைய பணியாக பெலிஸ்தரின் ஊரான திம்னாத்துக்கு அனுப்பப்பட்ட சிம்சோன், அங்கு ஒரு பெண்ணைப் பார்த்துவிட்டு அவள் தான் எனக்கு வேண்டும் என்று அடம் பிடிக்கிறான். அவன் அந்தப் பெண்ணின் மேல் காதல் கொண்டதாக வேதம் சொல்லவில்லை, அவளைக் கண்டவுடன் அவன் நோக்கம் சிதறியது என்றுதான் வேதம் சொல்லுகிறது.

அவன் தாயும் அவன் தகப்பனும் அவனைப் பார்த்து, நீ போய் விருத்தசேதனமில்லாத பெலிஸ்தரிடத்தில் ஒரு பெண்ணைக்கொள்ளவேண்டியதென்ன? உன் சகோதரரின் குமாரத்திகளிலும், எங்கள் ஜனமனைத்திலும் பெண் இல்லையா என்று அவனை மனம் மாற செய்ய முயற்சி வீணானது.

சிம்சோனின் தாயும் தகப்பனும் இஸ்ரவேல் பாளையத்தில் பார்த்த அழகிய இளம் பெண்களையெல்லாம் தன் மகனுக்கு இவள் பொருத்தமானவளா என்ற கண்ணோடுதான் பார்த்திருப்பார்கள். தம் செல்லக் குமாரனை திருமண கோலத்தில் பார்க்க எத்தனை ஆசை இருந்திருக்கும்! திம்னாத்துக்கு போய் வந்த சிம்சோன் பெற்றொரின் வார்த்தைக்கு செவிகொடாமல், அவள் என் கண்ணுக்குப் பிரியமானவள், அவளையே எனக்குக் கொள்ளவேண்டும் என்றான் என்றுப் பார்க்கிறோம்.

சிம்சோன் தேவனுடைய பரிசுத்த ஊழியத்துக்காக அழைக்கப்பட்டவன். நசரேய விரதத்தைப் பின்பற்றியவன். தேவனுடைய வல்லமையைப் பெற அவன் தேவனுடைய கட்டளைகளைக் கைப்பற்ற வேண்டியவன். தேவனுடைய சமுகத்தைவிட்டு விலகவோ, பொல்லாதகாரியத்தை செய்யவோ கூடாது.தன்னுடைய கண்களுக்குப் பிரியமானதை அல்ல, தேவனுக்குப் பிரியமானதையே செய்ய வேண்டியவன்.

தேவனுடைய பிள்ளைகளே இது  சிம்சோனுக்கு மட்டுமல்ல, நமக்கும் கொடுக்கப்பட்ட கட்டளைதானே! தாவீது ராஜா சொல்லுவதைக் கேளுங்கள்!

உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான் (சங்:91:1)

கீழ்ப்படிதலோடு தேவனுடைய செட்டைகளின் கீழ் அடைக்கலமாய் வாழவேண்டிய அவன், தன் கண்களின் போக்கின்படி வாழ முடிவு செய்தான். தேவனின் சித்தப்படி வாழ தன் இருதயத்தில் வாஞ்சிக்க வேண்டிய  அவன், கண்களின் பிரியத்தை வாஞ்சிக்க ஆரம்பித்தான்.

இன்றும் நம்மில் அநேகம்பேர் உலகம் தரும் உல்லாச இன்பங்களால் நம் வாழ்வை நிரப்ப வாஞ்சிக்கின்றோம். நம்மில் பலரை பொருளாசையும், பண ஆசையும், பெண் ஆசையும், புகழ் ஆசையும், பதவி ஆசையும்  கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்காக வைத்திருக்கும் தீர்மானத்திலிருந்தும், நாம் அவருக்காய் செய்ய வேண்டிய ஊழியத்திலிருந்தும் திசை திருப்புகின்றன.ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்குத் தரும் நிறைவான சந்தோஷத்துக்கு இவை எதுவுமே நிகராகாது.

இன்று தேவனுடைய சமுகத்திலிருந்து வழி விலகிப்போய்க் கொண்டிருக்கிறாயா? கர்த்தருடைய சமுகத்துக்கு வா! அவர் தம்முடைய ஜீவ மன்னாவால் உன் ஆத்துமாவை திருப்தியாக்குவார்! வழி விலகி விடாதே!

ஆண்டவரே என் பாத்திரம் நிரம்பி வழியட்டும்!

என் பாத்திரத்தை உம்முடைய சமுகத்துக்கு முன்பாக உயர்த்துகிறேன்,

என்னை நிரப்பி என் ஆத்தும தாகத்தைத் தீரும்!

பரலோகத்தின் ஜீவ அப்பமாகிய நீர்,

என்னைப் போதுமென்னுமட்டும் போஷியும்!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

 

பின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும்.

ராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி!  இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். உங்கள் கருத்துகளைத் தவறாமல் எழுதுங்கள்!

Advertisements