Archive | April 6, 2016

மலர் 6 இதழ் 362 கோணலான வாழ்க்கை செவ்வையாகும்!

யாத்தி: 21: 1 மேலும் நீ (மோசே) அவர்களுக்கு அறிவிக்கவேண்டிய பிரமாணங்களாவன;

 

இன்று காலையில் என் வீட்டு வாசலில் பூத்து குலுங்குகிற African Tulips என்ற செந்நிற மலர்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். மரத்தின் நுனி கிளைகளில்,கொத்து கொத்தாக, அடுக்கடுக்காக பூத்து, இந்த இடத்துக்கே ஒரு தனி அழகைக் கொடுக்கிறது. இந்த மலர்களைப் பார்த்துக் கொண்டிருந்த போது கர்த்தரின் படைப்பில் இந்த மலர்கள் தான் எத்தனை விதம் என்று ஆச்சரியப் பட்டேன். ஒவ்வொரு மலரிலும் ஒரு தனி அழகைக் கண்டு ரசிக்கலாம்.

 

காட்டில் மலரும் மலர்களில் ஒவ்வொரு மலர்களுக்கும் தனி அழகையும், நிறத்தையும்,தனி தன்மையையும் அளித்து உருவாக்கிய தேவன், நம்மை எவ்வாறு உருவாக்கியிருப்பார்! ஒவ்வொரு தனி மனிதனும் கர்த்தருடைய பார்வையில் எவ்வளவு விசேஷித்தவர்களாக இருந்திருப்பார்கள்! அதனால் தான் கர்த்தர் நாம் ஒருவரையொருவர் அன்போடும், மரியாதையோடும் நடத்தவேண்டும் என்று விரும்புகிறார்.

 

அன்று ஆதாமும் ஏவாளும் பாவம் செய்து ஏதேனை விட்டு அனுப்பபட்ட பின்னர், ஒருவரையொருவர் மதிப்பது அப்பட்டமாக குறைவுபட்டு விட்டது.

பொறாமை,கொலை, வேசித்தனம் போன்ற பாவங்கள் ஜனங்களின் மத்தியில் தலை தூக்கின. நாம் மோசேயை பற்றி படிக்கும்போது மனிதர்கள் ஒருவரையொருவர் அடிமைகளாக அடக்கி ஆள ஆரம்பித்துவிட்டனர்.

 

தம்முடைய ஜனங்கள் பாவத்தில் வாழ்வதை கண்ட தேவன் ஆபிரகாமை நோக்கி உன் சந்ததியார் 400 வருடங்கள் அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருந்து, அங்கே அவர்களை சேவிப்பார்கள் என்று ஆதி:15:13 ல் கூறுகிறார்.

என்னால் சிந்தித்து பார்க்கவே முடியவில்ல. ஒவ்வொரு குழந்தையும் பிறக்கும்போது, அது தங்களைப் போலவே அந்த தேசத்தில் அடிமையாகவே வாழும் என்று பெற்றோருக்கு தெரியுமானால் அவர்கள் உள்ளம் எவ்வளவு குமுறும்! அந்த நிலை தான் இஸ்ரவேல் மக்களுக்கு இருந்தது. தலைமுறை தலைமுறையாக அடிமைகளாக வாழ்ந்துவந்தனர்.

 
ஆறு தலைமுறைகளுக்கு மேல் அடிமைகளாக வாழ்ந்த இஸ்ரவேல் மக்களுக்கு எகிப்தை விட்டு வெளியேறிய போது, சாட்டை அடி வாங்கி, முரட்டுத் தனமாய் வாழ்ந்த வாழ்க்கையை தவிற, வேறு வாழ்க்கை முறை தெரியவில்லை. அவர்கள் தலைவர்களுக்கும் அடிமை வாழ்க்கையே பழகியிருந்தது. தங்கள் வாழ்க்கையை சரியான முறையில் அமைத்துக் கொள்ள தெரியாமல், எகிப்தியரின் கட்டளைகளுக்கு அடிபணிந்து வாழ்ந்து தான் அவர்கள் பழக்க வழக்கமாயிருந்தது. பார்வோனின் கட்டளைக்கு அடிபணியாமல் போனால் மரணம்தான் தண்டனை என்பதால், மனிதனின் உயிருக்கு இருந்த மதிப்பே அவர்களுக்கு தெரியவில்லை. அதனால் தான் எகிப்திலிருந்து விடுதலையான இந்த இஸ்ரவேலர் என்ற அடிமைகள் அடிக்கடி மோசேயை பார்த்து முறுமுறுப்பதையும், அதிருப்தியோடு நடந்து கொள்வதையும் காண்கிறோம்.

 
இதை அறிந்த நம் தேவனாகிய கர்த்தர் அவர்களுக்கு மோசேயின் மூலம், புதிய வாழ்க்கை முறைகளை, ஒருவரையொருவர் மதித்து அன்போடு நடக்கும் வழிமுறைகளை அல்லது பிரமாணங்களை கற்றுக் கொடுத்தார். இவற்றை தான் நாம் யாத்தி:21 லிருந்து வாசிக்கிறோம்.

 நித்திய பொறுமையுள்ள நம் தேவனாகிய கர்த்தர் நாம் எவ்வளவு குறைவு பட்டவர்களாக  அவரிடம் வந்தாலும் நம்மை நேசித்து, நேரான வழியில் நம்மை நடத்துவார் என்பதை நாம் நன்கு அறிவோம் அல்லவா!

அவர் அடிமைத்தனம் என்ற கோணலான வாழ்க்கையிலிருந்து இஸ்ரவேல் மக்களை விடுவித்து, அவர்களை சீர்ப்படுத்தி, தனக்கு சொந்தமான ஜனமாக மாற்றி, அந்த இஸ்ரவேல் மக்கள் மூலமாய் இந்த உலகத்துக்கு இரட்சகரை கொடுத்த அற்புதம் ஒரு மகா அற்புதம் தானே!

 

ஆகையால் நம்முடைய தேவன் இஸ்ரவேல் மக்கள் மூலமாய் நமக்கு அளித்த ஒரு சில பிரமாணங்களை படித்தபின்னர் நாம் யாத்திராகமத்தை விட்டு கடந்து செல்வோம்.

கர்த்தர் தாமே இந்த தம்முடைய வார்த்தையின் மூலம் உங்களை ஆசீர்வதிப்பாராக!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்