Archive | May 25, 2016

மலர் 6 இதழ் 396 – கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்!

 உபாகமம்:2:7 ”உன் தேவனாகிய கர்த்தர் உன் கைக்கிரியைகளிலெல்லாம் உன்னை ஆசிர்வதித்து வருகிறார். இந்த பெரிய வனாந்தரவழியாய் நீ நடந்து வருவதை அறிவார். இந்த நாற்பது வருஷமும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருந்தார். உனக்கு ஒன்றும் குறைவுபடவில்லை..”

நேற்று நாம் உபாகமம் புத்தகத்தை ஆரம்பித்தோம். இந்த புத்தகம் இஸ்ரவேல் மக்களின் பிரயாணத்தை சரித்திரபூர்வமாக விளக்கும் புத்தகம் மாத்திரம் அல்ல, வல்லமையுள்ள தேவ மனிதனான மோசேயின் ஆவிக்குரிய பிரயாணத்தின் நாட்குறிப்பும்கூட என்று பார்த்தோம்.

 அன்றன்று கர்த்தர் கொடுக்கும் செய்தியை தியானமாக எழுதுவது என் வழக்கம். இன்றைய தியானத்துக்காக ஜெபத்தோடு இந்த புத்தகத்தை படிக்க ஆரம்பித்தபோது இந்த வசனம் கண்களில் பட்டது. இந்த வசனத்தை கர்த்தர் எனக்காகவே காண்பித்தார். ஏனெனில் நான் இதை எழுத ஆரம்பிக்கும்முன் வரவு செலவு கணக்குகளைப் பார்த்து விட்டு கலங்கிப்போயிருந்தேன்!

நம் எல்லோருக்கும் ஒவ்வொரு மாதமும் கவலைப்பட வைக்கும் அநேக செலவுகள் உண்டு. குழந்தைகள், வயதானவர்கள், சுகவீனமானவர்களை கவனிப்பது, எதிர்பார்க்காத செலவுகள், எதிர்பார்த்தற்கு மேலான செலவுகள் என்று ஏதாவது ஒன்று நடந்து நம்மை அதிர்சியிலும் கவலையிலும் ஆழ்த்தும்.

அப்படிப்பட்ட பார சுமையோடு நான் அமர்ந்திருந்தபோது உபாகமம் புத்தகத்திலிருந்து தேவனாகிய கர்த்தர் தம் தாசனாகிய மோசேயிடம் கூறிய இந்த வார்த்தைகள், கோரமான வெயிலினால் வாடிய மலரின்மேல் வானிலிருந்து விழுந்த பனித்துளி போல் இருந்தது. உண்மையை சொல்லப்போனால் கண்களில் நீர் பெருகியது.

உபாகமத்தில் மறைந்து கிடந்த இந்த முத்துக்கள் மூலம், கர்த்தர் என்னோடு பேசி, உனக்கு ஏதாவது குறை நான் வைத்திருக்கிறேனா?  உன் கையின் பிரயாசங்களையெல்லாம் ஆசிர்வதித்தேன். நீ நடந்து வரும் பாதையை அறிவேன். கடந்த 43 வருட கிறிஸ்தவ பிரயாணத்தில் நான் உன்னோடேகூட இருக்கிறேன். உனக்கு என்ன குறை வைத்தேன்? என்று கேட்பது போல இருந்தது. கடந்துவந்த பாதையை நினைவுகூறும்போது கர்த்தர் ஒருநாளும் எங்களை கைவிட்டதே இல்லை என்று திட்டமாக கூறமுடியும்.

தேவனுடைய தாசனாகிய மோசே தன்னுடைய நாற்பதுவருட அனுபவங்களை திரும்பி பார்க்க ஆரம்பித்தபோது, பரமபிதாவானவர் தாம் அவர்களோடு வனாந்தர பிரயாணம் முழுவதும் இருந்ததை ஞாபகப்படுத்தினார். கர்த்தர் மோசேயிடம்,

”மோசே நீங்கள் வனாந்தரத்தில் நடந்த போதும், கல்லும் முள்ளுமான பாதைகளை கடந்த போதும், தண்ணீர் கசப்பாக இருந்தபோதும், எதிரிகள் தாக்கியபோதும், மனசோர்புகள் தாக்கியபோதும் நான் உங்கள் அருகாமையில் உங்களோடு கூட நடந்து வரவில்லையா? மோசே இன்னொன்றும் மறந்து போகாதே கடந்த நாற்பது வருடமும் நீங்கள் ஒன்றிலும் குறைவு படவில்லை.” என்று நினைவூட்டினார்..

மோசே ஜனங்களை நோக்கி இந்த நாற்பது வருஷமும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருந்தார். உனக்கு ஒன்றும் குறைவுபடவில்லை, என்று நினைவூட்டினான்.

இவரே நம் தேவன்!  காட்டு புஷ்பங்களை உடுத்துவிக்கிறவர்! ஆகாயத்துப் பறவைகளைப் போஷிக்கிறவர்! உங்களுடைய தேவைகளை அறிந்தவர்! உன் வாழ்வில் குறைகள் உண்டா? பாரங்கள் உண்டா? தேவைகள் உண்டா? அவற்றையெல்லாம் கர்த்தரிடம் ஒப்புக்கொடுத்திருக்கிறாயா? இனி அவர் உனக்காக கவலைப்படுவார்! நீ கவலைப்படத் தேவையில்லை!

 ஏன் வருகிற மாதத்தைக் குறித்து கவலைப்படுகிறாய்? ஏன் எதிர்காலத்தைக் குறித்து கலங்குகிறாய்?? கடந்து வந்த பாதையை நினைத்துப்பார்! அவர் உன்னோடு நடந்து கொண்டிருப்பதை உணர்வாய்! அவர் என்றுமே உன்னை விட்டு விலகினதில்லை!

அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால் உங்கள் கவலைகளையெல்லாம் அவர் மேல் வைத்துவிடுங்கள். ( 1 பேது: 5:7 )

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

 

பின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும்.

ராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி!  இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். உங்கள் கருத்துகளைத் தவறாமல் premasunderraj@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள்

Advertisements