Archive | May 13, 2016

மலர் 6 இதழ் 388 – நம்பிக்கையை விழுங்கிய வனாந்தரம்!

எண்ணா:14:35 ”கர்த்தராகிய நான் இதை சொன்னேன்; எனக்கு விரோதமாய்க் கூட்டங்கூடின இந்த பொல்லாத சபையார் யாவருக்கும் இப்படியே செய்வேன்; இந்த வனாந்தரத்திலே அழிவார்கள், இங்கே சாவார்கள் என்று சொல் என்றார்.”

 

 

எப்பொழுதும் மரணத்தைப் பற்றி பேசுகிற சில நண்பர்களையும், உறவினர்களையும் பார்த்திருகிறேன். ”எனக்கு ஏதாவது ஆயிடுச்சின்னா!…… நான் செத்தால்தான் உங்களுக்கு என் அருமை தெரியும்! ……நான் செத்தாவது இந்த காரியத்தை செய்வேன்!…. இப்படிப்பட்ட வார்த்தைகளை அடிக்கடி உபயோகப்படுத்திய அவர்களின் ஆயிசு சிறியதாகவே இருந்தது.

இஸ்ரவேல் மக்களை கர்த்தராகிய தேவன் எகிப்திலிருந்து புறப்பட பண்ணி கானானுக்குள் பிரவேசிக்க வழிநடத்திய போது, அடிக்கடி தேவனுக்கு எதிராகவும், மோசேக்கு எதிராகவும் முறுமுறுத்து, “நாங்கள் எகிப்து தேசத்திலே செத்து போனாமானால் நலமாயிருக்கும்; இந்த வனாந்தரத்திலே நாங்கள் செத்தாலும் நலம்.” (எண்ணா: 14:1) என்று கூக்குரலிட்டனர்.

கர்த்தர் அவர்கள் சொன்ன காரியங்களைக் கேட்டார். கேட்டது மட்டுமல்ல, அவர்களுடைய வேண்டுதலுக்கு பதிலும் கொடுக்க முடிவு செய்தார்.


 வேதம் சொல்லுகிறது, நீங்கள் தேசத்தை சுற்றிப்பார்த்த நாற்பது நாள் இலக்கத்தின்படியே, ஒவ்வொரு நாள் ஒவ்வொரு வருஷமாக, நீங்கள் நாற்பது வருஷம் உங்கள் அக்கிரமங்களை சுமந்து, என் உடன்படிக்கைக்கு வந்த மாறுதலை உணர்வீர்கள்”  (எண்ணா: 14:34) என்றார்.

நீங்களும் நானும் அந்த இலட்சக்கணக்கான மக்களில் ஒருத்தராக இருப்பதாக நினைத்துக் கொள்வோம். கால்நடையாக எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து தப்பித்து, நமக்கென்று ஒரு தேசம் வேண்டும், நமக்கென்று ஒரு வீடு வேண்டும் என்ற ஆவலோடும், எப்பொழுது இந்த நாடோடி வாழ்க்கை முடியும் என்ற ஆவலோடும் சென்று கொண்டிருப்போம் அல்லவா? யோர்தானின் கரையை அடைந்தவுடன்,நாம் போக வேண்டிய நாட்டுக்கு பக்கத்தில் வந்து விட்டோம் என்று அறிந்தவுடன் உள்ளம் மகிழ்ச்சியால் நிரைந்திருக்கும்!

அப்படிப் பட்ட வேளையில், ஒரு அதிர்ச்சியான செய்தி எட்டுகிறது!  நாம் யோர்தானின் அக்கரைக்கு போய் கானானுக்குள் பிரவேசிக்கப் போவதில்லையாம், இன்னும் நாற்பது வருடங்கள் இந்த வனாந்தரத்திலேயே நாடோடிகளாக சுற்றித் திரிய வேண்டுமாம்! என்ன நாற்பது வருடங்களா? அதிர்ச்சியில் உரைந்து போய் நிற்கிறோம்!

வனாந்தரத்திலேயே அலைந்து திரிய, வனாந்தரத்திலேயே கஷ்டங்கள் அனுபவிக்க, வனாந்தரத்திலேயே மரிக்க……….வனாந்தரம்…வனாந்தரம்……வனாந்தரம்! நாற்பது வருடங்கள் வனாந்தரம்!

வனாந்தரம் அவர்களுடைய நம்பிக்கையை விழுங்கியது! கண்ணீரில் மிதக்கவிட்டது! வனாந்தரம் அவர்களை மேற்க்கொண்டது!

இன்று உன் வாழ்க்கையின் வனாந்தரம் உன்னை நம்பிக்கையிழக்க செய்து, வேதனையில் மூழ்க செய்துள்ளதா? இதை வாசிக்கிற உங்களில் அநேகர் இன்று வலி, வேதனை, நோய், மரணம், தனிமை, குடும்பத்தில் நிம்மதியின்மை,  என்ற வனாந்தரத்தில் நம்பிக்கையின்றி வாழ்ந்து கொண்டிருக்கலாம். அநேக வருடங்களாக இந்த வேதனை என்கிற வனாந்தரத்தில் தவித்துக்கொண்டிருக்கலாம். உங்களில் அநேகர் யாருக்கும் தெரியாத வேதனையை, வனாந்தரத்தை உள்ளே சுமந்து கொண்டிருக்கலாம். வனாந்தரமின்றி கிறிஸ்தவ வாழ்க்கை இல்லை!

அருமையான தேவனுடைய பிள்ளைகளே! சில நாட்கள் நாம் இஸ்ரவேல் மக்களோடு சேர்ந்து வனாந்தரத்தில் அலைந்து திரிவோம்! அவர்கள் முறுமுறுத்ததால், கீழ்ப்படியாததால், தேவனை மகிமைப் படுத்தாதலால் அவர்களுக்கு இந்த வனாந்தரம் கொடுக்கப் பட்டாலும், கர்த்தர் இந்த நாற்பது வருட காலமும் அவர்களை விட்டு விலகவில்லை, அவர்களைக் கைவிடவில்லை! அவர்களைப் பாதுகாத்தார், அவர்களைப் போஷித்தார், அவர்களோடு தங்கியிருந்தார், எல்லாவற்றுக்கும் மேலாக அவர்களை நேசித்தார்!

இதை படிக்கும்போது உன்னுடைய வனாந்தர வாழ்க்கையில் கர்த்தர் உன்னோடு இருக்கிறதை உன்னால் உணர முடியும்!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

premasunderraj@gmail.com

 

Advertisements