Archive | May 16, 2016

மலர் 6 இதழ் 389 – பயமின்றிய பிரயாணம்!

எண்ணா:14:42  ”நீங்கள் உங்கள் சத்துருக்களுக்கு முன்பாக முறிய அடிக்கப்படாதபடிக்கு ஏறிப்போகாதிருங்கள்; கர்த்தர் உங்கள் நடுவில் இரார்.”

போன வாரம் விமானத்தில் நியூ யார்க் பட்டணம் சென்று கொண்டிருந்தோம். அங்கு மழை பெய்து கொண்டிருந்ததால் பயங்கர மேகமூட்டத்துக்குள்ளாக வர வேண்டியதிருந்தது. நாங்கள் வந்த விமானம் அடிக்கடி தடதடவென்று கீழே விழுவதுபோல் உதறியது. நெஞ்சு படபடவென்று இருந்தாலும், அந்த விமானத்தின் ஓட்டுநர் பத்திரமாக அழைத்து செல்வார் என்ற  நம்பிக்கையில்தான் நாங்கள் அமர்ந்திருந்தோம்!

சில நேரங்களில் நம் வாழ்க்கையும் மேகமூட்டத்துக்குள்ளாகப் பறக்கும் விமானத்தைப் போன்றதுதான். எல்லாமே தவறாக இயங்குவதுபோல நமக்குத் தோன்றலாம்! ஆனால் நம் ஓட்டுநராகிய இயேசு கிறிஸ்து, அவரை நம்பி, விசுவாசத்தோடு அவரைப் பின்பற்றுபவர்களை சரியான பாதையில் பத்திரமாக அழைத்து செல்வார்!

நாம் இஸ்ரவேல் மக்களின் வனாந்தர பயணத்தை தொடருவோம்!

இஸ்ரவேல் மக்கள் கானான் தேசத்தின் எல்லையை அடைந்தவுடன், கர்த்தர் அவர்களுக்கு அந்த தேசத்தைக் காண்பித்தார். அதை அவர்கள் சுதந்தரித்துக்கொள்ளப் போவதாக வாக்களித்தார். ஆனால் அங்கு வாழ்ந்து வந்த இராட்சதரைக் கண்டவுடன் அவர்கள் கர்த்தருடைய வார்த்தையை விசுவாசிக்காமல், அவர் வழிநடத்துதலை சந்தேகித்து, அவரை அசட்டை பண்ணினார்கள். இந்த வனாந்தரத்திலேயே செத்தால் நலமாயிருக்கும் என்று அழுதார்கள். அதற்கு தண்டனையாக கர்த்தர், அவர்கள் வாய்ச்சொல் பிரகாரமே, அவர்களுக்கு நாற்பது வருட வனாந்தரத்தை கொடுத்தார் என்று பார்த்தோம்.

கர்த்தரின் வழிநடத்துதலை சந்தேகப்பட்ட அவர்கள், வெகுசீக்கிரம் அவருடைய வழிநடத்துதலை மறுதலித்தார்கள். கர்த்தர் தங்களுக்கு அருளிய தண்டனையைக் கேட்டவுடன், நாங்கள் பாவம் செய்தோம், கர்த்தர் சொன்ன அந்தக் கானான் தேசத்துக்குள் நாங்களே போய்விடுவோம், என்று சொல்லி, கர்த்தருடைய வார்த்தையை மீறி தாங்களே கானானுக்குள் போய்விடலாம் என்ற எண்ணத்துடன், அந்த தேசத்தில் வாழ்ந்த பலசாலிகளாகிய கானானியரையும், அமலேக்கியரையும், எதிர்த்து போரிடத் துணிந்தனர்.   நீங்கள் உங்கள் சத்துருக்களுக்கு முன்பாக முறிய அடிக்கப்படாதபடிக்கு ஏறிப்போகாதிருங்கள்; கர்த்தர் உங்கள் நடுவில் இருக்கமாட்டார், நீங்கள் தோல்வியடைவீர்கள் என்ற மோசேயின் குரல் அவர்கள் செவிகளில் எட்டவேவில்லை.

எங்களுக்கு கர்த்தர் தேவையில்லை, நாங்களே எங்கள் எதிரிகளை பார்த்துக்கொள்ளுகிறோம், எங்கள் வழியை நாங்களே பார்த்துக்கொள்ளுவோம்! என்ற எண்ணத்துடன் அவர்கள் மலையின் மேல் ஏறி எதிரிகளோடு போராடத் தொடங்கினர்.

என்ன நடந்தது? வேதம் சொல்லுகிறது, அமலேக்கியரும், கானானியரும், அவர்களை  முறிய அடித்து ஓட, ஓட துரத்தினார்கள் என்று. என்ன பரிதாபம்! கர்த்தர் தன் பிள்ளைகளுக்கு வெற்றி மேல் வெற்றியைக் கொடுக்கவேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறார். ஆனால் அவரை நாம் சந்தேகிக்கும்போது வெற்றிக்குப்பதிலாக, தோல்விதான் கிடைக்கிறது.

அவர்கள் கர்த்தருடைய வழிநடத்துதலை சந்தேகப்படாமலிருந்திருந்தால் எவ்வளவு, சந்தோஷத்தோடு, வெற்றிவாகையோடு கானானுக்குள் சென்றிருக்கலாம்! அதற்கு மாறாக, இப்பொழுது எவ்வளவு அவமானம்! வேதனை! தோல்வி!

கர்த்தருடைய பிள்ளைகளே! ஒருவேளை நாம் இஸ்ரவேல் மக்களைப் போல மேகமூட்டங்களுக்குள்ளே பிரயாணம் செய்து கொண்டிருக்கலாம்! நம் மாலுமியாகிய இயேசு கிறிஸ்துவின் மேல் நம்பிக்கையில்லாமல், நம் வாழ்க்கையின் பிரச்சனைகளை நாமே சீர்ப்படுத்திக்கொள்ளலாம் என்று நினைக்கலாம். அது தோல்வியில் தான் முடியும்! யாரோ ஒருவர் கூறியது நினைவில் வருகிறது!

கர்த்தர் உனக்கு வெளிச்சத்தில் வாக்குத்தத்தம் பண்ணியதை, நீ இருளில் இருக்கும்போது சந்தேகப்படாதேஎன்று.

சந்தேகம் தடைகளைத்தான் பார்க்கும், ஆனால் விசுவாசம் நேரான வழியைப் பார்க்கும்! சந்தேகம் இரவின் இருளைத்தான் பார்க்கும், ஆனால் விசுவாசம் பகலைப் பார்க்கும்! சந்தேகம் ஒரு அடி எடுத்துவைக்க கூட பயப்படும்! ஆனால் விசுவாசம் நம்மை உயரப் பறக்க செய்யும்!

கர்த்தாவே! நான் பிரச்சனைகள் என்ற மேகமூட்டத்துக்குள்ளே பிரயாணம் செய்துகொண்டிருந்தாலும், நீர் எங்கள் ஓட்டுநரானபடியால், உம்முடைய வழிநடத்துதலை விசுவாசித்து, பயமின்றி வாழ்க்கைப் பிரயாணத்தை தொடர பெலன் தாரும்!  ஆமென்!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

premasunderraj@gmail.com

பின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும்.

ராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி. இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசீர்வாதம் பெற உதவுங்கள். நன்றி.

Advertisements