Archive | May 24, 2016

மலர் 6 இதழ் 395 – சித்திரமும் கைப்பழக்கம்!

 

உபாகமம்: 1:4 ”நாற்பதாம் வருஷம், பதினோராம் மாதம் முதல் தேதியிலே, மோசே இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லும்படி தனக்கு கர்த்தர் விதித்த யாவையும் அவர்களுக்குச் சொன்னான்…”

இன்று நாம் உபாகமம் புத்தகத்தை ஆரம்பிக்கிறோம். இந்த புத்தகத்தை நாம் படிக்கும்போது கர்த்தர் தாமே நம்மோடுகூட இருக்க ஜெபிப்போம்.

சித்திரமும் கைப்பழக்கம் என்ற வாசகத்தைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? எந்த ஒரு கலையும் பல நாட்கள் கடின முயற்சியோடு, பயிற்சி எடுத்தபின் தான் நமக்கு சிறப்பாக வரும். ஒரு கோடு அல்லது வட்டம் சரியாக போடத்தெரியாதவர்கள் எப்படி முகத்தை சரியாக வரைய முடியும்?

ஒரு சாதாரண கலைக்கு அல்லது பொழுதுபோக்குக்கு கடின பயிற்சி தேவை என்று சொல்லுகிறோம் ஆனால் ஆவிக்குரிய வாழ்க்கையில் மாத்திரம் ஒரே ராத்திரியில் நாம் மறுரூபமடைந்து விடலாம் என்று நினைக்கிறோமே அது சரியா? நாம் இயேசு கிறிஸ்துவுக்கு நம் வாழ்வில் இடம் கொடுத்தவுடனே நமக்குள் ஏதோ மாஜிக் நடந்துவிட்டதாக நினைப்பு! வேதாகமத்தில் நாம் காணும் வல்லமையான தேவபிள்ளைகள் யாரும் தங்கள் வாழ்க்கையில் சுலபமாக அந்தநிலையை வந்தடையவில்லை! சிலர் வாழ்நாள் முழுவதும் இதற்காக உழைக்கவேண்டியதிருந்தது.

இதைத்தான் நாம் வேதத்தில் ஐந்தாவது புத்தகமாக இடம் பெற்றிருக்கும் உபாகமம் புத்தகத்திலிருந்து படிக்கப்போகிறோம்.! இந்த புத்தகம் வாசிக்கும்போது நாற்பது வருடங்கள் வனாந்தரத்தில் அலைந்து திரிந்து வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட கானானுக்குள் அடியெடுத்து வைத்த இஸ்ரவேல் மக்களின் நீண்ட பிரயாணத்தின் தினசரி நாட்குறிப்பு போல தோன்றும்.

இந்த புத்தகத்தில் மோசே தங்களது நாற்பது வருட அனுபவங்களை சரித்திரப்பூர்வமாகவும், தங்களுடைய வெற்றி தோல்விகளை ஒவ்வொன்றாகவும் வெளிப்படுத்துகிறார். அதை வாசிக்கும்போது இஸ்ரவேல் மக்களும், தானும் ஆவிக்குரிய வாழ்க்கையிலும் எவ்வளவு பெலவீனராக இருந்ததையும் தெளிவாக கூறுகிறார்.

எகிப்து தேசத்தில் பார்வோன் குமாரத்தியின் வளர்ப்பு மகனாக வளர்ந்த மோசே நாற்பது வருடங்கள் எகிப்தின் ராஜகுமாரனுக்கேற்ற விசேஷ கல்வியிலும், கலைகளிலும் பயிற்சி பெற்றிருந்தார். ஆனாலும் அவருக்கு கர்த்தரைப்பற்றிய ஞானம் குறைவாகவே இருந்தது.

அதனால் கர்த்தர் மோசேயுடைய சில முட்டாள்தனமான செய்கைகளை உபயோகப்படுத்தி மீதியான் தேசத்து வனாந்தரத்தில் நாற்பது வருடங்கள் அலையவிட்டார். அங்கே கர்த்தர் அவருக்கு கொடுத்த கடின பயிற்சிக்கு பின்னால் தம்மை ஆபிரகாமின் தேவனாகவும், ஈசாக்கின் தேவனாகவும், யாக்கோபின் தேவனாகவும் வெளிப்படுத்தினார். கர்த்தர் மோசேயை இஸ்ரவேல் மக்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து வெளியே வழிநடத்தும் மகாபெரிய ஊழியத்துக்கும் அழைத்தார்.

இந்த வனாந்தரத்தில் அவருக்கு கொடுக்கப்பட்ட பயிற்சியானது அவருக்கு கர்த்தரோடு முகமுகமாய் பேசவும், அவருடைய வாழ்நாளில் எஞ்சியுள்ள நாற்பதுவருடங்கள், கடின இருதயமுள்ள பார்வோனின் முன்பு நின்று அற்புதங்களை செய்யவும், வணங்கா கழுத்துள்ள இஸ்ரவேல் மக்களை எகிப்தின் வனாந்தரங்களில் வழிநடத்தவும் ஒரு அடிப்படை பயிற்சியாகும். இத்தனை கடினமான பயிற்சிக்கு பின்பும், தன்னுடைய வாழ்நாள் முழுவதும் மோசே கற்றுக்கொள்ள வேண்டியதாயிருந்தது.

உபாகமம் கடைசி அதிகாரத்தில் “ கர்த்தரை முகமுகமாய் அறிந்த மோசேயைப் போல ஒரு தீர்க்கதரிசியும் இஸ்ரவேலில் அப்புறம் எழும்பினதில்லை” (உபா:34:12) என்று அவரைப் பற்றி வேதம் சாட்சி கொடுக்கிறது.

மோசே எகிப்தின் ராஜகுல வாழ்க்கையிலிருந்து மீதியான் தேசத்துக்கு ஓடியதிலிருந்து, மோசேயை ஒரு ஆவிக்குரிய வல்லவனாக்க கர்த்தர் எடுத்துக்கொண்ட காலம் எண்பது வருடங்கள்!

உபாகமம் இஸ்ரவேல் மக்களின் ஒரு பிரயாண நாட்குறிப்பு மட்டும் அல்ல மோசேயின் ஆவிக்குரிய பிரயாண நாட்குறிப்பும்கூட. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! மோசே தன்னுடைய ஆவிக்குரிய வாழ்க்கை ஆரம்பித்த இடத்தில் நிற்கவில்லை! ஆவிக்குரிய வாழ்க்கையும் ஒரு நீண்ட பிரயாணம் தான் என்று நமக்கு எடுத்துக் காட்டியிருக்கிறார்.

இந்தப் பிரயாணத்தில் வெயிலும் உண்டு நிழலும் உண்டு! மலைகளும் உண்டு, பள்ளத்தாக்குகளும் உண்டு! பாடலும் உண்டு! அழுகையும் உண்டு! யுத்தமும் உண்டு, வெற்றித் தோல்விகளும் உண்டு! வெட்டுக்கிளிகளும் உண்டு! இராட்சதரும் உண்டு!

இந்தப் பிரயாணத்தில் இன்று நாம் எங்கேயிருந்தாலும் சரி, மலையிலோ அல்லது பள்ளத்தாக்கிலோ, கர்த்தருடைய சித்தமான இடத்தில், கர்த்தருடைய வழிநடத்துதலுக்குள் இருக்கிறோமா என்பதுதான் முக்கியம்!

உன்னுடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் இன்று நீ எங்கேயிருக்கிறாய்? நீ நேற்று இருந்த இடத்தில் இன்று நிற்காதே! கிறிஸ்துவை நோக்கியவாறு முன்னேறு!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

 

பின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும்.

ராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி!  இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். உங்கள் கருத்துகளைத் தவறாமல் premasunderraj@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள்!

 

Advertisements