Archive | May 20, 2016

மலர் 6 இதழ் 393 – நியாயமாய் நடப்பதே தேவ சாயலின் அடையாளம்!

 எண்ணா: 27: 6,7   அப்பொழுது  கர்த்தர் மோசேயை நோக்கி,

செலோப்பியாத்தின் குமாரத்திகள் சொல்லுகிறது சரிதான். அவர்களுக்கு அவர்கள் தகப்பனுடைய சகோதரருக்குள்ளே சுதந்தரம் கொடுக்கவேண்டும்; அவர்கள் தகப்பன் பின் வைத்த சுதந்தரத்தை அவர்களுக்கு கிடைக்கும்படி செய்வாயாக.

ஒருவேளை நீங்கள் புதிதாக ராஜாவின் மலர்களுக்கு வந்திருப்பீர்களாகில், தயவுசெய்து கடந்த இருநாட்களின் தியானங்களையும் வாசித்துப் பாருங்கள். அப்பொழுதுதான் உங்களுக்கு இதன் தொடர்ச்சி தெரியும்.

நாம் மனாசே வழிவந்த செலோப்பியாத்தின் குமாரத்திகள் ஐந்து பேரைப் பற்றிப் படித்துக் கொண்டிருக்கிறோம். அவர்கள் தன் தகப்பனுக்கு ஆண்வாரிசு இல்லாமல் போய்விட்டதால் அவர் பேர் அழிந்துவிடக்கூடாதென்று தைரியமாக சபையோர் எல்லார்முன்பாகவும் துணிவாக, தெளிவாக தங்களுக்கும் ஆண்பிள்ளைகளைப்போல சொத்தில் சுதந்தரம் வேண்டும் என்று கேட்டதைப் பற்றி படித்தோம்.

இந்த சகோதரிகளுக்கு நியாயம் கிடைத்ததா? கர்த்தர் எப்படிப்பட்ட தீர்ப்பை வழங்கினார்?

தேவனாகிய கர்த்தர் மோசேக்கும், எல்லா இஸ்ரவேல் புத்திரருக்கும், லேவியராகமம் 19:15 ல்  “ நியாயவிசரணையில் அநியாயம் செய்யாதிருங்கள்; சிறியவனுக்கு முகதாட்சணியம் செய்யாமலும், பெரியவனுடைய முகத்துக்கு அஞ்சாமலும், நீதியாக பிறனுக்கு நியாயம் தீர்ப்பாயாக.” என்று கூறினார்.

இதை நாம் பேசுவது போல எழுதினால்,  ”நியாயத்தை புரட்டாதே, ஏழை பணக்காரன் என்று பார்க்காதே! யாராக இருந்தாலும் சரி, சரியான நியாயத்தீர்ப்பு வழங்கு!” என்று நாம் சொல்லுவது போலத்தானே இருக்கிறது.

இதைத்தான் நம்முடைய கர்த்தரும் செய்தார். இந்த ஐந்து சகோதரிகளும், கர்தருடைய சமுகத்தில் தங்களுக்கு நியாயம் கேட்டபோது, மோசே அதை கர்த்தரிடம் கேட்கும்படியாக எடுத்து சென்றபோது, கர்த்தர் “அவர்கள் கேட்பது சரிதான்” என்றார். இந்த சூழ்நிலையில் ‘சரிதான்’ என்று கர்த்தரால் உபயோகிக்கப்பட்ட எபிரேய மொழிக்கு “ இது உண்மையிலும் உண்மை” என்று அர்த்தம் உண்டு. கர்த்தர் என்ன சொல்லுகிறார் பாருங்கள்! “உங்கள் பாரம்பரியம் ஒருவேளை இதற்கு முரண்பாடாக இருக்கலாம்! ஒருவேளை உங்கள் சமுதாயம் இதை ஒத்துக்கொள்ளாமல் இருக்கலாம்! இங்கே நிற்கிற உங்களில் அநேகர் இதற்கு எதிராக இருக்கலாம்! யார் எப்படி நினைத்தாலும் சரி, இவர்கள் கூறியது ‘உண்மையிலும் உண்மை”, என்று கூறி அவர்களுக்கு உடனே நியாத்தீர்ப்பு வழங்கும்படி கூறினார்.

இந்த நியாயத்தீர்ப்பு கர்த்தரை நமக்கு எவ்விதமாக வெளிப்படுத்துகிறது? அவர் எப்படிப்பட்டவர்? பெண்களை சமுதாயம் மதிக்காத காலத்தில், ஆண்வாரிசே குடும்ப சுதந்தரத்தை அனுபவிக்கமுடியும் என்று உலகமே தீர்மானித்திருந்த வேளையில், கர்த்தர் செலோப்பியாத்தின் குமாரத்திகள் சொத்துரிமை பெறவேண்டும் என்று தீர்ப்பளித்தது அவருடைய நீதியை நமக்கு வெளிப்படுத்டுகிறது!

நியாயமும், நீதியுமுள்ள நம் தேவன், இந்த உலகத்தில் நாம் வாழும்போது நம்மை சுற்றியுள்ளவர்களுக்கு நாம் நியாயமும், நீதியும் வழங்க வேண்டுமென்று விரும்புகிறார். எப்படிப்பட்ட நீதி? எத்தனைபேர் எதிர்த்தாலும் உண்மை உண்மையே என்ற நீதி! எத்தனைபேர் ஆதரவளித்தாலும் தவறு தவறே என்ற நீதி!

இந்த நீதியின் தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் யாருக்காவது தவறு இழைக்கும் முறையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா? சற்று சிந்தித்துப் பாருங்கள்! சொத்து விஷயத்தில் அண்ணன் தம்பிமார் அடித்துக்கொள்வதைப் பார்த்திருக்கிறேன், சகோதரிகள் துரோகம் பண்ணுவதைப் பார்த்திருக்கிறேன். தாய் தகப்பன்மாரோடு பிள்ளைகள் பேசாமலிருப்பதை பார்த்திருக்கிறேன்! அக்கா தம்பி உறவு காவல்நிலையத்தில் முடிவடைகிறதையும் பார்த்திருக்கிறேன்! இது உலகத்தாரிடம் மட்டும் அல்ல, விசுவாசிகளுக்குள்ளே நடக்கிற ஒரு காரியம்.  பணம், சொத்து என்று வரும்போது குடும்பங்களுக்குள்ளே அநியாயங்கள் நடக்கின்றன!

ஆதிதிருச்சபை கிறிஸ்தவர்கள் தங்கள் தேவைக்கு மிஞ்சியதை அப்போஸ்தலரின் காலடிகளில் வைத்தனர். அவை தேவையிலிருந்த மற்ற விசுவாசிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது (அப்போ:4) ஆனால் நம்மில் அநேகர் நாம் நியாயப்படி கொடுக்கவேண்டியதை கொடுக்காமல் நாமே அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்!

நாம் வணங்கும் தேவன் நீதியின் தேவன்.அவரை உண்மையாய் ஆராதிக்கவேண்டுமானால், நம்மை சுற்றியுள்ளவர்களுக்கு, ஏழை எளியவர்க்கு, பாதிக்கப்பட்ட நம் குடும்பத்தாருக்கு நியாயத்தையும், நீதியையும் வழங்குவோம்! இதுவே நாம் நீதியுள்ள தேவனின் சாயலை உடையவர்கள் என்பதற்கு அடையாளம்!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

premasunderraj@gmail.com

பின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும்.

ராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி. இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசீர்வாதம் பெற உதவுங்கள்! நன்றி.

Advertisements