Archive | May 26, 2016

மலர் 6 இதழ்: 397 – உனக்காக வேறொரு திட்டமொன்று!

 உபாகமம்: 3: 23 -27 ”அக்காலத்திலே நான் கர்த்தரை நோக்கி;

கர்த்தராகிய ஆண்டவரே நீர் உமது அடியானுக்கு உமது மகத்துவத்தையும், உமது வல்லமையுள்ள கரத்தையும் காண்பிக்கத் தொடங்கினீர்; வானத்திலும் பூமியிலும் உம்முடைய கிரியைகளுக்கும், உம்முடைய வல்லமைகளுக்கும் ஒப்பாக செய்யத்தக்கவன் யார்?

நான் கடந்துபோய் யோர்தானுக்கு அப்புறத்திலுள்ள அந்த நல்ல தேசத்தையும் அந்த நல்ல மலையையும், லீபனோனையும் பார்க்கும்படி உத்தரவு கொடுத்தருளும் என்று வேண்டிகொண்டேன்.

கர்த்தரோ உங்கள் நிமித்தம் என்மேல் கோபங்கொண்டு எனக்கு செவிகொடாமல் என்னை நோக்கி; போதும் இனி இந்தக் காரியத்தைக் குறித்து என்னோடே பேசவேண்டாம்,…………உன் கண்களினாலே அதைப் பார், இந்த யோர்தானை நீ கடந்து போவதில்லை”.

என்னைப் பொறுத்தவரை இதுதான் கரத்தருக்கும், அவருடைய தாசனாகிய மோசேக்கும் இடையில் நடந்த வேதனையான உரையாடலாக இருந்திருக்கும்.

நாற்பது வருடம், பெரிய பாடுபட்டு, பல்லாயிரக்கணக்கான இஸ்ரவேல் மக்களை யோர்தான் அருகே கொண்டுவந்து சேர்த்தாயிற்று. எத்தனை வேதனை! எத்தனை சோர்பு! எத்தனை எதிரிகள்! எத்தனை முறுமுறுப்பு! இவற்றையெல்லாம் தாண்டி யோர்தானுக்கு இக்கரையில் வந்தாயிற்று! இனி சில மைல் தூரம் தான் கானானுக்குள் பிரவேசித்துவிட்டால் நமக்கு இளைப்பாறுதல் தான்! என்ற பெரிய ஆவலோடு மோசே கர்த்தரைப் பார்த்து நான் கடந்து போய் அந்த நல்ல தேசத்தைப் பார்க்க உத்தரவு கொடும் என்று கேட்டான். கர்த்தரோ இனி இதைப் பற்றி என்னிடம் பேசாதே என்றார்.

என்ன காரணம்?  நாற்பது வருட வனாந்தரத்தில் மோசே சில நேரங்களில் பொறுமையிழந்து போய்விட்டான்! மனித கண்ணோடு பார்க்கும்போது இவ்வளவு கஷ்டங்களை அனுபவித்த ஒரு மனிதன், நாற்பது வருடங்கள் தலைசாய்க்க இடமில்லாமல் நாடோடியாய் அலைந்தவன், ஒருசில சிறிய தவறுகள் செய்ததால் கர்த்தர் இவ்வளவு பெரிய தண்டனையைக் கொடுக்கலாமா என்று தோன்றவில்லையா? இனி இதைப் பற்றிப் பேசாதே என்று வாயடைத்துவிட்டாரே! நாற்பதுவருட உழைப்பினால் என்ன பலன்?

எத்தனைமுறை நாம் இப்படி சிந்தித்திருக்கிறோம்? நான் எத்தனை கஷ்டங்களை தாங்கிக்கொண்டு அவருக்காக வாழ்கிறேன். ஏன் என் வேண்டுதலை மறுத்துவிட்டார்! என் விண்ணப்பம் ஏன் அவர் செவிகளில் விழவில்லை? அவர் என்னை நேசிக்கவில்லையா? என்றெல்லாம் எண்ணும் வேளை உன் வாழ்க்கையில் வந்திருக்கலாம்!

இவற்றைப்பற்றி சிந்திப்பதற்கு முன்னால், ஒரு காரியத்தை சிந்தித்து பாருங்கள்! சில நேரங்களில் நாம் குடும்பத்தின் நலனுக்காக நாம் எடுக்கும் முடிவுகள் முதலில் எல்லோர் கண்ணுக்கும் தவறாகப் படும், பின்னர் என்றாவது ஒருநாள் நாம் அவர்கள் மேல் வைத்த அன்பினால் தான் இந்த முடிவு எடுத்தோம் என்று உணர்வார்கள். என்னுடைய அப்பா எடுத்த முடிவு எனக்கு கடுமையாகத் தெரிந்தது ஆனால் இன்று நான் இந்த நிலைமைக்கு உயர அவர்கள் தான் காரணம் என்று எத்தனை பிள்ளைகள் தங்கள் பெற்றோரைப்பற்றி பேசுகின்றனர்.

இதைத்தான் கர்த்தரும் செய்தார். ஒருவேளை அவர் எடுத்த இந்த முடிவு நமக்கு கடுமையாக தெரியலாம் ஆனால் அது கர்த்தர் மோசேயை அதிகமாக நேசித்ததால் எடுத்த முடிவே தவிர மோசேக்கு கொடுத்த தண்டனை அல்ல.

மோசேயுடைய குணத்தை விளக்க, யாத்திராகமம் 32 ம் அதிகாரத்தில் நடந்த ஒரு சம்பவத்தை உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன்! மோசே சீனாய் மலையிலிருந்து வர சற்று தாமதித்தபோது இஸ்ரவேல் மக்கள் ஆரோனை வற்புறுத்தி தங்களுக்கு ஒரு பொன் கன்றுக்குட்டியை வார்ப்பித்து அந்த விக்கிரகத்தை வணங்க ஆரம்பித்தார்கள். கர்த்தர் அவர்கள் மேல் கோபங்கொண்டு அவர்களை சங்கரிக்க கட்டளையிட்டார். மோசே மலையின் மேல் ஏறி கர்த்தாவே உமக்கு எதிராக பாவம் செய்த இந்த ஜனங்களை மன்னியும், இல்லாவிட்டால் என் பேரை உம்முடைய புஸ்தகத்திலிருந்து கிறுக்கிப்போடும் என்றான்.

ஒரு நிமிடம்! இதை உங்களாலும் என்னாலும் சொல்ல முடியுமா? ஆண்டவரே என் பக்கத்துவீட்டுகாரன் விக்கிரகத்தை வணங்குகிறான், அவனை மன்னித்துவிடும், இல்லாவிடில் என் பேரை ஜீவபுத்தகத்திலிருந்து எடுத்து பொடும் என்று சொல்லுவோமா? என்னால் நிச்சயமாக முடியாது!

மோசேயுடைய இந்த செயல் அவன் கர்த்தருடைய ஜனமாகிய இஸ்ரவேலை, முரட்டாட்டமும், முறுமுறுப்பும் கொண்ட மக்களை, எவ்வளவாய் நேசித்தான் என்று காட்டுகிறது!. பாவிகளை நேசிக்கும் இந்த குணம், தேவனாகிய கர்த்தர் நம்முடைய பெலவீனங்களுக்கு மத்தியில் நம்மை நேசிக்கிறாரே அப்படிப்பட்ட தெய்வீக குணம் மோசேக்கு எப்படி வந்தது? அவன் கர்த்தரோடு முகமுகமாய் பேசி அவரோடு கொண்டிருந்த உறவினால்தான்!  அவரோடு நெருங்கி ஜீவித்ததால்தான் கர்த்தருடைய மட்டற்ற அன்பை அவனால் பிரதிபலிக்க முடிந்தது!

கர்த்தரை முகமுகமாய் அறிந்தவனைப் பார்த்து, கர்த்தர் நீ கானானுக்குள் பிரவேசிப்பதில்லை என்றபோது அவன் திடுக்கிடவில்லை! அவர் என்னை நேசிக்கவில்லை என்று முகத்தை தூக்கவில்லை! கர்த்தர் எடுத்த முடிவின் மேல் ஒரு துளிகூட சந்தேகமில்லை! ஒரு நண்பரோடு பேசுவதுபோல பேசினான்! அவர் தன்னை அதிகமாக நேசிப்பது அவனுக்குத் தெரியும்! கர்த்தர் தனக்கு இதைவிட பெரிய காரியத்தை செய்வார் என்றுதான் விசுவாசித்தான்.. ஆம்! கர்த்தர் தாம் நேசித்த தம்முடைய தாசனாகிய மோசேக்கு உலகப் பிரகாரமான கானான் தேசத்தை அல்ல! பரம கானானையே கொடுத்தார்!

தேவனுடைய பிள்ளைகளே! இன்று ஒருவேளை உன் உள்ளத்தின் ஆசையை கர்த்தர் கொடுக்கவில்லை என்று ஆதங்கப்பட்டுக் கொண்டிருக்கலாம். ஏன் என்னை கானானுக்குள் பிரவேசிக்க செய்யவில்லை? கர்த்தர் என்னை நேசிக்கவில்லையா? என்று எண்ணலாம். கர்த்தர் உன்னை அதிகமாக நேசிப்பதால்  உனக்காக உன்னத திட்டமொன்றை வைத்திருகிறார்! நீ நினைப்பதற்கு மேலாக உன்னை ஆசிர்வதிப்பார்!

அநாதி சிநேகத்தால் உன்னை சிநேகித்தேன், காருணியத்தால் உன்னை இழுத்துக் கொள்ளுகிறேன்” (எரே::31:3 ) என்கிறார்.

அவருடைய அன்பை அளவிடாதே!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

Advertisements