Archive | April 18, 2016

மலர் 6 இதழ் 370 சத்திய வார்த்தை!


 

சங்கீதம்: 25:4,5 “ கர்த்தாவே உம்முடைய வழிகளை எனக்கு தெரிவியும்; உம்முடைய பாதைகளை எனக்கு போதித்தருளும்.

உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்தி போதித்தருளும்; நீரே என் இரட்சிப்பின் தேவன், உம்மை நோக்கி நாள் முழுதும் காத்திருக்கிறேன்.

நாம் லேவியராகமத்தின் மூலமாய் தம்மை வெளிப்படுத்தும் தேவனாகிய கர்த்தரின் தன்மைகளைப் பற்றி படித்து வருகிறோம். அவரைப் பற்றியும், அவருடைய கிரியைகள் பற்றியும் முழுவதும் அறிந்து கொள்ள நமக்கு இந்த லேவியராகம புத்தகம் உதவுகிறது.

இந்த புத்தகத்தில் நாம் சில காரியங்களை மிக நுணுக்கமாக காண்கிறோம். விசேஷமாக பலியிடுதல், சுத்திகரிப்பு, சில நோய்கள், திருமணங்கள், எதை சாப்பிடலாம், எதை சாப்பிடக்கூடாது என்பவை விளக்கமாக எழுதப்பட்டுள்ளது.
பலியிடுதலைப் பற்றிய விளக்கங்கள் நமக்கு கேள்வியை உண்டாக்குகிறது. அன்பின் உருவான தேவன் ஏன் இந்த பலியிடுதலை விரும்பினார்? என்ற எண்ணம் உங்களுக்கு வந்ததில்லையா?

இதற்கு விளக்கம் தேவையானால் நாம் ஏதேன் தோட்டத்துக்கு செல்ல வேண்டும்.

அருமையான மாலைக் காற்று! ஏவாள் தன கையில் ‘ புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியை தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்கதும்’ என்று எண்ணி ஒரு விருட்சத்தின் கனியை தானும் புசித்து, அதை தன் கையில் ஏந்தி ஆதாமை நோக்கி ‘ இங்கே வாருங்களேன்! இந்த பழத்தை சாப்பிட்டு பாருங்க! என்ன ருசி! அப்பா, மூளையின் அணுக்களைத் தட்டி எழுப்பி விடுகிறது, தேவர்களைப் போல உணர்வு கொடுகிறது. ஆதாம் தயவு செய்து இந்த பழத்தை சாப்பிடுங்க! இதற்காக வருந்த மாட்டிங்க!’  என்று கூற, ஆதாமும் மறு பேச்சில்லாமல் அந்த கனியை அவளிடத்தில் வாங்கிப் புசிக்கிறான். தேவன் இதை புசிக்க வேண்டாமென்று கட்டளையிட்டரே என்ற சிறு எண்ணம் கூட அப்போது அவனுக்கு தோன்றவில்லை. நீங்கள் இதைப் புசிக்கக் கூடாது, அதை புசிக்கும் நாளில் சாகவே சாவீர்கள் ( ஆதி: 2:17) என்ற தேவனுடைய வார்த்தை அவர்களுக்கு சத்தியமாகத் தோன்றவில்லை, இதைப் புசித்தால் நீங்கள் சாகவே சாவதில்லை, மாறாக நீங்கள் தேவர்களைப் போலாவீர்கள் ( ஆதி:3:4)  என்ற சர்ப்பத்தின் வார்த்தை அவர்களுக்கு சத்தியமாய்த் தோன்றியது!

சில நேரங்களில் இரண்டுபேருடைய வாயிலிருந்து சத்தியமாக இதுதான் உண்மை என்ற செய்தி வரும்போது நாம் குழம்பி போவதில்லையா? ஏவாள் தேவனுடைய வார்த்தையை விசுவாசித்து நம்பி கீழ்ப்படியாமல், சாத்தானுடைய வார்த்தையை நம்பி ஏமாந்து போனாள்.

நமக்கு நன்கு தெரியும் இதன் பின்னர் நடந்தவை! எத்தனை முறை தன்னுடைய கீழ்ப்படியததால் வந்த தண்டனையை நினைத்து குமுறியிருப்பாள். ஒரு நிமிட சோதனைக்கு இடம் கொடுத்ததால் விளைந்த பலனை தன்னுடைய பிள்ளைகள் தலைமுறை தலைமுறையாக அனுபவிப்பதைப் பார்த்து வேதனையுற்றிருப்பாள்.  பாவம் அவர்களை தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்தது.

இஸ்ரவேல் மக்கள், ஒவ்வொரு முறையும் ஒரு ஆட்டுக்குட்டி பாவத்துக்கு பலியாக இரத்தம் சிந்தியபோது,  பாவத்தின் சம்பளம் மரணம் என்ற கடினமான உண்மை அவர்கள் உள்ளத்தை ஊடுருவியது. ஒவ்வொரு முறையும் பரிதாபமான ஒரு ஆட்டுக்குட்டியின் இரத்தம் சிந்தப்பட்ட போது,  தேவனாகிய கர்த்தர், நம்முடைய ஆதி பெற்றோருக்கு ”அதை புசிக்கும் நாளில் சாகவே சாவீர்கள்” என்று கூறிய சத்திய வார்த்தை ஞாபகத்துக்கு வந்தது. இரத்தம் சிந்துதலில்லாமல் பாவமன்னிப்பு இல்லை!

சத்தியத்தின் தேவனாகிய கர்த்தர் நம்மை அவருடைய வார்த்தைக்கு செவிகொடுக்கும் படியாய் கூறுகிறார். ஏனெனில் அவருடைய வார்த்தை சத்தியம்! ஆனால் நாமோ அநேக முறை அவருடைய வார்த்தைக்கு செவிகொடாமல் போகிறோம்..

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சத்திய வார்த்தைகளை இறுகப்பற்றிக் கொள்வோமானால், சாத்தானுடைய பொய்யான ஏமாற்று வார்த்தைகளில் சிக்கிக் கொள்ள மாட்டோம்.

அவர் வார்த்தை சத்தியம்! அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்! அவர் கொடுத்த வாக்கை நிச்சயமாக நிறைவேற்றுவார்! விசுவாசித்து கீழ்ப்படி!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

premasunderraj@gmail.com