Archive | May 23, 2016

மலர் 6 இதழ் 394 – இதுவரை ஒன்றுமே கேட்கவில்லையே!

 எண்ணா: 27:4  ”……எங்கள் தகப்பனுடைய சகோதரருக்குள்ளே எங்களுக்கு காணியாட்சி கொடுக்கவேண்டும் என்றார்கள்.”

’வாய் உள்ள பிள்ளைதான் பிழைக்கும்’ என்ற பழமொழி தெரியுமா? எத்தனை முறை நாம் வாய் திறந்து கேட்காதால், நமக்கு வந்து சேரவேண்டியவை வராமல் போய்விட்டன. இது நம் எல்லோருடைய வாழ்க்கையிலும் நடப்பது தானே!                                                                                                    கேட்பது என்ற வார்த்தைக்கு எபிரேய மொழியில் பிரசுரித்தல் என்று அர்த்தம் உண்டு! இதைத்தான் செலோப்பியாத்தின் ஐந்து குமாரத்திகளும் செய்தனர்.

அவர்களுடைய வாழ்க்கையிலிருந்து கடந்த நாட்களில் சில அருமையான காரியங்களை நாம் படித்தோம்!

அவர்கள் கர்த்தருடைய சபைக்கு முன்பாகவும், மோசேக்கு முன்பாகவும், பிரபுக்களுக்கு முன்பாகவும் தைரியமாக வந்து நின்று தங்கள் பிரச்சனையை தெளிவாக எடுத்துரைத்தனர் என்று பார்த்தோம். ஆண்வாரிசு இல்லாமல் விட்டு சென்ற தங்களுடைய தகப்பன் பேர் அநியாயமாக அழியாமலிருக்க தங்களுக்கு சொத்துரிமை வேண்டும் என்று குரல் கொடுத்தனர். அவர்களுடைய விண்ணப்பத்தை மோசே கர்த்தரிடம் எடுத்து சென்றார். கர்த்தர் அவர்கள் கேட்டது சரிதான், அவர்களுக்கு நியாயம் வழங்கு என்று கட்டளையிட்டார் என்று பார்த்தோம்.

இன்றைக்கு நாம் இந்த சகோதரிகளின் வாழ்க்கையிலிருந்து கடைசியான ஆனால் மிகவும் முக்கியமான பாடத்தைப் படிக்கப்போகிறோம்!

அந்த சகோதரிகள் வாயைத்திறந்து தங்கள் தேவையை கேட்காமல் இருந்திருந்தால் இன்று அவர்களைப்பற்றி நாம் வேதத்திலிருந்து படித்துக்கொண்டிருக்க மாட்டோம். அவர்கள் கேட்டதே, பதில் என்ற கதவைத் திறக்கும் திறவுகோலாயிற்று!

நாம் இன்னும் கேட்காத விண்ணப்பங்களுக்கு பதில் பரலோகத்தில் காத்துக் கொண்டிருக்கிறது என்று பில்லி கிரஹாம் அவர்களின் புத்தகத்தில் வாசித்தேன். அதை வாசித்தபோது, இவை எனக்கு தேவை என்று கர்த்தருக்கு தெரியும் அல்லவா? அப்படியானால் நான் ஏன் கேட்கவேண்டும்? அவரே அதை எனக்கு கொடுத்துவிடக் கூடாதா? என்று மனது கூறியது. அதனால் நான் வேதத்தை எடுத்து கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ‘கேளுங்கள்’ என்று நமக்கு கட்டளையிட்ட 30 க்கும் மேற்பட்ட வசனங்களை வாசித்தேன். இவற்றில் கர்த்தர் கூறிய இந்த வசனம் என் உள்ளத்தைத் தொட்டது.

யோவான்:16:24 இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றும் கேட்கவில்லை; கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கு பெற்றுக்கொள்வீர்கள்.

இதுவரைக்கும் நீ ஒன்றுமே கேட்கவில்லை, கேள் அப்பொழுது நிறைவாகப் பெற்றுக்கொள்வாய் என்று என்னை நோக்கிக் கூறுவது போலிருந்தது.

நாம் பரலோகத்தை நோக்கி நம் இருதயத்தின் வாஞ்சைகளை, விண்ணப்பங்களை ஏறெடுக்கும்போது, நம்முடைய சந்தோஷம் நிறைவாகும்படி, அவர் நமக்கு பதிலளிப்பார்! என்ன அற்புதமான வாக்குத்தத்தம்!  அதுமட்டுமல்ல! அவர் நம்மைக் கேட்க சொல்லுவது நம்முடைய தேவைகளை அறிந்து கொள்ள அல்ல! அவற்றை அவர் நன்கு அறிவார்! ஆனாலும் நம் அன்றாடத் தேவைகளை அவருக்கு நாம் தெரியப்படுத்த வேண்டுமென்று விரும்புகிறார்! இது அன்றாடம் சரீரத்திற்காக நாம் செய்யும் உடற்பயிற்சி போல ஆவிக்குரிய பயிற்சியாகும்!

செலோப்பியாத்தின் ஐந்து குமாரத்திகளும் எபிரேயர் 4:16 பவுல் கூறியவிதமாக, ”ஆதலால் நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யும் கிருபையை அடையவும், தைரியமாக் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்

என்று, தைரியமாக தேவனுடைய கிருபாசனத்தண்டைக்கு வந்து தங்களுடைய விண்ணப்பத்தை தெளிவாக ஏறெடுத்து, கர்த்தர் வாக்குக்கொடுத்தபடியே அவர்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிப் பெற்றுக்கொண்டார்கள்.

இன்னும் நாம் கர்த்தருடைய சமுகத்துக்கு கொண்டுவராத தேவைகள் உண்டா? அதற்கு பதில் என்ற கதவின் திறவுகோல் உங்கள் கரத்தில்தான் இருக்கிறது!

”கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள் அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள் அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்.” மத்:7:7

இன்று உன்னுடைய தேவை என்ன? அவருடைய பிரசன்னமா? அவருடைய ஞானமா? அவருடைய வழிநடத்துதலா? அவருடைய கிருபையா?

நீ என்னிடத்தில் இவற்றில் எதுவுமே கேட்கவில்லையே! கேள்! உன் சந்தோஷம் நிறைவாகும்படி பெற்றுக்கொள்வாய்! என்று கர்த்தர் உரைக்கிறார்.

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

premasunderraj@gmail.com

 

பின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும்.

ராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி. இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். நன்றி.

 

 

 

 

 

 

 

 

Advertisements