Archive | May 19, 2016

மலர் 6 இதழ் 392 ஒரு தராசின் மறு தட்டு!

எண்ணாகமம்: 27:4 ”எங்கள் தகப்பனுக்குக் குமாரன் இல்லாததினாலே அவருடைய பேர் அவருடைய வம்சத்தில் இல்லாமல் அற்றுப்போகலாமா?…”

என்ன அநியாயம்! என்ற வார்த்தையை நாம் அடிக்கடி உபயோகப்படுத்துகிறோம் அல்லவா? சிறு வயதில் அந்த வார்த்தையை எப்படி முதன்முதலில் உபயோகப்படுத்த ஆரம்பித்தோம் என்று யோசித்து பார்த்தேன். அம்மா பலகாரம் செய்து எனக்கும் அண்ணனுக்கும் இரண்டய் பிரித்து வைத்திருப்பார்கள். இரண்டு தனித்தனி டப்பாவில் முறுக்கு, சீடை வைக்கப்பட்டிருக்கும். அண்ணன் எங்கள் இருவர் டப்பாவையும் கையில் எடுத்துப் பார்த்துவிட்டு ‘என்ன அநியாயம்மா, அவளுக்கு அதிகம் வைத்திருக்கீங்க! என்பார்கள். அம்மா இருவருக்கும் சமமாகத்தான் வைத்திருப்பார்கள், ஆனாலும் , ‘அநியாயம் அவளுக்கு நிறைய கொடுத்துட்டீங்க’ என்பது வாரம்தோறும் வீட்டில் நடக்கும் சண்டைதான்.

சிறுவயதில் அநியாயம் என்பதற்கு அந்த அர்த்தம்தான் தெரியும். ஆனால் பின்னர்தான் அந்த வார்த்தையின் கொடுமையான அர்த்தம் புரிந்தது.

ஒரு குடும்பத்தில் முப்பது வருட திருமண வாழ்க்கைக்கு பின்னர் கணவன் விட்டுவிட்டு போய்விட்டதைக் கேள்விப்பட்டபோது, ஒரு நண்பர் மூன்று பெண் குழந்தைகளை விட்டுவிட்டு புற்றுநோயால் இறந்ததைக் கேள்விப்பட்டபோது, ஒரு நண்பருடைய குடும்பம் கடனில் மூழ்கி, அவர்கள் வீடு ஏலத்தில் போனபோது, ஒரு குடும்பத்தில் உள்ள நான்குபேர், இரண்டு மகன்களும், இரண்டு மருமகள்களும் கார் விபத்தில் ஒரே இடத்தில் மரித்ததைக் கேள்விப்பட்டபோது, என்ன அநியாயம் என்ற வார்த்தைதான் வந்தது! சிலருடைய வாழ்க்கையே அநியாயமாக இருக்கிறது.

கள்ளம் கபடிலாமல் கர்த்தரால் உருவாக்கப்பட்ட ஆதாம் ஏவாளை, சர்ப்பம் சோதித்ததும் அநியாம்! தாவீது பறவையைப் போல சவுலால் வேட்டையாடப்பட்டதும் அநியாயம், உமக்கு சித்தமானால் இந்த பாத்திரம் என்னை விட்டு நீங்க செய்யும் என்று கர்த்தரகிய இயேசு கெத்சமனே தோட்டத்தில் கதறவேண்டிய நிலை வந்ததும் அநியாயம்!

அநியாயம் நம் ஒவ்வொருவர் வாழ்விலும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. எண்ணாகமத்தில் நாம் வாசித்துக்கொண்டிருக்கிற பகுதியில், மனாசேயின் வழியில் வந்த இந்த ஐந்து சகோதரிகளும் ‘ என்ன அநியாயம்! எங்கள் தகப்பனுக்கு ஆண்பிள்ளை இல்லாததால் அவர் பேர் அவருடைய வம்சத்தில் இல்லாமல் அழிந்துபோகலாமா? என்றார்கள்.

 அவர்கள் மோசேயும், எலெயாசரும், பிரபுக்களும், சபையனைத்தும் கூடியிருந்த இடத்தில் எல்லா ஆண்களும் கேட்க இந்த கேள்வியை எழுப்பவேண்டியதிருந்தது. நல்லவேளை மோசே இந்தக் கேள்விக்குப்பதிலை அங்கே கூடியிருந்த சபையாரிடம் கேட்காமல் கர்த்தரிடம் கேட்கும்படி அணுகினான். கூடியிருந்த அத்தனை ஆண்கள் மத்தியில் ஒருவேளை இந்தப் பெண்களுக்கு நியாயம் கிடைக்காமல் போயிருக்கலாம் அல்லவா! கர்த்தராகிய தேவன் வழங்கிய நியாயத்தீர்ப்பை நாளை பார்ப்போம்.

நியாயம், அநியாயம் என்று யோசிக்கும்போது அந்தக்காலத்தில் கடைகளில் உபயோகப்படுத்தும் தராசு தான் நினைவுக்கு வருகிறது. ஒருபக்கத்தில் எடை கூட இருந்தால், தராசின் முள் எடை கூடிய பக்கம் இறங்க, அந்த தட்டும் இறங்கிவிடும்!

பல நேரங்களில் நம் வாழ்வில் அநியாயங்கள் நிறைந்து, நம் வாழ்வு என்ற தராசின் முள் ஒருபக்கம் இறங்கிவிடுகிறது! ஏன் எனக்கு மாத்திரம் நியாயம் இல்லை, ஏன் வாழ்க்கையே எனக்கு அநியாயமாய்த் தோன்றுகிறது, என்று நாம் மனது நொறுங்கி கதறும்போது, தேவனாகிய கர்த்தர் ”என் கிருபை உனக்கு போதும்” (2 கொரி:12:9) என்று தம்முடைய கிருபையை தராசின் மறு தட்டிலே நிறைக்கிறார். கிரேக்க மொழியில் ‘போதும்’ என்ற வார்த்தைக்கு ‘எப்பொழுதுமே போதும்’ என்று அர்த்தம். பரிபூரணமான, நிறைவான, போதுமான கிருபைகள் நிரப்பப்படுகின்றன. கொஞ்சம் கூர்ந்து கவனி! தராசின் முள் கிருபைகள் நிறைந்த தட்டு பக்கம்தான் எப்பொழுதுமே இறங்கியிருக்கும்.

ஆம்! அவர் கிருபை நம் வாழ்வின் பிரச்சனைகளை விட மிக மிக அதிகம்! பயப்படாதே! அவர் கிருபைகளையே நோகிப் பார், அநியாயத்தை அல்ல!

ஆண்டவரே! ஏன் இந்த அநியாயம் என்று நான் பெருமூச்சுகள் விட்டாலும், உம் கிருபை எனக்கு எப்பொழுதுமே போதுமாயிருப்பதற்காய் ஸ்தோத்திரம்!

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

premasunderraj@gmail.com

 

பின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும்.

ராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி. இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். நன்றி.

 

Advertisements