Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

மலர் 6 இதழ் 365 நாமும் அந்நியராயிருந்தோம்!


 

யாத்தி: 22:21 “அந்நியனை சிறுமைப் படுத்தாமலும், ஒடுக்காமலும் இருப்பீர்களாக! நீங்களும் எகிப்து தேசத்தில் அந்நியர்களாயிருந்தீர்களே.”

நாம் சில நாட்களாக, கர்த்தர் தம்முடைய பிள்ளைகளுக்கு கொடுத்த கட்டளைகளைப் பற்றி தியானித்துக் கொண்டிருக்கிறோம்.

இதை எழுத ஆரம்பிக்கும் போது பல அனுபவங்கள் மனக்கண் முன் வருகின்றன! பல மாகாணங்களுக்கு வேலையின் காரணமாக சென்றிருக்கிறோம். எத்தனை பேர் எங்களை அன்புடன் உபசரித்தனர்! எல்லாவற்றுக்கும் மேலான அனுபவம் ஒரு அந்நிய தேசத்து குடும்பம் முன்பின் அறியாத எங்களுக்கு தங்க இடம் கொடுத்து உபசரித்ததுதான்!

நாங்கள் லக்னோவில் வாழ்ந்து கொண்டிருந்த போது ஒருநாள் காரில் பிரயாணப்பட்டு நேப்பாள தேசத்தில் உள்ள பொக்காரோ என்ற புகழ்மிக்க இடத்திற்கு சென்றோம்.

பொக்காரோவை அடைந்த போது நடு இராத்திரி ஆகிவிட்டது. அன்று மாலையிலிருந்தே , அங்கு ஊருக்குள் நுழைய விடாமல் கிராம மக்கள் ஆர்ப்பட்டத்தில் இறங்கியிருந்தனர். அடிக்கடி ஏற்படும் சாலை விபத்தினால் பாதிக்கப்பட்டிருந்தனர் அவர்கள். நாங்கள் சென்ற அன்று ஒரு குழந்தை காரில் அடிபட்டு இறந்ததால் அந்த உடலை சாலையில் கிடத்திக் கொண்டு அந்த கிராமத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். பல மைல்கள் தூரத்துக்கு கார்களும், பஸ்களும் நிறுத்தப்பட்டிருந்தன! அருகில் இருந்த எல்லா விடுதிகளும் பல மடங்கு கட்டணத்தில் நிரம்பி விட்டன.

நீண்ட நேர பிரயாணத்தினால் எங்கள் சரீரம் களைப்படைந்திருந்தது.எங்களுடன் கூட சென்னையிலிருந்த வந்த ஐந்து வயதில் முதிர்ந்தவர்களும் இருந்தனர். சற்று மனத்தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அடைக்கப்பட்டிருந்த ஒரு பேக்கரியை தட்டினோம். அதன் உரிமையாளர் எங்களை வரவேற்று, எந்த எதிர்பார்ப்புமில்லாமல் தங்க இடம் கொடுத்து, பிப்ரவரி மாத குளிரில் மூடவும் விரிக்கவும் கம்பளிகளையும் கொடுத்து உதவினார்.

நிம்மதியாக இளைப்பாறி காலையில் பிரயாணத்தை தொடர்ந்தோம். நான் இதைப் பற்றி சிந்திக்கும் போது,  இன்று சென்னையில், நடு இரவில் என் வீட்டை யாராவது தட்டி தங்க இடம் கேட்டால் நான் எப்படி நடந்து கொள்வேன் என்று நினைப்பதுண்டு!

தேவனாகிய கர்த்தர் நமக்கு கொடுத்த கட்டளைகளில் அந்நியனை சிறுமைப் படுத்தாமலும், ஒடுக்காமலும் இருப்பீர்களாக ஏனெனில் நீங்களும் எகிப்து தேசத்தில் அந்நியர்களாயிருந்தீர்களே என்றார்.

நாங்கள் எங்கே அந்நியராயிருந்தோம் என்று நீங்கள் எண்ணலாம்!

சுவிசேஷத்துக்கு அந்நியரும், புறஜாதியினருமான நம்மை, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நேசித்து, நம்மை இரட்சித்து, தம்முடைய பெரிய கிருபையினாலே நம்மை அவருடைய் குடும்பத்தின் அங்கமாக்கினார். ஆனால் நாமோ நம்முடைய திருச்சபைக்கு வரும் புது அங்கத்தினரைக் கூட கண்டு கொள்வதில்லை.

இராவில் வந்து கதவைத் தட்டுபவர்களை விடுங்கள்! நம் வீட்டில் வேலை செய்பவர்களை நாம் எப்படி நடத்துகிறோம்? நம் நிறுவனத்தில் நமக்கு கீழ் வேலை செய்பவர்களை நாம் எப்படி நடத்துகிறோம்? நம்முடைய வீட்டின் அருகில் வசிக்கும் அந்நியரை, ஏழைகளை நாம் எப்படி நடத்துகிறோம்?

 

நாம் யாரையும் சிறுமைப் படுத்தவும், ஒடுக்கவும் கூடாது என்பது தேவனின் கட்டளை! 

வேலை செய்யும் இடத்திலும், வீட்டிலும் இந்த கட்டளைக்கு கீழ்ப்படிகிற பக்குவம் உனக்கு உண்டா?

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

premasunderraj@gmail.com

Leave a comment