Archive | April 15, 2016

மலர் 6 இதழ் 369 தொட்டால் சிணுங்கி போலவா?

சங்கீதம்: 119:133 “ உம்முடைய வார்த்தையிலே என் காலடிகளை நிலைப்படுத்தி, ஒரு அநியாயமும் என்னை ஆளவொட்டாதேயும்.”

 

நாம் இன்று வேதத்தில் லேவியராகமத்தை படிக்க ஆரம்பிக்கிறோம். அநேகர் இதை வாசிக்க கஷ்டப் படுகிறதை பார்த்திருக்கிறேன். புரியவில்லை, சொன்னதையே திருப்பி சொல்வது போல உள்ளது என்று பலர் கூறுவார்கள்.

அடுத்த சில வாரங்கள் நாம் லேவியராகமத்தின் மூலமாய் தம்மை வெளிப்படுத்தும் தேவனாகிய கர்த்தரின் தன்மைகளைப் பற்றி படிப்போம். அவரைப் பற்றியும், அவருடைய கிரியைகள் பற்றியும் முழுவதும் அறிந்து கொள்ள நாம் வாசிக்கவே விரும்பாத லேவியராகம புத்தகம் உதவும்.

லேவியராகமம் என்ற பெயர் இந்த புத்தகத்துக்கு சூட்டப் பட்டதின் காரணம் என்ன தெரியுமா? யாக்கோபின் பன்னிரண்டு குமாரரில் ஒருவனான லேவியின் கோத்திரத்து புத்திரர், தேவனுடைய சமுகத்தில் நின்று சேவை செய்யும் ஆசாரியராக தெரிந்து கொள்ளப்பட்டவர்கள். தேவனாகிய கர்த்தர் தம்முடைய ஊழியக்காரராகிய ஆசாரியருக்கு கொடுத்த கட்டளைகளை இந்த புத்தகத்தில் வாசிக்கிறோம். இதில் நாம் வாசிக்கும் காரியங்கள் அனைத்தும், தேவனாகிய கர்த்தர் தம்முடைய தாசனாகிய மோசேயின் மூலம், ஆசாரியனாகிய ஆரோனுக்கும், ஆரோன் மூலமாய் இஸ்ரவேல் மக்கள் அனைவருக்கும் தம்மைப் பற்றி வெளிப்படுத்தி கொடுத்த கட்டளைகள்.

 

இன்று நாம் இந்த புத்தகத்தின் மூலம் நாம் நம் தேவனாகிய கர்த்தரை ஒழுங்கு முறைகளை நிலைப்படுத்துகிற தேவனாகக் காண்போம். நான் இதை முதலில் எழுதுவதற்கு காரணம் என்னவெனில், சில நேரங்களில் நாம் இந்த புத்தகத்தில் தேவனாகிய கர்த்தரை தொட்டால் சிணுங்கியைப் போல உணருகிறோம் அல்லவா? இதைத் தொட்டால் குற்றம், அதைத் தொட்டால் குற்றம், காணிக்கை இப்படி செலுத்தப் பட வேண்டும், பலி இப்படி செலுத்தப் பட வேண்டும்,  பலியிடப்படும் ஆடுகள் இவ்வாறு வெட்டப்பட வேண்டும் என்பது போன்ற சில கட்டளைகள் கர்த்தரை நமக்கு கொடூரமானவராகக் காட்டுகிறது அல்லவா?

லேவியராகமம் 11 ம் அதிகாரத்துக்கு வரும்போது, நாம் மிருக ஜீவன்களில் எவற்றை சாப்பிடலாம், எவற்றை சாப்பிடக் கூடாது என்ற கட்டளைகள், நம் தலையை சுற்ற வைத்து விடுகின்றன. அதைப் போலத்தான் ஆசாரியரின் ஆடையைப் பற்றின கட்டளைகளும்.

இந்த புத்தகத்தை வாசிக்கும்போது தேவனாகிய கர்த்தர் இஸ்ரவேல் மக்களுக்கு நிலைப்படுத்திய ஒழுங்கு முறைகள் தான் நம் கவனத்துக்கு வருகிறது. ஆனால் இவற்றை ஏன் தேவன் கொடுத்தார்?  400 வருடங்கள் இஸ்ரவேல் மக்கள் அடிமைத்தனத்தில் வாழ்ந்து வந்ததால் அவர்களுக்கு எந்த ஒழுங்கு முறைகளும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. அதனால் இந்த புத்தகத்தில் நாம் வாசிக்கும் தகன பலிகளான காணிக்கைகளாகட்டும், சுத்திகரிப்பாகட்டும், அல்லது உள்ளே பின்னி பிணைத்திருக்கும் சில வாழ்க்கை வரலாறுகளாயிருக்கட்டும், இவை அனைத்திலும், நாம் கர்த்தர் தம்மை ஒழுங்கு விதிமுறைகளின் தேவனாக வெளிப்படுத்துவதைக் காண்கிறோம்.

நான் நடத்தி வந்த நிறுவனத்தில் பெண்கள் துணியில் கிராஸ் ஸ்டிச் என்கிற தையலில் வசனங்களை தைப்பார்கள். பின்னர் அதில் உள்ள துண்டு நூல்களை வெட்டி எடுத்து விட்டு, துவைத்து, கஞ்ஜி போட்டு காய வைத்து, அயன் பண்ணி, பின்னால் ஒரு அட்டையை வைத்து, இழுத்து, கண்ணாடி உறைக்குள், டிசைன் வெளியே தெரியும்படி வைத்து, பிரேம் பண்ணினாற் போல் பக்குவமாக வைப்பார்கள். அந்த கடைசி வேலைதான் அதை நிலைப் படுத்தி அழகு கொடுத்து, வெளி நாடுகளுக்கு எக்ஸ்போர்ட் பண்ணும் தரத்துக்கு கொண்டு வரும்

இந்த வேலையைத் தான் கர்த்தரும் லேவியராகமத்தில் செய்வதைப் பார்க்கிறோம். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களின் சந்ததியாரை தம்முடைய சொந்த ஜனமாக தெரிந்து கொண்ட பின்னர், 400 வருடங்கள் அடிமைத்தனத்தில் வாழ்ந்து, தரமில்லாமல் இருந்த இந்த மக்களை, தரமுள்ள தம்முடைய ஜனமாக நிலைப் படுத்துவதற்காகத்தான் இத்தனை ஒழுங்கு முறைகளை கற்றுக் கொடுத்தார். அநியாயமும், முரட்டு தனமும் இவர்களை ஆளவொட்டாதிருக்க இந்த விதிமுறைகள் தேவைப் பட்டன.

இன்று கர்த்தரகிய இயேசு கிறிஸ்து நம் வாழ்க்கையிலும் நாம் தரமுள்ள வாழ்க்கை வாழும்படியாய், தம்முடைய  வேத வார்த்தைகள் மூலமாய் நம்மை நிலைப்படுத்துகிறார். நம்மை நேசிக்கும் தேவன் நம்மில் கிரியை செய்து நம்முடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்துகிறார்.

நாம் செய்வதில் குற்றம் காண்பவர் அல்ல நம் தேவன்! நாம் செய்வதை சரிவர செய்யும்படி ஒழுங்கு முறைகளை கடைப்பிடிக்க செய்பவர்!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

premasunderraj@gmail.com