Archive | October 31, 2016

மலர் 7 இதழ்: 509 சிம்சோனின் கட்டுக்கடங்கா வெறி!

நியாதிபதிகள்: 16:1 ” பின்பு சிம்சோன் காசாவுக்குப் போய் அங்கே ஒரு வேசியைக் கண்டு அவளிடத்தில் போனான்.”

தன் மனைவி பெலிஸ்தரின் கோபத்தால் தீக்கிரையான பின்னர் சோகத்தில் ஆழ்ந்து போனான் சிம்சோன் என்று நமக்கு எண்ணத் தோன்றும். அவள் தான் எனக்கு வேண்டும் என்று அடம் பிடித்து அடைந்த பெண் அல்லவா? அவன் கண்களுக்குப் பிரியமாயிருந்தவள் அல்லவா?

ஆனால் அப்படியல்லாமல், பெலிஸ்தரை சின்னபின்னமாய் சங்காரம் பண்ணிவிட்டு ஏத்தாம் ஊர் கன்மலை சந்திலே குடியிருந்தான். சற்று நாட்களில் இஸ்ரவேலரும் அவன் அவர்கள் மத்தியில் குடியிருப்பதை விரும்பவில்லை என்று அறிந்து கொண்டான் ஏனெனில் பெலிஸ்தர் அவர்களிடம் சிம்சோனை எங்களுக்கு ஒப்புவிக்காவிட்டால் என்ன நடக்கும் என்று தெரியாது என்று பயமுறுத்தினர்.

அதுமட்டுமல்ல, அவன் பெலிஸ்தரை தந்திரமாக கட்டுண்டவனைப் போல ஏமாற்றி , எதிரி அவன் அருகில் அவனுடைய கட்டுகளைப்பார்த்து வந்து ஆர்ப்பரிக்கையில் கட்டுகளை அறுத்து எறிந்துவிட்டு ஒரு கழுதையின் தாடை எலும்பால் ஆயிரம்பேரைக் கொன்று போட்டான். இந்த தனி மனிதனாய்ப் பண்ணிய யுத்தத்துக்கு பின்னர் நியாதிபதிகள் 15: 20 கூறுகிறது, சிம்சோன் இஸ்ரவேலை இருபது வருஷம் நியாயம் விசாரித்தான் என்று.

ஆனால் அதற்கு அடுத்த வசனம் நியாதிபதிகள் 16: 1 கூறுகிறது , சிம்சோன் காசாவுக்குப் போய் அங்கே ஒரு வேசியைக் கண்டு அவளிடத்தில் போனான்.” என்று.

அவன் திம்னாத்தில் தான் கண்டு அடைய ஆசைப்பட்ட பெண்ணைப்போல இன்னொரு புறஜாதிப் பெண்ணை அடைய முடிவு செய்துதான் காசாவுக்கு செல்கிறான்.

அங்கே அவன் சென்றதை ஒருவன் உளவு பார்த்து பெலிஸ்தரிடம் கூறப்போய், அவர்கள் அவனை காலையில் விடிந்தவுடன் கொலை செய்யத் திட்டமிட்டார்கள். அதை எப்படியோ உணர்ந்த சிம்சோன், நடுராத்திரியிலேயே அந்த வீட்டை விட்டுப் புறப்பட்டான். போகும்போது அந்தப் பட்டணத்தின் வாசல்களையும், நிலைகளையும் , அதன் தாழ்ப்பாள்களையும் சுமந்து கொண்டு எபிரோன் வரை சென்றான் என்று பார்க்கிறோம்.

மறுபடியும் அவன் தன் காமத்தை கட்டுப்படுத்த முடியாமல் தெலீலாள் என்ற ஒரு பெண்ணுடன் சிநேகம் வைக்கிறான்.

சிம்சோன்…..தெலீலாள்… நமக்கு நன்கு தெரிந்த ஒரு கதை!

கதையாகவும், படமாகவும் உலகமே அறிந்த ஒரு கதை!  சிம்சோனின் பாலியல் வெறி அவனை வீழ்த்தியது என்றுதானே நாம் கேட்டிருக்கிறோம். ஆனால் சிம்சோனின் கட்டுக்கடங்கா பாலியல் வெறி மாத்திரம் அவனுடைய தோல்விக்குக் காரணம் என்று நாம் நினைப்போமானால், நாம் அவனுடைய வாழ்க்கையிலிருந்து கர்த்தர் நமக்குக் கற்றுக்கொடுக்கும் பாடத்தை இழந்து விடுவோம்.

காமம் மட்டும் அல்ல, பொறுமையின்மை, கோபம், அடம் பிடித்தல், வெறுப்பைக் காட்டும் தன்மை, கர்வம், பழிவாங்குதல்  என அவனுடைய பெலவீனங்களைப் பற்றி நாம் படித்துக் கொண்டு வருகிறோம். எந்த உணர்ச்சியையுமே கட்டுப்படுத்தும் திறமை அவனிடம் இல்லை என்றுதான் நான் நினைக்கிறேன். இந்த கட்டுக்கடங்கா உணர்ச்சிகள் தான் அவன் வீழ்ச்சிக்குக் காரணம்.

இவைகளை கட்டுப்படுத்த நம்மால் முடியாவிட்டால் இவை சிம்சோனை வீழ்த்தியதுபோல் நம்மையும் வீழ்த்திவிடும்.

சிம்சோன் தன் உணர்ச்சிகள் தன்னைக் கட்டுப்படுத்த அனுமதித்ததால் எவ்வளவு பயங்கர முடிவை சந்தித்தான் என்று சிந்தித்துப் பாருங்கள்!

உங்கள் உணர்ச்சிகளை நீங்கள் கட்டுப்படுத்தாவிட்டால் அவை உங்களை கட்டுப்படுத்தி அடிமையாக்கிவிடும்!  ஜாக்கிரதை!

பரிசுத்த ஆவியானவர் மட்டுமே நம் உணர்ச்சிகளை கட்டுப்பாட்டுக்குள் வைக்க நமக்கு உதவி செய்ய முடியும். ஒவ்வொரு நாளும் கர்த்தருடைய ஆவியானவர் நம்முடைய பொல்லாத உணர்ச்சிகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க நமக்கு உதவி செய்யுமாறு ஜெபிப்போம்.

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

பின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும்.

ராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி!  இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசீர்வாதம் பெற உதவுங்கள். உங்கள் கருத்துகளைத் தவறாமல் எழுதுங்கள்!

 

Advertisements