யோசுவா: 2:9 ”கர்த்தர் உங்களுக்கு தேசத்தை ஒப்புக் கொடுத்தாரென்றும்…..அறிவேன்”
யோசுவாவால் அனுப்பப்பட்ட இஸ்ரவேலின் வேவுகாரர் இருவர் ராகாபின் வீட்டில் நுழைந்தபோது, எரிகோவின் ராஜாவால் எச்சரிக்கப் பட்டும், ஒரு நொடி கூட பின்னோக்காமல் இஸ்ரவேலின் ராஜாதி ராஜாவுக்கு கீழ்ப்படிய முடிவு செய்து, அந்த இரண்டு மனிதரையும் ராகாப் தன்னுடைய வீட்டில் ஒளித்து வைத்தாள் என்று நேற்று நாம் பார்த்தோம்.
ராகாப் அவர்களிடம் கர்த்தர் உங்களுக்கு தேசத்தை ஒப்புக் கொடுத்தாரென்று அறிவேன் என்பதாக இன்றைய வேத வசனம் கூறுகிறது.
இந்த அறிவேன் என்ற வார்த்தையின் எபிரேய மொழியாக்கத்தைப் பாருங்கள்! ஒரு நண்பரை நாம் நன்கு அறிவோம் என்றால் நமக்கு அவரைப்பற்றியும், அவருடைய குணாதிசயங்களைப் பற்றியும் நன்கு தெரியும், அவரோடு நெருங்கிப் பழகியிருக்கிறோம், அவரைப்பற்றிய சாட்சியை நம்மால் நிச்சயமாக சொல்லமுடியும் என்றுதானே அர்த்தம்? இந்த அர்த்தங்களைக் கொடுக்கும் எபிரேய வார்த்தையை உபயோகப்படுத்திதான் ராகாப் இஸ்ரவேலின் கர்த்தரை அறிவேன் என்றாள்.
ஒரு கானானிய வேசியின் வாயிலிருந்து புறப்பட்ட விசுவாச அறிக்கைதான் கர்த்தர் உங்களுக்கு தேசத்தை ஒப்புக் கொடுத்தாரென்றும்…..அறிவேன் என்ற வார்த்தைகள்!. இவ்வளவுடான் ராகாப் கர்த்தரைப்பற்றி அறிந்திருந்தாளா? சில வசனங்களுக்கு பின்னர் ராகாப் “உங்கள் தேவனாகிய கர்த்தரே உயர வானத்திலும், கீழே பூமியிலும் தேவனானவர்” (யோசு:2:11) என்று கூறுவதையும் கவனியுங்கள்.
நாம் ராகாபை வேதத்தில் சந்தித்தபோது அவளை எரிகோவில் கூட்டத்தில் ஒருத்தியாக வாழ்ந்த சாதாரணப் பெண்ணாக, பிழைப்புக்காக வேசித்தனம் பண்ணிய, இஸ்ரவேலால் புறஜாதி என்று அழைக்கப்பட்ட ஒரு கானானிய ஸ்திரியாகத்தான் பார்த்தோம்.
ஆனால் ராகாப் அந்த வேவுகாரரிடம் என்ன கூறுகிறாள் பாருங்கள்!
நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டபோது கர்த்தர் உங்களுக்கு முன்பாக சிவந்த சமுத்திரத்தின் தண்ணீரை வற்றிப்போகப்பண்ணினதையும், நீங்கள் யோர்தானுக்கு அப்புறத்தில் சங்காரம் பண்ணின எமோரியரின் இரண்டு ராஜாக்களாகிய சீகோனுக்கும், ஓருக்கும் செய்ததையும் கேள்விப்பட்டோம் (யோசு: 2:10)
தேவனாகிய கர்த்தர் இஸ்ரவேல் மக்களை வனாந்தரம் வழியாக நடத்தியதும், சிவந்த சமுத்திரத்தைப் பிளந்ததும், மன்னாவால் போஷித்ததும், எதிரிகளை முறியடித்ததும் அவள் காதுகளில் எட்டியிருந்தன! கேள்விப்பட்டோம் என்ற இந்த வார்த்தை ஏதோ ஒரு காதுக்குள் போய் மறு காது வழியே வெளியேறிய கட்டுக்கதையைக் குறிக்கவில்லை! கேள்விப்பட்டதை அவள் ஆராய்ந்தாள், சிந்தித்தாள், இஸ்ரவேலின் தேவன் மகா பெரியவர் என்று அறிந்தாள்! இப்பொழுது இஸ்ரவேலின் வேவுகாரரை தன் வீட்டுக்குள்ளேயே பார்த்ததும் தான் கேள்விப்பட்டவைகளைக் கோர்வையாக்கி முழு நம்பிக்கையுடன் உங்கள் கர்த்தரை நான் அறிவேன் என்றாள்.
கர்த்தர் ஏன் ஒரு வேசியை தெரிந்து கொண்டார்? ஏன் இஸ்ரவேலின் வேவுகாரரை எரிகோவில் வாழ்ந்த எல்லோரையும் விட்டுவிட்டு இந்த வேசியின் வீட்டுக்குள் போக அனுமதித்தார்? என்று ஒருவேளை நம்மில் பலர் கேட்கலாம்!
நாம் எங்காவது ஒரு ஊருக்கு போனால் அங்கே யாராவது நமக்கு தெரிந்தவர்கள் வீடு இருந்தால் போய் தங்கமாட்டோமா? எங்கே நமக்கு வரவேற்பு கிடைக்குமோ அங்கேதானே போவோம்? அப்படித்தான் கர்த்தர் ராகாபின் வீட்டைத் தெரிந்து கொண்டு தன்னுடைய ஊழியக்காரரை அவள் வீட்டுக்குள் அனுப்பினார்! ஏனெனில் ராகாப் தன் செவிகளில் கேள்விப்பட்டதை, இருதயத்தில் ஏற்றுக்கொண்டு, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை அறிந்திருந்தாள்!
நாம் சாதாரணமாக கடந்து வருகிற ஒவ்வொரு அனுபவங்களையும், நம்முடைய வாழ்க்கையில் நடக்கிற ஒவ்வொரு சம்பவங்களையும், நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரையும் கூட கர்த்தர் தம்மை நமக்கு வெளிப்படுத்த உபயோகிக்கலாம்!
ஆண்டவரே உம்மை எனக்கு வெளிப்படுத்தும்!
அப்பொழுது உம்மை நான் உண்மையாய் நேசிப்பேன்!
ஆண்டவரே உம்மை எனக்கு வெளிப்படுத்தும்!
அப்பொழுது உம்மை நான் உண்மையாய் சேவிப்பேன்!
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்
பின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும்.
ராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி! இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். உங்கள் கருத்துகளைத் தவறாமல் எழுதுங்கள்!

Beautiful and moving story of a wonderful prostitute! If God wants to accomplish His Work He can use any body!! God used a donkey, in opening its mouth to deal with Baalam!! God uses ordinary people for His extraordinary purposes!!! May you see more blosomed flowers in Rajavin Garden!!!!