Archive | May 31, 2016

மலர் 6 இதழ் 400 – சத்தத்திற்கு செவிகொடுத்தால் ஆசீர்வாதம்!

உபா: 28; 1,2 ”இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளின்படியெல்லாம் செய்ய நீ கவனமாயிருக்கும்படிக்கு அவர் சத்தத்திற்கு உண்மையாய் செவிகொடுப்பாயானால் உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார்.

 நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்குச் செவிகொடுக்கும்போது இப்பொழுது சொல்லப்படும் ஆசீர்வாதங்களெல்லாம் உன்மேல் வந்து உனக்கு பலிக்கும்.”

 

நேற்று நாம் கர்த்தர் நம்மை இருப்புக்காளவாயிலிருந்து புறப்படப்பண்ணுவார் என்ற அருமையான வாக்குத்தத்தத்தை உபா:4;20 லிருந்து வாசித்தோம். இன்னும் இருப்புக்காளவாயின் மத்தியில் துடித்துக்கொண்டிருக்கும் உங்களில் அநேகர் உண்டு! திருமண வாழ்வில் பிரச்சனைகள், குடிப்பழக்கத்துக்கு அடிமையான கணவர், முரட்டுத்தனமான பிள்ளை , நோயினால் சரீர வேதனை, பண நெருக்கடி என்று பலவிதமான நெருப்பில் நாம் நடந்து கொண்டிருக்கும்போது கடவுள் எங்கேயிருக்கிறார்? ஏன் எனக்கு செவிகொடுக்கவில்லை? என்ற கேள்விகள் எழலாம்.

எனக்கு ஏன் இந்தப் பிரச்சனைகள்? என்று கேள்விகேட்கும் நீங்கள் என்றாவது எனக்கு ஏன் இந்த வேதனை கொடுக்கப்பட்டது என்று சிந்தித்தீர்களா? வேதத்தில் கர்த்தரைப் பிரியப்படுத்தினவர்களை கர்த்தர் ஆசிர்வதிப்பதையும், கீழ்ப்படியாமல் போனவர்களை துன்பங்களால் சபிப்பதையும் தானே பார்க்கிறோம். அதுமட்டுமல்ல, இந்த உபாகமம் புத்தகத்தில் அநேக அதிகாரங்கள் ‘ஆசீர்வாதமும், சபித்தலும்’ என்ற தலைப்பின்கீழ் எழுதப்பட்டவைகள்! இவற்றை நாம் படிக்கும்போது, சரி நான் கர்த்தருக்கு கீழ்ப்படிந்து அவருடைய சித்தப்படி நடந்தால் எனக்கு எல்லாம் சரியாக நடக்கும், எந்த துன்பமும் வராது என்றுதானே நினைக்கத்தோன்றுகிறது.

உபாகமம் 5 லிருந்து 27 வரை மோசே இஸ்ரவேல் மக்களுக்கு தாம் கற்றுக்கொடுத்த எல்லா கட்டளைகளையும், விதிமுறைகளையும் மறுபடியும் நினைவூட்டுகிறார். இவை நாம் யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம் என்ற புத்தகங்களில் நாம் படித்த கட்டளைகளே!

உபா:28 ம் அதிகாரத்தில் மோசே மூச்சு விட்டது போல ஒரு இடைவெளி கொடுத்து, ”உங்களுக்கு கர்த்தர் இந்த 41 வருடங்களும் கற்றுக்கொடுத்தவைகளைப் பார்க்கும்போது எனக்கு ஒன்று தோன்றுகிறது.!  அவருடைய சத்தத்திற்கு மாத்திரம் செவிகொடுப்போமானால்,ஆசீர்வாதங்களெல்லாம் உன்மேல் வந்து உனக்கு பலிக்கும்”. என்றான்.

இந்தவாரம் முழுவதும் நாம் கர்த்தருக்கு செவிகொடுக்கும்போது கர்த்தர் நமக்காக வைத்திருக்கும் ஆசீர்வாதங்களைப் பற்றி நாம் படிக்கப்போகிறோம்.

கர்த்தர் கொடுத்த இந்த வாக்குதத்தத்தில் முதலில் நாம் கவனிக்கவேண்டியது செவிகொடுத்தல் என்ற வார்த்தை. செவிகொடுத்தல் என்றால் கூர்ந்து கவனித்தல் என்பது எபிரேய மொழிப்பெயர்ப்பு! கர்த்தருடைய வார்த்தைகளை நாம் கூர்ந்து கவனித்து அவற்றை சரிவர புரிந்துகொண்டு அதின்படி நடக்கும்போது கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார் என்பது அதன் அர்த்தம்!

தேவனாகிய கர்த்தர் கையில் பெரம்பு வைத்துகொண்டு, தம்முடைய வார்த்தைகளுக்கு நம்மைக் குருட்டுத்தனமாக கீழ்ப்படியும்படி உத்தரவு கொடுக்கவில்லை. நம்மை அரவணைத்து, என் வார்த்தைகளை கூர்ந்து கவனி, அவை உன் வாழ்க்கைக்கு நல்லது என்பதை புரிந்துகொள் என்கிறார்.

அவ்வாறு அவருடைய வார்த்தைகளுக்கு நாம் செவிகொடுக்கும்போது என்ன நடக்குமாம் பாருங்கள்! ”நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்குச் செவிகொடுக்கும்போது இப்பொழுது சொல்லப்படும் ஆசீர்வாதங்களெல்லாம் உன்மேல் வந்து உனக்கு பலிக்கும்.”

எபிரேய மொழியில் ’உன்மேல் வந்து உனக்கு பலிக்கும்’ என்ற பதம் ‘உன்னைகிட்டி சேர்ந்து பற்றிக்கொள்ளும்’ என்று உள்ளது. ஆம் கர்த்தருடைய வார்த்தைகளை நாம் கூர்ந்து கவனித்து கீழ்ப்படியும்போது அவருடைய ஆசீர்வாதங்கள் நம்மை கிட்டிசேர்ந்து பற்றிக்கொள்ளும். என்ன அருமையான வாக்குதத்தம்! இந்த பூமியில் நான் கர்த்தருடைய பிள்ளையாக ஜீவிக்கும்போது ஆசீர்வாதங்கள் என்னைத் தானாகவே கிட்டி சேர்ந்து சூழ்ந்து கொள்ளும். இதைக் கற்பனைப் பண்ணி பார்க்கவே எத்தனை அருமையாக இருக்கிறது!

இந்த ஆசீர்வாதங்கள் யாவை? பென்ஸ் காரில் போகும் வசதியா? அல்லது போயஸ் தோட்டத்தில் வீடு வாங்கும் ஆசீர்வாதமா? இப்படிப்பட்ட ஆசிர்வாதத்தைதான் என்று பலர் பிரசங்கம் பண்ணுகிறார்கள்! அதனால் தான் தொடர்ந்து சில நாட்கள், கர்த்தராகிய தேவன் நமக்காக வைத்திருக்கிற ஆசிர்வாதங்களைப் பற்றிப் படிக்கப் போகிறோம். நாம் அவருடைய வார்த்தைகளைக் கூர்ந்து கவனித்து, புரிந்துகொண்டு அவருடைய சித்தத்துக்கு கீழ்ப்படிந்து நடக்கும்போது நம்மை சூழ்ந்துகொள்ளும் ஆசீர்வாதங்களைப் பற்றிதான்!

 

நம் வாழ்க்கையில் இருப்புக்காளவாய் போன்ற சோதனைகள் உண்டு, வனாந்தரமும், முள்ளுள்ள பாதைகளும் உண்டு, ஆனால் நாம் கர்த்தருடைய சித்தத்தின்படி வாழும்போது ஆசீர்வாதங்களும் உண்டு!

கர்த்தர் நமக்கு கொடுத்திருக்கும் அளவுக்கடங்கா ஆசீர்வாதங்களை ஒவ்வொன்றாய் எண்ணும்போது, கர்த்தர் நமக்கு கொடுக்காத ஆடம்பர வசதிகள் கண்ணில் படவேபடாது! எண்ண ஆரம்பிக்கலாம்!

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

பின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும்.

ராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி!  இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். உங்கள் கருத்துகளைத் தவறாமல் எழுதுங்கள்!

Advertisements