Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

மலர் 6 இதழ் 386 இருதயத்தைக் காத்துக்கொள்!

எண்ணா:16:1-4 ”கோராகு என்பவன்…. இஸ்ரவேல் புத்திரரில் சபைக்குத் தலைவர்களும் சங்கத்துக்கு அழைக்கப்பட்டவர்களும் பிரபலமானவர்களுமாகிய இருநூற்று ஐம்பது பேர்களோடும் கூட மோசேக்குமுன்பாக எழும்பி,

மோசேக்கும், ஆரோனுக்கும் விரோதமாக கூட்டங்கூடி, அவர்களை நோக்கி நீங்கள் மிஞ்சிப்போகிறீர்கள்; சபையார் எல்லாரும் பரிசுத்தமானவர்கள்; கர்த்தர் அவர்கள் நடுவில் இருக்கிறாரே; இப்படியிருக்க, கர்த்தருடைய சபைக்கு மேலாக உங்களை ஏன் உயர்த்துகிறீர்கள் என்றார்கள்.

மோசே அதைக் கேட்டபோது முகங்குப்புற விழுந்தான்.”

இந்த வேதபகுதியை வாசித்தபோது, எரேமியா தீர்க்கதரிசி நம்முடைய இருதயத்தைப் பற்றி எழுதியது மனதில் பட்டது 

எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும், மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்?”( எரே:17:9)

திருக்குள்ள இருதயம் என்றால் என்ன? உன் வாழ்க்கையை நீ எப்படி வேண்டுமானாலும் வாழலாம், நீ என்ன வேண்டுமானாலும் செய்யலாம், என்ன வேண்டுமானாலும் பேசலாம், தப்பேயில்லை என்று நம்மை ஏமாற்றும் இருதயம்!

இப்படிப்பட்ட திருக்குள்ள, கேடுள்ள இருதயம் உள்ளவர்களைப் பற்றியும் நாம் அறிந்து கொள்ளவே வேதாகமத்தில் இந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன என்று நினைக்கிறேன்.

என்ணாகமம் 16 ல் இடம் பெற்றுள்ள இந்த சம்பவத்தை சற்று ஆராய்வோம். முதலில் லேவியனான கோரகும், அவனைப் போன்று திருக்குள்ள இருதயம் கொண்ட மற்ற சிலரும், மற்ற இருநூற்று ஐம்பது பேரை அழைத்துக் கொண்டு மோசேயண்டை வருவதைப் பார்க்கிறோம். அவர்கள் ஒருசில வார்த்தைகள் பேசுமுன்னரே அவர்களுடைய இருதயம் வெளிப்படுகிறது! மோசே! உன்னையும் உன் அண்ணனையும்விட  நாங்கள் பரிசுத்தமானவர்கள், இப்படியிருக்க, கர்த்தருடைய சபைக்கு மேலாக உங்களை ஏன் உயர்த்துகிறீர்கள், உங்களுக்கு என்னப்பா  தகுதி? நீங்கள் எங்களைவிட எவ்விதத்தில் உயர்ந்தவர்கள்? என்று ஆபத்தான விதமாக பேசுகின்றனர்.

ஒரு லேவியன், தேவனுடைய ஆலயத்தின் ஆசாரியன், கர்த்தருடைய ஊழியக்காரனாகிய மோசேயிடம் எப்படி இவ்வளவு கொடூரமாக பேச முடிந்தது?

மோசே பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்த குணமுள்ளவனாயிருந்தான்” (எண்ணா:12:3) என்று வேதம் கூறுகிறதே! அப்படியிருக்கும்போது மோசே மீது குற்றம்சாட்ட என்ன காரணம்? அவர்களின் திருக்குள்ள, கேடுள்ள இருதயத்தின் விளைவுதான். மோசே கர்த்தரால் உபயோகப்படுத்தப்படுவதை பார்க்க பொறுக்கவில்லை. மோசேக்கு விரோதமாக கூட்டத்தை சேர்க்கிறார்கள்.

அன்பின் தேவனுடைய பிள்ளைகளே! இப்படிபட்ட இருதயத்தின் விளைவு என்ன என்று நாம் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

தேவனுடைய ஊழியனாகிய மோசே, கோராகு  தனக்கு விரோதமாக கூட்டம் கூட்டுவதை கர்த்தரிடம் முறையிடுகிறான். கர்த்தர் மோசேயை நோக்கி சகல ஜனங்களையும், கோராகு, தாத்தான், அபிராம் என்பவர்களின் வாசஸ்தலங்களை விட்டு விலகச் சொன்னார். இந்த மூவரும் தங்கள் பெண்ஜாதிகளோடும், பிள்ளைகளோடும் வாசலில் நின்றனர். அப்பொழுது எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே,

“பூமி தன் வாயைத் திறந்து, அவர்களையும், அவர்கள் வீடுகளையும் ,கோராகுக்குரிய எல்லா மனிதரையும், அவர்களுக்கு உண்டான சகல பொருள்களையும் விழுங்கிப்போட்டது.” (எண்ணா:16:32)

என்ன கொடுமை! திருக்குள்ள, கேடுள்ள இருதயம் உன் குடும்பத்தை, உன் பிள்ளைகளை அழித்துவிடும்!

கோராகு, மோசே, இந்த இருவருமே கர்த்தரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள். ஒருவன் தேவனுடைய சமுகத்தில் ஊழியம் செய்யும் ஆசாரியன், மற்றொருவன் இஸ்ரவேல் மக்களை வழிநடத்த தேவனால் அழைக்கப்பட்டவன். வெளிப்புறமாகப் பார்த்தால் இருவருமே கர்த்தருடைய ஊழியத்தில் ஈடுபட்டவர்கள், கர்த்தரை அறிந்தவர்கள். ஆனால் ஒருவனின் இருதயம் திருக்குள்ளதாயும், மற்றொருவனின் இருதயம் சாந்தகுணமுள்ளதாயும் இருந்ததைப் பார்க்கிறோம்.

  நீதி: 4: 23 “எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்”
உன் இருதயத்தை காத்துக் கொள்ளாவிட்டால் நீயும், உன் குடும்பமும் ஒருவேளை அழியவேண்டியதிருக்கும்!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

premasunderraj@gmail.com

 

 

Leave a comment