Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

மலர் 6 இதழ் 368 கர்த்தருக்கு கொடுப்பதில் வியாபார எண்ணமா?


 

யாத்தி: 35:22 “மனப்பூர்வமுள்ள ஸ்திரீ, புருஷர் யாவரும், அஸ்தகடங்கள், காதணிகள், மோதிரங்கள், ஆரங்கள் முதலான சகலவித பொன்னாபரணங்களையும் கொண்டு வந்தார்கள்.”

நேற்று நாம் தேவனை ஆராதிப்பதைப் பற்றி பார்த்தோம். இன்று நாம் வாசிக்கிற பகுதி, இஸ்ரவேல் மக்கள், தேவன் வாசம் பண்ணும் பரிசுத்த ஸ்தலத்தின் கட்டுமானப் பணிக்கு, காணிக்கைகளை மனமுவந்து கொண்டு வந்ததைப் பார்க்கிறோம்.

இதில் மனப்பூர்வமுள்ள என்ற ஒரு வார்த்தை இருக்கிறது. அதின் அர்த்தம் என்ன? யாராலும் உந்தப்படாமல் தானாக முன் வந்து கொடுத்தல், அல்லது எதையும் பதிலுக்கு எதிர் பாராமல் கொடுத்தல் என அர்த்தம் ஆகும். மனப்பூர்வமாய் கொடுத்தல் என்பது ஒரு உயர்ந்த குணத்தையும் காட்டுகிறது.

அப்படியானால் இவர்கள் எந்த டிவி பிரசங்கிமாரும் இவ்வளவு பணம் அனுப்புங்கள் என்று கேட்காமலே தேவனுடைய ஊழியத்துக்கு மனமுவந்து கொடுப்பவர்கள், மற்றும் இவர்கள் தேவனிடத்தில் பெரிய தொகையை எதிபார்த்து ஊழியத்துக்கு கொடுக்காமல், தேவன் கொடுத்திருக்கிற ஈவுகளுக்காக நன்றி செலுத்தி காணிக்கையை கொடுப்பவர்கள்.

எப்பொழுதும் கர்த்தர் எனக்கு என்ன செய்வார்? என்ற வியாபார எண்ணத்தைவிட, கர்த்தருக்கு நான் என்ன செய்யக் கூடும்? என்ற உயர்ந்த எண்ணம் கொண்டவர்கள்.

சிலரைப் பார்த்திருக்கிறேன், அவர்களை பிழிந்து, உலுக்கி எடுத்தால் தான் காணிக்கை வெளியே வரும். ஆனால் யாத்திராகமம் 35 ம் அதிகாரத்தில் ஜனங்கள் எப்படிக் கொடுத்தார்கள்?

அவர்கள் கர்த்தர் எனக்கு என்ன செய்கிறார் என்று பார்த்து விட்டு அவருக்கு கொடுக்கிறேன் என்று கூறுவதாக எங்கும் இல்லை. மாறாக அவர்கள் வற்றாமல் அள்ளிக் கொடுத்ததில், காணிக்கை மிக அதிகமாய் வந்து குவிந்ததால், மோசே அவர்களைப்பார்த்து காணிக்கைகளை கொண்டு வராதீர்கள் என்று கட்டளையிட வேண்டியிருந்தது (யாத்தி:36:6).

நீங்கள் காணிக்கைகளை கொண்டு வந்தது போதும் நிறுத்துங்கள், இந்தப் பணிக்கு அதிகமாய் பணம் வந்து விட்டது என்று மோசே ஜனங்களுக்கு கட்டளையிட்டதைப் போன்ற சம்பவத்தை நான் இந்த நாட்களில் கேள்விப்பட்டது கூட இல்லை.

மனப்பூர்வமாய் கொடுத்தல் தேவனை ஆராதிப்பது ஆகும்! உலகம் கற்றுக் கொடுப்பது நாம் காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளவேண்டும், கிடைக்கும்போதே எதிர் காலத்துக்காக சேர்த்து வைத்துக் கொள்ளவேண்டும் என்பதாக இருக்கலாம்! ஆனால் நாம் உற்சாகமனதாய், மனப்பூர்வமாய் தேவனுடைய பணிக்கு கொடுப்போமானால் தேவன் அதில் பிரியப்படுவார், மகிமையடைவார்.

காணிக்கை கொடுக்கும்போது கணக்கு பார்க்காதீர்கள்! காணிக்கை கொடுத்ததால் குறைந்து போய் விட்டதாக எண்ணாதீர்கள்!  காணிக்கையாக பத்து ரூபாய் கொடுத்ததால், கர்த்தர் உங்களுக்கு நூறு ரூபாயாக திருப்பி தரவேண்டும் என்று எதிர் பார்க்காதீர்கள்! அவர் முதலில் என்னை ஆசிர்வதிக்கட்டும், பின்னர் நான் கொடுக்கிறேன் என்று எண்ணாதீர்கள்!

கர்த்தர் எனக்காக எவ்வளவோ செய்திருக்கிறார், அதற்கு ஈடாக நான் எதைக் கொடுப்பேன் என்ற அன்பு உங்கள் உள்ளத்தின் ஆழத்திலிருந்து அருவியாய்ப் பாயட்டும்! இதுவே நாம் செய்யும் மனப்பூர்வமான ஆராதனை!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

premasunderraj@gmail.com

1 thought on “மலர் 6 இதழ் 368 கர்த்தருக்கு கொடுப்பதில் வியாபார எண்ணமா?”

  1. தேவனை ஆராதனை பற்றி அறிந்துக் கொள்ள இந்த பகுதி மிகவும் ஆசீர்வாதமாக இருந்தது. நாம் தேவனுக்கு கொடுப்பதில் எந்த எதிர்பார்ப்பும் நம்மில் இருக்க கூடாது அதுவே உண்ணையான ஆராதனை என்பதை மிகவும் தெளிவாக எழுதியிருக்கிற ஆசிரியார் அவர்களுக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.

Leave a comment