Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

மலர் 6 இதழ் 359 திக்கு தெரியாத வனாந்திரத்தில்!

யாத்தி:14: 1,4 கர்த்தர் மோசேயை நோக்கி: ஆகையால் பார்வோன் அவர்களைப் பின் தொடரும்படிக்கு நான் அவன் இருதயத்தை கடினப்படுத்தி, நானே கர்த்தர் என்பதை எகிப்தியர் அறியும்படி, பார்வோனாலும், அவனுடைய எல்லா ராணுவத்தாலும் மகிமைப்படுவேன் என்றார்….

கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களை கானானை நோக்கி நடக்க விடாமல், அதற்கு எதிர் திசையில் வழிநடத்தி சமுத்திரத்துக்கும், வனாந்திரத்துக்கும் இடையே பாளையமிரங்க கட்டளையிட்டார் என்று பார்த்தோம்.

 
பார்வோனின் அரண்மனையில் பரபரப்பு!

கோஷேன் நாட்டிலிருந்து புறப்பட்ட இஸ்ரவேலரை அவர்கள் வணங்கும் யேகோவா முட்டாள் தனமாக கானானை நோக்கி வழி நடத்தாமல் எதிர் திசையில் வழி நடத்தியிருக்கிறாராம், அவர்கள் திகைத்து போய் சமுத்திர கரையில் பளையமிரங்கியிருக்கிறார்கள் என்ற செய்தியை பார்வோனின் இரகசிய தூதுவர்கள் கொண்டு வந்ததுதான் அதற்கு காரணம்.

 

கண்ணில்லாத, செவியில்லாத கடவுளை பின்பற்றும் மதி கெட்ட ஜனங்கள்! வனாந்திரத்தில் அலைந்து திரிந்து விட்டு கடைசியில் என்னிடமே வரப்போகிறார்கள்! என்று வானம் அதிருமாறு பார்வோன் நகைத்தான்,

 

இரதங்களைப் பூட்டுங்கள், எகிப்திலுள்ள எல்லா இரதங்களையும் தயார் செய்து இஸ்ரவேலரை பின் தொடருங்கள் என்று  ஆணையிட்டான்.

 
ஒருபுறம் சமுத்திரம்! மறுபுறம் வனாந்திரம், அலைந்து திரிந்து திகைத்து நிற்கும் போது,  எகிப்தியரின் குதிரைப் படையினர் ஒருபக்கம் நெருங்கி வருகின்றனர். பார்வோன் உன்னை விடமாட்டேன், உன்னை என்னுடைய அடிமைத்தனத்துக்குள் மறுபடியும் கொண்டு வருவேன் என்று துரத்துகிறான்.

 
அன்று இஸ்ரவேலரைப் பின் தொடர்ந்த பார்வோனுக்கு கர்த்தர் ஒரு செய்தியை வைத்திருந்தார்! இன்று உன்னைப் பின்தொடரும் பார்வோனுக்கும் ஒரு செய்தியை வைத்திருக்கிறார்!

 
என்ன தெரியுமா? அவருடைய பிள்ளைகளாகிய நாம் இந்த ஆபத்திலிருந்து இரட்சிக்கப் படுவது மட்டுமல்ல, நம்முடைய இந்த சமுத்திர அனுபவத்தால் அவர் மகிமைப் படுவார்! வானத்தையும் பூமியையும் படைத்த தேவாதி தேவனின் நாமம் நம் மூலமாய் மகிமைப்படும்!

 
ஒருவேளை இன்று உன்னைப் பார்த்து சாத்தான் என்கிற பார்வோன் நகைத்து, நீ தனிமையாக பல இன்னல்களின் மத்தியில் வாழ்வதைப் பார்த்து கிண்டல் செய்து, நீ தேவனாகிய கர்த்தர் என்பவரை நம்பி என்ன பிரயோஜனம்? மறுபடியும் என்னுடைய அடிமைத்தனத்துக்குள் வந்து விடு என்பானாகில், நீ இன்று அவனுக்கு தேவன் அன்று பார்வோனுக்கு கொடுத்த நானே கர்த்தர் என்பதை எகிப்தியர் அறியும்படி, பார்வோனாலும், அவனுடைய எல்லா ராணுவத்தாலும் மகிமைப்படுவேன் என்ற செய்தியைக் கொடுத்து யுத்தத்தின் முடிவில் யாருக்கு வெற்றி என்பதை கொஞ்சம் ஞாபகப்படுத்து.

 
பரலோகத்தின் தேவனும், தேவ சேனைகளும் நம்மோடு இருக்கும் போது வனாந்திரத்தைக் கண்டோ அல்லது சமுத்திரத்தைக் கண்டோ அல்லது பார்வோனின் இரதங்களைக் கண்டோ பயம் எதற்கு?

 
எரேமியா: 1: 19 அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம் பண்ணுவார்கள்: ஆனாலும் உன்னை மேற்கொள்ள மாட்டார்கள்; உன்னை இரட்சிக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment