Archive | May 17, 2016

மலர் 6 இதழ் 390 – பகலில் சுட்டெரிக்கும் வெயில்!


 

எண்ணாகமம்: 14: 30 இந்த வனாந்தரத்தில்…… உங்களில் இருபது வயதுமுதல், அதற்கு மேற்ப்பட்டவர்களாக எண்ணப்பட்டு உங்கள் தொகைக்கு உட்பட்டவர்களும், எனக்கு விரோதமாய் முறுமுறுத்தவர்களுமாகிய அனைவர்களின் பிரேதங்களும் விழும்.

எப்புன்னேயின் குமாரன் காலேபும், நூனின் குமாரன் யோசுவாவும் தவிர, மற்றவர்களாகிய நீங்கள், நான் உங்களை குடியேற்றுவேன் என்று ஆணையிட்டுக் கொடுத்த தேசத்தில் பிரவேசிப்பதில்லை.”

இதை வாசிக்கும்போது என்னுடைய பள்ளிக்கூட நாட்கள்தான் நினைவுக்கு வந்தது.

நான் ஆறாவது படிக்கும்போது என்னுடைய வகுப்பில் இருந்த ஒருசில மாணவர்கள், சின்ன இடைவேளை கிடைத்தாலும் சத்தமாகப் பேச ஆரம்பித்து, பயங்கர சுட்டிதனம் பண்ணுவார்கள். ஒருநாள் அப்படியாக ஓலமிட்டுக்கொண்டிருந்த போது அங்கு வந்த எங்கள் தலைமை ஆசிரியர், எங்கள் எல்லோரையும் மேஜை மேல் ஏறி, கையினால் வாயை மூடிக்கொண்டு ஒருமணி நேரம் அமரச்செய்தார். இந்த தண்டனை வகுப்பில் சுட்டித்தனம் பண்ணி, சத்தம்போட்டு பேசினவர்களுக்கு மட்டும் இல்லை, முரட்டாட்டம் பண்ணினவர்களுக்கு மட்டும் இல்லை, எங்களைப் போன்ற அப்பாவி மாணவர்களுக்கும் சேர்ந்துதான் கிடைத்தது!

இங்கு கர்த்தர் அவருக்கு விரோதமாய் முறுமுறுத்தவர்களுக்கு மாத்திரம் அல்ல, காலேபையும், யோசுவாவையும் தவிர இருபது வயதிற்கு மேற்ப்பட்ட அத்தனைபேரும் கானானுக்குள் பிரவேசிப்பதில்லை என்று கூறுகிறார்.

ஒருநிமிடம் காலேபையும், யோசுவாவையும், அவர்கள் குடும்பத்தாரையும் பற்றி சற்று யோசித்து பாருங்கள்!

காலேபும், யோசுவாவும் கர்த்தருக்காக நின்றவர்கள்! கர்த்தரின் வழிநடத்துதலை விசுவாசித்தவர்கள்! மற்றவர்களை விசுவாசத்தில் ஊக்குவித்தவர்கள்! அவர்களுக்கும், அவர்கள் பிள்ளைகளுக்கும், அவர்கள் மனைவிமாருக்கும் என்ன கிடைத்தது பாருங்கள்! இன்னும் நாற்பது வருட வனாந்தர வாழ்க்கை! அவர்கள் இருவரும் கானானுக்குள் பிரவேசிப்பார்கள் என்று கர்த்தர் கூறினாலும் அது அந்த நாற்பது வருடங்கள் கழிந்த பின்னர்தானே! நாற்பது வருட வனாந்தர வாழ்க்கையை அவர்களும், மற்றும் அங்கிருந்த அநேகமாயிரம் விசுவாசிகளும் ஏன் அனுபவிக்க வேண்டும்?

இது நியாயமா? அக்கிரமக்காரரின் அக்கிரமங்களால் நீதிமான்கள் தண்டிக்கப்படலாமா? என்று நம் மனது கேட்கலாம். அன்று மட்டும் அல்ல இன்று கூட அப்படித்தானே நடக்கிறது! சில நேரங்களில் அவர்கள் நம்மைவிட நன்றாகவே வாழ்கிறதை நம் கண்கூடாகப் பார்க்கிறோம் அல்லவா?

பகலில் கொளுத்தும் வெயில் கெட்டவர்களை மட்டுமா சுட்டெரிக்கிறது?

இதைக் காணப் பொறுக்காத சங்கீதக்காரன் “ துன்மார்க்கரின் வாழ்வை நான் காண்கையில், வீம்புக்காரராகிய அவர்கள் மேல் பொறாமை கொண்டேன்” (சங்:73:3) என்கிறான். அதுமட்டுமல்ல, அவன் தன்னை சுற்றிப் பார்த்துவிட்டு “ இதோ இவர்கள் துன்மார்க்கர்; இவர்கள் என்றும் சுகஜீவிகளாயிருந்து, ஆஸ்தியைப் பெருகப்பண்ணுகிறார்கள்”  (சங்:73:12) என்றும் கூறுகிறான். ”நான் விருதாவாகவோ என் இருதயத்தை சுத்தம் பண்ணினேன்? என்றும் பரிதபிக்கிறான்.(சங்:73:13)

சங்கீதக்காரன் மட்டுமல்ல நானும் அவ்வாறு அநேகந்தரம் நினைத்ததுண்டு. சிறுவயதிலிருந்து இயேசுவை நேசித்த, விசுவாசித்த, மற்றவர்களை கிறிஸ்துவுக்குள் நடத்திய என் வாழ்வில் அடித்திருக்கிற புயல்கள், நான் சந்தித்திருக்கிற வேதனைகள், நான் பெற்றிருக்கிற சரீர பெலவீனங்கள், என்னை நெருக்குகிற பிரச்சனைகள் எதுவும், கிறிஸ்துவை நேசிக்காத மற்றவருக்கு இல்லை. அவர்கள் சுகஜீவிகளாக, ஆஸ்தியை சம்பாதித்துக்கொண்டு இருக்கிறார்கள். ஏன் இப்படி நடக்கிறது?

இந்த விடையையும் சங்கீதக்காரன் கொடுப்பதைப் பாருங்கள்,” அவர்கள் முடிவைக் கவனித்து உணருமளவும் அது என் பார்வைக்கு விசனமாயிருந்தது. நிச்சயமாகவே நீர் அவர்களை சறுக்கலான இடங்களில் நிறுத்தி, பாழான இடங்களில் விழப்பண்ணுகிறீர். அவர்கள் ஒரு நிமிஷத்தில் எவ்வளவு பாழாய்ப்போகிறார்கள்…”(சங்:73:17,18,19)

உன் வாழ்க்கையில் ஒருவேளை காலேபைப் போல, யோசுவாவைப் போல நியாயமில்லாத வனாந்தரம் கொடுக்கப்பட்டிருக்கலாம். அக்கிரமக்காரர் நிம்மதியாகத் தூங்கும்போது நான் தூக்கமின்றி மரணவேதனைப்படுகிறேனே என்று உன் உள்ளம் கதறலாம்! நாம் வனாந்தரத்தில் இருக்கிறோமா அல்லது வெட்டாந்தரையில் நடக்கிறோமா என்பது முக்கியமில்லை! யார் நம்மோடு இருக்கிறார் என்பதுதான் முக்கியம்! அவர்களோடு கர்த்தர் இல்லை! கர்த்தர் உன்னோடு இருக்கிறார்! முடிவிலே அவர்கள் பாழாய்ப்போவார்கள், நீங்களோ கானானை சுதந்தரித்துக் கொள்வீர்கள்!

சங்கீதக்காரனைப்போல “உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி, முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர்.” (சங்:73:24) என்று உங்களால் இன்று கூற முடியும்.

கர்த்தாவே அக்கிரமக்காரர் சுகஜீவியாய் வாழும்போது எனக்கு ஏன் இந்த வேதனையும், சோதனையும் என்று நினைக்கிற என் நினைவுகளை அறிவீர். நான் நடந்து கொண்டிருக்கிற பாதையில் நீர் என்னோடுகூட இருக்கிறீர், உமது கரத்தினால் என்னைப் பிடித்து, என்னைத் தாங்கி நடத்துகிறீர். ஸ்தோத்திரம்!  ஆமென்

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

premasunderraj@gmail.com

 

பின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும்.

ராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி. இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். நன்றி.

Advertisements