பிலிப்பியர் 3:11 அவருக்காக எல்லவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன்
நாம் கடந்த ஆண்டின் முடிவில் தேவனாகிய கர்த்தர் தம்முடைய பிள்ளைகளுக்குக் கொடுத்த சில முக்கியமான கட்டளைகளைப் பற்றி தியானித்துக் கொண்டிருந்தோம். நாம் பார்த்தவைகள் மட்டும் அல்லாமல், அந்நியரை உபசரித்தல், விதவைகளை பராமரித்தல் போன்ற இன்னும் அநேக கட்டளைகளையும் தேவனாகியக் கர்த்தர் கொடுத்திருக்கிறார்.
இப்பொழுது மறுபடியும் இஸ்ரவேல் மக்களின் வாழ்க்கை பிரயாணத்தை யாத்திராகம புத்தகத்தின் மூலம் தொடருவோம்.
யாத்திராகமம் 31ம் அதிகாரம் 18ம் வசனத்தில், கர்த்தர் சீனாய் மலையிலே மோசேயோடே பேசி, அவருடைய விரலினால் எழுதப்பட்ட கற்பலகைகளாகிய சாட்சியின் இரண்டு பலகைகளை அவனிடத்தில் கொடுத்தார். தேவனால் வாய் மொழியாய் கொடுக்கப்பட்ட கட்டளைகள் எழுத்தின் மூலமாய்க் கொடுக்கப்பட்டது இதுவே முதல்தடவையாகும்.
மோசே சீனாய் மலையிலிருந்து வரத் தாமதித்தபோது ஜனங்கள் முறுமுறுக்க ஆரம்பித்து விட்டனர். மோசே ஒருவேளை திரும்பி வரமாட்டான் என்று நினைத்து, தங்கள் கண்களால் பார்த்து, தொட்டு, உணர்ந்து வழிபட ஒரு தெய்வத்தை செய்யுமாறு ஆரோனை வற்புறுத்தி தங்களுடைய பொன் ஆபரணங்களை கழற்றிக் கொடுத்தார்கள்.
ஆரோனும் அவற்றை வாங்கி, ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பித்து, உங்களை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துக் கொண்டு வந்த உங்கள் தெய்வங்கள் இவைகளே என்றான். மறுநாள் அவர்கள் சர்வாங்க தகன பலிகளையும், சமாதான பலிகளையும் அந்த கன்றுக்குட்டிக்கு செலுத்தினார்கள்.
என்ன பரிதாபம்! இஸ்ரவேல் மக்கள் தங்கள் சிருஷ்டி கர்த்தராகிய தேவனை விட்டு விலகி, தங்களை இத்தனை அற்புதமாக எகிப்திலிருந்து விடுவித்து வழிநடத்திய தேவனை மறந்து, தங்களுடைய கையின் சிருஷ்டியை வணங்கினார்கள். எவ்வளவு சீக்கிரம் கர்த்தர் செய்த நன்மைகளை மறந்து போனார்கள்!
நான் அங்கிருந்திருந்தால் நிச்சயமாக கன்றுக்குட்டியை வணங்கியிருக்க மாட்டேன் என்றுதானே நினைக்கிறாய்! ஒரு நிமிடம்!
இது இஸ்ரவேல் மக்களுக்கு மட்டும் அல்ல நமக்கும் பழகிப்போன காரியம் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது! நம்மை இரட்சித்து, காத்து, நேசித்து வழிநடத்தும் நம்முடைய சிருஷ்டிகருக்கும் நமக்கும் நடுவே உலகப் பிரகாரமான காரியங்கள் நிலையான இடம் பெற்று விடுவதில்லையா? வேதம்வாசிக்கவும் ஜெபிக்கவும் கூடத் தடையாக நம்முடைய பணி, பணம் சம்பாதித்தல், சொத்து குவித்தல், நம்முடைய குடும்பம், பிள்ளைகள், ஒருசில சிற்றின்பங்கள் , ஆடம்பரம் இவை அனைத்தும் பொற்க்கன்றுக்குட்டியை போல நம்முடைய ஆராதனையை எடுத்துக் கொள்கின்றன அல்லவா? காரணம் என்ன??
யாரையாவது ஆராதிப்பது என்பது நம்முடைய மனிதத் தன்மைகளில் ஒன்று! ஒருவேளை நாம் நம்மை நேசித்து வழிநடத்தும் தேவாதி தேவனை முழு மனதோடு ஆராதிக்க தவறினால்……. நம்முடைய பார்வையை பிரியப்படுத்தும், உணர்ச்சியை தூண்டிவிடும், சிற்றின்பத்தை கொடுக்கும் காரியங்களை நாம் ஆராதிக்க ஆரம்பித்து விடுவோம்! இது சகஜம் தானே!
அப்படியானால் நாம் செய்யவேண்டியது என்ன? அப்போஸ்தலனாகிய பவுல் “ அவருக்காக எல்லவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன்” ( பிலிப்:3:11) என்று தேவாதி தேவனை ஆராதிப்பதைப் பார்க்கிறோம். தேவாதி தேவனுக்கு முன்பாக யாவையும் அற்பமும் குப்பையுமாக எண்ணிய ஆராதனை! தேவனை ஆராதிக்க எந்தப் பொன் கன்றுக்குட்டியும், எந்த சிற்றின்பமும், எந்த ஆடம்பரமும், எந்த பந்தமும் பாசமும் தடையாய் நிற்க முடியாத ஒரு ஆராதனை!
இந்தப் புதிய ஆண்டில் , ‘ அனைத்தும் கிறிஸ்துவுக்கே, என் அனைத்தும் அர்ப்பணமே! என் முழுத் தன்மைகள் , ஆவல்களும் அனைத்தும் கிறிஸ்துவுக்கே’ என்ற பாடலின் முழு அர்த்தமும் உணர்ந்து தேவனை ஆராதிக்கிறாயா? அல்லது உனக்கும், உன் தேவனுக்கும் நடுவே வேறே ஏதாவது, அல்லது வேறே யாராவது உன் ஆராதனைக்கு உரியவர்களாக உள்ளார்களா?
உனக்காக அனைத்தையும் தியாகம் செய்த கிறிஸ்துவுக்கு, உன்னுடைய அனைத்தையும் அர்ப்பணம் செய்! அதுவே நீ செய்யக்கூடிய புத்தியுள்ள ஆராதனை!
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்