Archive | April 12, 2016

மலர் 6 இதழ் 366 பட்டுப் போன ஒற்றை மரம்!

யாத்தி:22:22,23 ”விதவையையும், திக்கற்ற பிள்ளையையும் ஒடுக்காமல் இருப்பீர்களாக;

அவர்களை எவ்வளவாகிலும் ஒடுக்கும்போது, அவர்கள் என்னை நோக்கி முறையிட்டால், அவர்கள் முறையிடுதலை நான் நிச்சயமாய்க் கேட்டு..”

 

நாம் சில நாட்களாக, கர்த்தர் தம்முடைய பிள்ளைகளுக்கு கொடுத்த கட்டளைகளைப் பற்றி தியானித்துக் கொண்டிருக்கிறோம்.

என்னுடைய வால்பாறை வீட்டில் ஒரு அழகிய சில்வர் ஓக் மரம் நின்றது. அது இலைகளை பரப்பியவிதமாக நின்றபோது அநேக பறவைகள் அதன் மேல் வந்து உட்காரும். மயில் தோகை விரித்து ஆடுவது போல அதன் இலைகள் காற்றில் சலசலக்கும். சில காரணங்களால் அந்த மரம் திடீரென்று பட்டு போனது. அந்தக் காய்ந்த மரத்தைத் தேடி பறவைகள் வருவது நின்று போனது. ஒருநாள் காலையில் அந்த பட்ட மரத்தின் உச்சியில் ஒரு பறவை அமர்ந்து யாரையோ தேடுவது போல குரலை உயர்த்தி கூப்பிட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்தேன்.

இந்த சோக காட்சி, தனக்கு அன்பானவர்களை இழந்து தனிமை என்ற கொடுமையில் வாடும் என்னுடைய சில நண்பர்களைத் தான் ஞாபகப்படுத்தியது. அவர்கள் வாழ்க்கை பூத்து குலுங்கிய நாட்கள் மறைந்து போய், வெறுமையாய், தனிமையாய் வாழ்வதைப் பார்க்கும்போது வேதனை தான் வரும். அவர்கள் கண்களில் காணும் வெறுமை, ஏதோ கடமைக்காக வாழ்கிறோம் என்பது போல அவர்கள் வாழும் வாழ்க்கை, இவையெல்லாம் நம்மால் மறுக்க முடியாதவை!

அதனால் தான் கர்த்தர் ஆதியிலி்ருந்தே தம்முடைய பிள்ளைகளுக்கு விதவைகளை ஒடுக்காதீர்கள் என்று கட்டளையிட்டார். இந்த வசனத்தின் மூலமாய் கர்த்தர் எனக்கு என்ன கூறுகிறார் என்று நீங்கள் நினைக்கலாம். நம்முடைய வேகமாய் சுழலுகின்ற வாழ்க்கையில், விதவைகளையும், திக்கற்ற பிள்ளைகளையும் கவனிக்க நமக்கு எங்கே நேரம் இருக்கிறது? என்று எண்ணலாம்.

தேவனாகிய கர்த்தர், ஏசாயா 1:23 ல், யூதாவின் ராஜாக்களுக்கு, விதவைகளின் வழக்கை விசாரிக்கும்படியாக எச்சரிப்பு கொடுத்தார். ஏன் தெரியுமா? அவர்கள் பொன்னையும், வெள்ளியையும், பரிதானத்தையும், கைக்கூலியையும் நாடி அலைந்தார்கள் ஆனால் விதவைகளுக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை. அது கர்த்தருக்கு எரிச்சல் உண்டாக்கியது!

தனிமையில் வாடும் நண்பர்களுக்கு நாம் செய்யும் சிறு உதவிகளையும் கர்த்தர் கவனிக்கிறார். நீ இன்று அவர்களுக்கு செய்யும் சிறு உபகாரங்களுக்கும் பலனுண்டு.

நாம் அன்புடன் விசாரித்து செய்கிற தொலைபேசி அழைப்புகள், அவ்வப்போது பேசுகிற ஆதரவான சில வார்த்தைகள், நம்முடைய நட்பு, அவர்களுடைய துக்கத்தில் நாம் எடுக்கிற பங்கு, எப்பொழுதும் நாம் அவர்களோடு இருப்போம் என்று நாம் கொடுக்கிற மன தைரியம், சரீரப்பிரகாரமாய் நாம் செய்கிற சிறு உதவிகள், இவை அனைத்தும் கர்த்தருடைய பார்வையை நிச்சயமாக சென்று அடையும்.

விதவைகளையும், திக்கற்றவர்களையும் அலட்சியப்படுத்தாதே! இது தேவனின் கட்டளை!

இன்றே உன்னால் முடிந்த சிறு காரியங்களை செய்! நேரமில்லை என்ற காரணத்தைக் கூறாதே!

இன்று பட்டுப் போன ஒற்றை மரமாய்க் காணப்படும் நம் நண்பர்கள் தேவனுடைய பார்வையில் விசேஷமானவர்கள்!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

premasunderraj@gmail.com