Archive | April 22, 2016

மலர் 6 இதழ் 374 நீரில் வரும் தொற்று நோய் போன்ற தீர்மானம்!


லேவி: 24: 10 -12 ”அக்காலத்திலே இஸ்ரவேல் ஜாதியான ஸ்திரிக்கும், எகிப்திய புருஷனுக்கும் பிறந்த புத்திரனாகிய ஒருவன், இஸ்ரவேல் புத்திரரோடேக்கூட புறப்பட்டு வந்திருந்தான். இவனும், இஸ்ரவேலனாகிய ஒரு மனிதனும் பாளயத்திலே சண்டை பண்ணினார்கள்.

அப்பொழுது இஸ்ரவேல் ஜாதியான அந்த ஸ்திரியின் மகன் கர்த்தரின் நாமத்தை நிந்தித்து தூஷித்தான். அவனை மோசேயினிடத்தில் கொண்டு வந்தார்கள். அவன் தாயின் பேர் செலோமித். அவள் தாண் கோத்திரத்தானாகிய திப்ரியின் குமாரத்தி.

கர்த்தரின் வாக்கினாலே தங்களுக்கு உத்தரவு வருமட்டும், அவனைக் காவல் படுத்தினார்கள்.

நாம் நேற்று இந்த கதையை வாசித்தோம்! இந்தக் கதையின் மூலம் வாழ்க்கையில் நாம் எடுக்கும் தீர்மானங்களைப் பற்றி நாம் படிக்கப்போவதாக நான் கூறினேன்.

இன்று இந்தக் கதையில் வரும் தாய் எடுத்த தீர்மான சரியா தவறா என்று படிக்கலாம். இஸ்ரவேல் குமாரத்தியாகிய அவள் ஒரு எகிப்தியனை மணந்தது

சரியா? தவறா?

லேவியராகமத்தில் புதைந்து கிடக்கிறது இந்த பெண் செலோமித்தின் கதை! அவளுடைய பெயர் வேதாகமத்தில் இடம் பெற்றிருப்பதே ஆச்சரியப்பட வேண்டிய விஷயம்! வேதத்தில் பெண்களின் பெயர் அதிகமாக இல்லை. அவள் தாண் கோத்திரத்தானாகிய திப்ரியின் குமாரத்தி என்றும் எழுதப்பட்டுள்ளது. இது மிக முக்கியமான தகவல், ஏனெனில், பெண்கள் திருமணத்துக்குப் பின்னால் இன்னாருடைய மனைவி என்று கூறப்படுவார்களே தவிர இன்னாருடைய குமாரத்தி என்று இல்லை!

இந்தக் கதையில் இன்னும் என்ன அவளைப் பற்றி வாசிக்கிறோம்? அவளுக்கும், எகிப்தியன் ஒருவனுக்கும் பிறந்த ஒரு குமாரன் இருந்தான்! இந்த பிள்ளை எப்படி பிறந்திருக்கக்கூடும்?

ஒருவேளை இந்த எகிப்தியன் அவளை பலவந்தமாய் கர்ப்பமாக்கியிருக்கலாம், அல்லது அவள் அடிமையாய் வேலை செய்த இடத்தில் இந்த எகிப்தியன் மேல் அவள் காதல் கொண்டு அவனுடைய இச்சைக்கிணங்கி குழந்தை பெற்றிருக்கலாம்!

அல்லது 400 வருடங்கள் அடிமைத்தனத்தில் வாழ்ந்ததால் தேவனுடைய வழியை விட்டு விலகி இந்த குடும்பம் தன் மகளை ஒரு எகிப்தியனுக்கு மணமுடித்துக் கொடுத்திருக்கலாம்! அவள் இன்னாருடைய குமாரத்தி என்று வேதம் சொல்லுவதால், அவளுடைய திருமணம் எகிப்தியரால் அங்கீகரிக்கப்படவில்லை என்று தெரிகிறது.

அவர்கள் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து புறப்பட்டபோது, இவள் கணவன் எகிப்தில் தங்கி விட்டு, செலோமித்தையும் அவள் குமாரனையும், தன் தகப்பன் குடும்பத்தோடு அங்கிருந்து புறப்பட அனுமதித்திருக்கலாம்!

இது எப்படி நடந்ததோ தெரியவில்லை! ஒன்று மாத்திரம் தெரிகிற்து! இந்தப் பெண் தன்னுடைய வாழ்க்கையின் ஏதோ ஒரு தருணத்தில் ஒரு அந்நியனோடு, இஸ்ரவேலின் நம்பிக்கைக்கும், விசுவாசத்துக்கும் நேர்மாறான ஒருவனோடு தன்னை இணைத்துக் கொண்டாள்!  ஒருவேளை ஒரு எகிப்தியனை மணந்தால், அவள் குழந்தை அந்த தேசத்தில் தன்னைப்போல அடிமையாக வாழ வேண்டியதிருக்காது என்ற சின்ன ஆசை கூட இருந்திருக்கலாம்! அல்லது ஒரு சின்ன சுதந்திரம், சிறு சந்தோஷம், அடிமைத்தன வேதனையிலிருந்து ஒரு சிறு விடுதலையை இந்த ஈடுபாடு அவளுக்கு கொடுத்திருக்கலாம்! அப்பொழுது அவளுக்கு இஸ்ரவேலின் தேவனகிய கர்த்தர் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை!

என் அன்பு கர்த்தருடைய பிள்ளைகளே, நீங்களும், நானும் எத்தனைமுறை செலோமித்தைப் போல நடந்து கொள்கிறோம்? ஒரு சிறு ஆசையை, சிற்றின்பத்தை, திருப்தியை நம் மனமும் சரீரமும் நாடித் தேடும்போது, சாத்தான் அழகையும், பணத்தையும், புன்னகையையும் அள்ளி அள்ளி வீசும் வாலிபர்களை நம் முன் அனுப்புகிறான். நாம் அடித்தது யோகம் என்று ஏறிய வாழ்க்கைக் கப்பல், டைடானிக் என்று அறியுமுன்னதாகவே அது பனிப்பாறையில் மோதி நொறுங்கிப்போகிறது.

வாழ்க்கையில் எடுக்கும் தவறான தீர்மானங்களால் தான், நம் மத்தியில் அநேக செலோமித்துகள் தனியாக பிள்ளைகளை வளர்க்கும் நிலையில் உள்ளனர்.

நம் வாழ்க்கையை தீர்மானிக்கும் சுதந்திரம் நமக்கு நிச்சயமாக உண்டு! ஆனால் சில நேரங்களில் நாம் தவறாக எடுக்கும் தீர்மானங்கள் நம்மை மட்டும் அல்ல, நீரில் வரும் தொற்று நோய் போல , அது நம்மோடு இருப்பவர்களையும் பாதித்து விடுகிறது. செலோமித் செய்த தவறு அவள் குமாரனை எவ்வாறு பாதித்தது என்று திங்கள் அன்று பார்ப்போம்!

உபாகமம்: 30:19 “ நான் ஜீவனையும், மரணத்தையும், ஆசிர்வாதத்தையும், சாபத்தையும் உனக்குமுன் வைத்தேன் என்று உங்கள் மேல் வானத்தையும் பூமியையும் இன்று சாட்சி வைக்கிறேன்: ஆகையால்  நீயும் உன் சந்ததியும் பிழைக்கும்படிக்கு நீ ஜீவனை தெரிந்துகொண்டு..”

 

கர்த்தராகிய ஆண்டவர் நம் முன்னால் ஜீவனையும், மரணத்தையும், ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் வைப்பது மட்டுமல்ல, அதை தீர்மானிக்கும் சுதந்திரத்தையும், பொறுப்பையும் நமக்கே கொடுக்கிறார். நம் வாழ்வில் நடக்கும் எல்லாவற்றிற்கும் நாமே பொறுப்பாளியாகிறோம்.

உன் வாழ்வை சீரழித்த தீர்மானத்தை நீ சற்று திரும்பிப்பார்! அது முன்குறிக்கப்பட்ட தீர்மானம் அல்ல, உன்னால் தெரிந்துக்கொள்ளப் பட்ட தீர்மானம்தான் என்பது உனக்கு தெரியும்!

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

premasunderraj@gmail.com