Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

மலர் 6 இதழ் 385 – குழந்தைத்தனமான குணம்!

 

எண்ணா:21:7 அதினால் ஜனங்கள் மோசேயிடத்தில் போய்: நாங்கள் கர்த்தருக்கும் உமக்கும் விரோதமாய்ப் பேசினதால் பாவஞ்செய்தோம்; சர்ப்பங்கள் எங்களைவிட்டு நீங்கும்படி கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணவேண்டும் என்றார்கள்; மோசே ஜனங்களுக்காக விண்ணப்பம் பண்ணினான்.

என்னுடைய இரண்டு பேரன்மாரும் ஐபோனை ( iPhone) உபயோகிப்பதில் வல்லவர்கள்! ஒருவனுக்கு 3 வயது, மற்றொருவனுக்கு 3 1/2 வயது, ஆனால் அவர்களுடைய appக்கு சரியாகப் போகத் தெரியும்! பல வருடங்கள் உபயோகித்தவர்கள் போல சுலபமாக இயக்குவார்கள்! எங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும்! என்னை சுதந்திரமாக விடுங்கள், என்னால் எல்லால் செய்ய முடியும் என்ற குணம் அநேக சிறு பிள்ளைகளிடம் நாம் கண்டிருக்கலாம்!

இந்த குழந்தைத்தனமான குணம் சில நேரங்களில் நம்மிடம் கூட காணப்படுகிறது. குழந்தைகள் இப்படி நடந்து கொள்வது நமக்கு பெருமிதமாக இருக்கலாம். ஆனால் நாம், எனக்கு எந்த உதவியும் தேவை இல்லை, விசேஷமாக, கடவுளின் உதவி தேவை இல்லை, நானே என் வாழ்வை இயக்குவேன் என்று எண்ணுவோமானால் அது நமக்கு ஆபத்தாக முடியும்.

எண்ணாகமம் 21 ம் அதிகாரத்தில் முதல் சில வசனங்களில்  இஸ்ரவேல் மக்கள் கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்ததையும், கர்த்தர் அவர்களுக்கு இரங்கியதையும் காண்கிறோம். ஆனால் அடுத்த சில வசனங்களில் அவர்கள் முறுமுறுத்ததைப் பார்க்கிறோம். இங்கு அப்பமும் இல்லை, தண்ணீரும் இல்லை, இந்த அற்பமான உணவு எங்களுக்கு வெறுப்பாக இருக்கிறது என்ற கூக்குரலின் சத்தத்தைக் கேட்ட கர்த்தர் அவர்கள் மத்தியில் கொள்ளிவாய் சர்ப்பங்களை அனுப்பினார். இதில் ஆச்சரியம் என்ன? வனாந்திரத்தில் வாழ்ந்த அவர்களைக் காத்து வந்த கர்த்தர், நீர் எங்களுக்கு தேவையில்லை என்பது போல அவர்கள் நடந்து கொண்டவுடன், தம் காக்கும் செட்டைகளை நீக்கினார், உடனே வனாந்திர சர்ப்பங்கள் அவர்களை முற்றுகையிட்டன.

சர்ப்பங்கள் கூடாரங்களில் புகுந்தவுடன், தேவனை நோக்கி முறையிட்டனர், கர்த்தரை நோக்கி முறையிடுமாறு மோசேயிடம் கெஞ்சினர். பாட்டுக்கேற்ற ஆட்டம் ஆட ஆரம்பித்தனர் இஸ்ரவேல் மக்கள்.

தேவனுடைய மனுஷனாகிய மோசே அவர்களை நோக்கி, உங்களுக்கு இதுவும் தேவை, இதற்கு மேலும் தேவை, உங்களுக்காக நான் முறையிடமாட்டேன் என்று சொல்லாமல், அவர்களுக்காக தேவனை நோக்கி முறையிட்டான் என்று பார்க்கிறோம்.

தேவனாகிய கர்த்தரும்,’ உங்களுடைய மனந்திரும்புதல் ஒன்றுக்கும் உதவாது, நீங்கள் எத்தனை முறை இப்படி முறையிட்டு நான் பதில் கொடுத்தவுடன் பின்வாங்கி போயிருக்கிறீர்கள், இந்த முறை அது செல்லாது என்று அவர்களை கடிந்து கொள்ளாமல், அவர்கள் மேல் மனதுருகி, ஒரு வெண்கல சர்ப்பத்தை செய்து கம்பத்தின் மேல் கட்டி தூக்குமாறு கூறினார். சர்ப்பத்தினால் கடிபட்ட யாரும் வெண்கல சர்ப்பத்தை நோக்கினால் பிழைப்பான் என்றார். (எண்ணா:21:9)

கர்த்தர், பாம்பினால் கடிபட்ட புண்ணை ஆற்ற அவர்களுக்கு வல்லமையை கொடுக்கவில்லை, மோசேயையோ அல்லது எந்த மனிதனையோ பார்த்தால் பிழைப்பான் என்று சொல்லவில்லை, மரத்திலே கட்டப்பட்டு, தூக்கபட்ட வெண்கல சர்ப்பத்தை நோக்கிப் பார்த்து பிழைக்கும்படி கூறினார்.

இது நமக்கு என்ன அருமையான பாடத்தைக் கற்பிக்கிறது. நாம் நம்முடைய திறமைகளை, தாலந்துகளை, பணத்தை, பட்டத்தை, நம்பினாலும் நமக்கு இரட்சிப்பு இல்லை, தேவனுடைய ஊழியக்காரரையோ அல்லது எந்த மனிதரையோ நோக்கினாலும் நமக்கு இரட்சிப்பு இல்லை, சிலுவை மரத்தில் நமக்காக அவமான சின்னமாக அடிக்கப்பட்டு கட்டப்பட்ட இயேசுவை நோக்கினால் மாத்திரம்தான் நாம் பிழைப்போம்!

யோவான்:12:32 “ நான் பூமியிலிருந்து உயர்த்தப்படிருக்கும்போது, எல்லாரையும் என்னிடத்தில் இழுத்துக் கொள்ளுவேன்” என்று தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து இயேசு கூறினார்.

என் வாழ்வை நானே அமைத்துக்கொள்வேன் என்று குழந்தைத்தனமாக எண்ணாதே! உன்னால் உன்னை இரட்சிக்க முடியாது! இயேசுவை நோக்கிப் பார்! பிழைப்பாய்! உன் வேதனையிலிருந்து, வலியிலிருந்து, பாவ சுமையிலிருந்து இரட்சிப்பு உண்டு!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

premasunderraj@gmail.com

Leave a comment