Archive | April 19, 2016

மலர் 6 இதழ் 371 சரீர தூய்மைக்கான கற்பனைகள்!

 

சங்கீதம்: 19:8  “ கர்த்தருடைய நியாயங்கள் செம்மையும், இருதயத்தை சந்தோஷிப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய கற்பனை தூய்மையும், கண்களைத் தெளிவிக்கிறதுமாயிருக்கிறது.”

 

தூய்மை என்ற வார்த்தை உங்களுக்கு எதை ஞாபகப்படுத்துகிறது என்று தெரியவில்லை, ஆனால் எனக்கு சிறு வயதில் பிடித்தமான Pears சோப்பு தான் வரும். அதில் கண்ணை வைத்து பார்த்தால் பளிச்சென்று தெளிவாக இருப்பதால், அதுதான் தூய்மையை கொடுக்கும் என்ற எண்ணம் எனக்கு.

உங்கள் ஒவ்வொருவருக்கும் தூய்மை என்றவுடன் ஏதாவது ஒன்று ஞாபகத்துக்கு வரும்! மின்ன ல டி க்கும் வெண்மைக்கு ரின், பத்தே நொடிகளில் சுத்தத்துக்கு லைஃப்பாய், போன்ற விளம்பரங்கள் நம் மனதில் நிலைக்கின்றன.

ஆனால் தூய்மை என்ற வார்த்தை, இஸ்ரவேல் புத்திரருக்கு எதை ஞாபகப்படுத்தியிருக்கும்? அவர்களைப் போல நாமும் சீனாய் வனாந்திரத்தில் வாழ்ந்து கொண்டிருப்போமானால் தூய்மை என்றவுடன் என்ன அர்த்தம் சொல்லியிருப்போம்?

பல்லாயிரக்கணக்கான மக்கள் நாடோடிகளாக வனாந்திரத்தில் வாழும்போது, கழிவறைகளோ, ஆஸ்பத்திரியோ இல்லாதபோது, தங்க வீடுகள் இல்லாமல் கூடாரத்தில் வசிக்கும்போது, கால்நடையாக வனாந்திரத்தில் நடந்து கொண்டிருக்கும்போது தூய்மை என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் கொடுப்பார்கள்?

சுனாமி நம் கடலோரப் பகுதியை தாக்கியபோது நூற்றுக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து பொதுநலக்கூடங்களில் தங்க வைக்கப் பட்டனர். அவர்களுக்கு பொருளுதவி செய்ய சென்ற போது, பல  நாட்கள் குளிக்காத மக்களின் வாடை குப்பென்று அடித்தது. அப்படிப்பட்ட நேரங்களில் எத்தனை விதமான தொற்று நோய் பரவுகிறது என்பதும் நாம் அறிந்த உண்மையே.

சுத்திகரிப்புக்கு எந்த வசதியும் இல்லாத வாழ்க்கை நடத்திய இஸ்ரவேல் மக்களுக்கு தேவன், தொற்று நோய்கள் வராமலிருக்க தூய்மைக்கான கட்டளைகளைக் கொடுத்தார். எய்ட்ஸ் என்ற நோய் எவ்விதமாக பரவுகிறது என்று நன்கு தெரியும். ஒரு மனிதனின் இரத்தத்துக்கு அந்த நோயை வேகமாக பரப்பும் வல்லமை உள்ளது. இப்படியாக நோயை ஒருவரிடமிருந்து ஒருவருக்கு பரப்பும் தன்மை இரத்தத்துக்கு இருந்த படியால் தான், நாடோடியாய், சரியான வசதிகள் இல்லாமலிருந்த மக்களுக்கு ‘உதிர சுத்திகரிப்புக்குரிய ’ கட்டளைகளை லேவியராகமம் 12 ம் அதிகாரத்தில் கர்த்தர் கொடுத்தார். ஒரு ஸ்திரி,  குழந்தை பெற்ற பின் எவ்வாறு உதிர சுத்திகரிப்பு முடியும் வரை இருக்க வேண்டும் என்று இந்த அதிகாரம் விளக்குகிறது.

இந்த கட்டளையை தேவன் கொடுத்ததால் அவர் பெண்களை அவமதிக்கவில்லை. இதன் மூலம் பெண்களையும், அவர்களுடைய குடும்பத்தையும், அவர்களுடைய சமுதாயத்தையும் தேவன் பலவிதமான தொற்று நோய்களிலிருந்து காப்பாற்றினார். நம்முடைய சரீரம் இயங்கும் முறை, நம்மை விட நம்மை உருவாக்கினவருக்குத் தான் நன்றாகத் தெரியும். அவர் ஒரு நல்ல தகப்பனைப் போல நம்முடைய நன்மையை கருதியே இவ்வித கட்டளைகளை கொடுத்தார்.

யாத்தி: 15:26 ல் “ நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தை கவனமாய்க்கேட்டு, அவர் பார்வைக்கு செம்மையனவைகளை செய்து, அவர் கட்டளைகளுக்கு செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன்; நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றார்.

 

அதுமட்டுமல்ல, லேவியராகமத்தில் தேவன் உள்ளத்தின் தூய்மையின் முக்கியத்தையும் மக்களுக்கு உணர்த்தினார்.

லேவி: 18:4 ”என்னுடைய நியாயங்களின்படி செய்து, என்னுடைய கட்டளைகளை கைக்கொண்டு நடவுங்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.”

என்று உள்ளத்தின் தூய்மைக்கு அடிப்படை ஆதாரம், கர்த்தருக்கு நம் வாழ்வில் முதல் இடம் கொடுப்பதே என்பதை தெளிவாகக் கூறினார்.

லேவி: 19:18 பழிக்குப்பழி வாங்காமலும், உன் ஜனப்புத்திரர்மேல் பொறாமைகொள்ளாமலும், உன்னில் நீ அன்பு கூறுவது போல் பிறனிலும் அன்பு கூறுவாயாக; நான் கர்த்தர்.” என்றார்.

தேவனகிய கர்த்தர் எதைத் தொட்டாலும் குற்றம் என்பது போலக் கொடுத்த கட்டளைகள், நம்மை உள்ளும், புறம்பும் தூய்மைப்படுத்துவதற்கேயன்றி, அடக்கி ஆளுவதற்கில்லை என்பது தெளிவாக புரிகிறதல்லவா? இன்று நாம் வாசித்த வேத பகுதி போல கர்த்தருடைய கற்பனை தூய்மையும், கண்களைத் தெளிவிக்கிறதுமாயிருக்கிறது.” ஏனெனில் அவர் தூய்மையின் தேவன். உள்ளும் புறம்பும் தூய்மையை நம்மிடம் விரும்புகிறார்.

”இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாகியவான்கள்; அவர்கள் தேவனை தரிசிப்பார்கள்.” மத்தேயு:5:8

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

premasunderraj@gmail.com