Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

மலர் 6 இதழ் 377 தவறான தீர்மானத்தின் விளைவு?


லேவி: 24: 10 -12 ”அக்காலத்திலே இஸ்ரவேல் ஜாதியான ஸ்திரிக்கும், எகிப்திய புருஷனுக்கும் பிறந்த புத்திரனாகிய ஒருவன், இஸ்ரவேல் புத்திரரோடேக்கூட புறப்பட்டு வந்திருந்தான். இவனும், இஸ்ரவேலனாகிய ஒரு மனிதனும் பாளயத்திலே சண்டை பண்ணினார்கள்.

அப்பொழுது இஸ்ரவேல் ஜாதியான அந்த ஸ்திரியின் மகன் கர்த்தரின் நாமத்தை நிந்தித்து தூஷித்தான். அவனை மோசேயினிடத்தில் கொண்டு வந்தார்கள். அவன் தாயின் பேர் செலோமித். அவள் தாண் கோத்திரத்தானாகிய திப்ரியின் குமாரத்தி.

கர்த்தரின் வாக்கினாலே தங்களுக்கு உத்தரவு வருமட்டும், அவனைக் காவல் படுத்தினார்கள்.

இந்தக் கதையின் மூலம் நாம் வாழ்க்கையில் எடுக்கும் தீர்மானங்கள் நம்மை எவ்வாறு பாதிக்கின்றன என்று பார்த்தோம். இந்தக் கதையில் வருபவர்கள் எடுத்த தீர்மானங்கள், மற்றும் அந்த தீர்மானங்களால் ஏற்பட்ட நன்மை தீமைகள் இவற்றை இந்த கதையின் மூலம் கண்டோம்.

நாம் இந்தக் கதையில் வந்த பெண் செலோமித் எடுத்த தீர்மானம் சரியா தவறா என்று பார்த்தோம்!  சில நேரங்களில் நாம் தவறாக எடுக்கும் தீர்மானங்கள் நம்மை மட்டும் அல்ல, நீரில் வரும் தொற்று நோய் போல , அது நம்மோடு இருப்பவர்களையும் பாதித்து விடுகிறது. இஸ்ரவேல் குமாரத்தியான  செலோமித் ஒரு எகிப்தியனை மணந்ததால் செய்த தவறு அவள் குமாரனையும்  பாதித்தது என்று படித்தோம்.

அது மட்டுமல்ல, அவளுடைய மகன் கர்த்தரின் நாமத்தை நிந்தித்து, தூஷிக்க எடுத்த தீர்மானம் சரியா? தவறா என்று பார்த்தோம்! பாளயத்தில் வாழ்ந்த இந்த இளைஞன் நிச்சயமாகத் தேவனாகிய கர்த்தரின் மகிமையைப் பற்றி அறிந்திருப்பான். ஆனாலும் அவனுடைய வார்த்தையால் அவரை தூஷிக்க, அவருடைய நாமத்தை முள்ளால் குத்தி கிழிக்கத் துணிந்து தீர்மானம் எடுக்கிறான்.

நேற்று நாம், இந்த சம்பவத்தில் இஸ்ரவேல் மக்கள் எடுத்த தீர்மானம் சரியா? தவறா? என்று தியானித்தோம்! இஸ்ரவேல் மக்களும் மோசேயும் தேவனுடைய வாக்குக்காக காத்திருந்தனர். நம்முடைய வாழ்க்கையில் எந்த சூழ்நிலையிலும், வேதம் நம்மை வழிநடத்த முடியும். கப்பலில் பொருத்தப்பட்டுள்ள திசை காட்டியைப் போல நம்மை சரியான வழியில் நடத்தும்.

கடைசியாக, தவறான தீர்மானங்கள் எடுப்பதால் வரும் விளைவுகளைப் பற்றி சிந்திக்கலாம்!

கர்த்தர் மோசேயுடன் பேசி, செலோமித்தின் குமாரனை பாளயத்திலிருந்து வெளியெ கொண்டு வந்து கல்லெறிந்து கொல்லும்படியாகக் கட்டளையிட்டார். ஏனெனில் அசுத்தமான யாவும் பாளயத்துக்கு புறம்பாக தள்ளப்பட்டது. ஆதாம், ஏவாள் பாவம் செய்தபோது அவர்கள் ஏதேன் தோட்டத்துக்குப் புறம்பாகத் தள்ளப்பட்டனர் அல்லவா? விசுவாசிகளகிய நாமும் தவறுகள் செய்யும்போது, தேவனுடைய பிரசன்னத்துக்கு புறம்பாகத் தள்ளப்படுகிறோம்!

கர்த்தருடைய பரிசுத்த நாமத்தின் மேல் பயம் உள்ளவன், மரியாதை உள்ளவன், எவனும் கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்கமாட்டான்.

இன்று நாம் தேவனுடைய நாமத்தை தூஷிப்பதில்லையா?

பொய்யாணையிடுதல் தேவனுடைய நாமத்தை பரிசுத்தக்குலைச்சலாக்குகிறது (லேவி:19:12)

திருடுதல் தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்குதல், ( நீதி:30:9)

என்று வேதம் சொல்லுகிறது!

இன்று கர்த்தர் தேவதூஷணம் கூறுகிற ஒவ்வொருவரையும் கல்லெறி்ந்து கொலை செய்யும்படி கட்டளையிட்டால் நம்மில் எத்தனைபேர் வீழ்ந்துபோவோம்?

அதுமட்டுமல்ல, மத்தேயு: 30:31 கூறுகிறது, ”ஆதலால் நான் உங்களுக்கு சொல்லுகிறேன்,; எந்த பாவமும், எந்த தூஷணமும் மனுஷருக்கு மன்னிக்கப்படும்: ஆவியானவருக்கு விரோதமான தூஷணமோ மனுஷருக்கு மன்னிக்கப்படுவதில்லை.” என்று.

இயேசு கிறிஸ்து பூமியில் வாழ்ந்தபோது அவரை மறுதலித்தவர்கள், சிலுவையில் அறைந்தவர்கள் கூட மன்னிக்கப்படலாம், ஆனால் இன்று பரிசுத்த ஆவியானவர் நம்மிடம் இயேசு கிறிஸ்துவைக் குறித்துக் கொடுக்கும் சாட்சியை மறுதலிப்பவனுக்கு மன்னிப்பே கிடையாது என்பதே இதன் அர்த்தம்.

இன்று ஒருவேளை அவர் நம்மை கல்லெறிந்து கொல்லாமல் இருக்கலாம்! ஆனால் நியாயத்தீர்ப்பின் நாள் விரைந்து வருகிறது! அன்று

”தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாய் அவனவனுக்குப் பதிலளிப்பார்.”  (ரோமர்:2:6)

நீ ஆயத்தமா?

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

premasunderraj@gmail.com

Leave a comment