கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்: 1084 கப்பலின் திசைகாட்டி போல வழிகாட்டும் வேதம்!

லேவி: 24: 11 -12 அப்பொழுது இஸ்ரவேல் ஜாதியான அந்த ஸ்திரியின் மகன் கர்த்தரின் நாமத்தை நிந்தித்து தூஷித்தான். அவனை மோசேயினிடத்தில் கொண்டு வந்தார்கள். அவன் தாயின் பேர் செலோமித். அவள் தாண் கோத்திரத்தானாகிய திப்ரியின் குமாரத்தி.

கர்த்தரின் வாக்கினாலே தங்களுக்கு உத்தரவு வருமட்டும், அவனைக் காவல் படுத்தினார்கள்.

நாம் செலோமித் என்ற பெண் தவறான தீர்மானம் எடுத்து ஒரு எகிப்தியனை மணந்தாள் என்று பார்த்தோம். நாம் எடுக்கும் தவறான தீர்மானங்கள் நம்முடைய வாழ்வை சீரழிக்கும் என்று அறிந்தோம்.

நேற்று நாம் அவள் குமாரன் கர்த்தரின் நாமத்தை நிந்தித்து தூஷித்ததைப் பார்த்தோம்.. இவனும் இஸ்ரவேலன் ஒருவனும் பாளயத்தில் சண்டை போட ஆரம்பித்தார்கள். அவன் மேல் இருந்த கோபத்தை காண்பிக்க, செலோமித்தின் குமாரன் வார்த்தைகளை தவறாக உபயோகிக்கத் தீர்மானித்து தேவனை நிந்தித்தான்.

இன்று இஸ்ரவேல் மக்கள் கர்த்தரை நிந்தித்தவனைத் தண்டியாமல் ஏன் அவனைக் காவல் படுத்த தீர்மானம் எடுத்தார்கள்? என்று பார்க்கலாம்.

தேவனை நிந்தித்தவன் ஒரு கலப்புத் திருமணத்தின் மூலம் பிறந்தவன் என்று பார்த்தோம். அவன் தாய் ஒரு இஸ்ரவேல் கோத்திரத்தாள், தகப்பன் ஒரு எகிப்தியன். மோசேயின் காலத்திலேயே விசுவாசிகளும், அவிசுவாசிகளும் செய்த கலப்புத் திருமணத்தினால் பிரச்சனைகள் எழுந்திருக்கின்றன போலும்!

ஒரு இஸ்ரவேலன் தேவ தூஷணம் செய்திருப்பானால், மோசேக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என்று தெரிந்திருக்கும், இவனோ பாதி யூதனும், பாதி எகிப்தியனுமாயிருந்தான். மோசே அவனைக் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டு, தேவனுடைய சித்தத்தை அறியக் காத்திருந்தான் என்று பார்க்கிறோம். இது மோசே எடுத்த ஒரு ஞானமுள்ள தீர்மானம்!

இஸ்ரவேல் ஜனங்களின் தலைவனாக மோசே சுயமாக இந்த விஷயத்தில் முடிவு எடுத்திருக்கலாமே என்று நினைக்கத் தோன்றுகிறது அல்லவா! நாம் அந்த இடத்தில் இருந்திருந்தால் நாம் தானே முடிவு எடுத்திருப்போம்? இது ஒரு பெரிய காரியமே இல்லை என்று நாமே நியாயந்தீர்த்திருப்போம் அல்லவா? ஆனால் அந்தப் பாளயத்தில் என்ன நடக்கிறது பாருங்கள்!  மோசே தான் எவ்வளவு பெரியத் தலைவனாக இருந்தாலும் எல்லாவற்றையும் முடிவெடுக்கத் தனக்குத் தகுதியில்லை என்று தன்னைத் தாழ்த்தி தேவனுடைய வாக்குக்காக காத்திருந்தான்.

மாபெரும் தலைவனான மோசே தன்னைத் தாழ்மைப்படுத்தி, தான் முற்றும் அறிந்தவன் அல்ல, தேவனுடைய வார்த்தையின்படி நடப்பவன் என்று இஸ்ரவேல் மக்களுக்கு இதன் மூலம் அறிவித்தான்.

தேவனாகிய கர்த்தர் தம்முடைய வேதத்தின் மூலம் நமக்கு கட்டளைகளையும், நாம் நடக்க வேண்டிய விதி முறைகளையும், வாக்குத் தத்தங்களையும் கொடுத்தது மட்டுமல்லாமல், மோசே போன்ற தேவனுடைய பிள்ளைகளின் வாழ்க்கையை நமக்கு  ஒரு மாதிரியாகவும் கொடுத்திருக்கிறார்.

நம்முடைய  வாழ்க்கையில் எந்த சூழ்நிலையிலும் வேதம் நம்மை வழிநடத்த முடியும். வேதத்தின் வார்த்தைகள் கப்பலில் பொருத்தப்பட்டுள்ள திசை காட்டியைப் போல நம்மை சரியான வழியில் நடத்தும் என்ற உண்மை உங்களுக்குத் தெரியுமா? அதை சற்று அனுபவித்துப் பாருங்கள்! 

வாழ்வின்  முக்கியமான தருணத்தில் தீர்மானம் எடுக்கும் கட்டத்தில் எப்படித் தீர்மானம் எடுப்பது என்று குழம்பிப் போயிருக்கிறீர்களா? அவசர முடிவு எடுக்க வேண்டாம்! மோசேயைப் போல கர்த்தருக்கு காத்திருங்கள்! அவருடைய வார்த்தையின் மூலமாய் உங்களை வழிநடத்துவார்.

தேவனுடைய சித்தத்தை அறிய காத்திருந்த மோசேயும் இஸ்ரவேல் மக்களும் சரியான தீர்மானத்தை எடுத்தனர்.

11 கொரி: 5:6 ”நாம் தரிசித்து நடவாமல் விசுவாசித்து நடக்கிறோம்” . தேவனுடைய வார்த்தைகளை விசுவாசி! அது இந்தப் புதிய ஆண்டிலும் உன்னை வழிநடத்தும்!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

premasunderraj@gmail.com

Leave a comment