Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

மலர் 6 இதழ் 387 – ஏன் என் ஜெபத்துக்கு பதிலில்லை?????

 எண்ணா: 14:28 ”..நீங்கள் என் செவிகள் கேட்கச் சொன்னபிரகாரம் உங்களுக்குச் செய்வேன் என்பதை என் ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தர் உரைக்கிறார்.

மோசே கானானுக்குள் வேவுகாரரை அனுப்பிய பின்னர், காலேபும் யோசுவாவும் அதை பாலும் தேனும் ஓடுகிற தேசம் என்று வர்ணித்த பின்னர் இஸ்ரவேல் மக்கள் அமைதியாக, கர்த்தரால் வழிநடத்தப்பட்ட ஜனங்களாக, கானானை நோக்கி வெற்றி நடைபோட்டிருப்பார்கள் என்று ஒருவேளை நாம் எண்ணலாம். ஆனால் அதற்கு மாறாக அவர்கள் முறுமுறுப்பதையும், மோசேக்கு விரோதமாகக் கூட்டங்கூடுவதையும் தான் காண்கிறோம்.

எகிப்துக்கும் கானானுக்கும் நடுவே எங்கோ ஓரிடத்தில் கர்த்தருடைய பிள்ளைகள், கானான் தங்களுடைய முற்பிதாக்களுக்கு கர்த்தரால் வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தேசம் என்பதை அறவே மறந்து போய் மோசேயும் ஆரோனும் அவர்கள் இலாபத்துக்காக கானானுக்குள் அழைத்துசெல்வது போல நடந்து கொண்டனர்.

ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபுக்கு வாக்கு கொடுத்ததினால், அவர்களை நீண்ட பொறுமையுடன் தன் அன்பின் கரத்தினால் வழிநடத்தி வந்த தேவனாகிய கர்த்தரையே அவர்கள் சந்தேகப்பட்டதைப் போல அவர்கள் முறுமுறுப்பு காணப்பட்டது.

இன்றைய வேதாகமப் பகுதி உங்களுக்கு எப்படி இருக்கிறது என்று தெரியவில்லை, ஆனால் நான் என் வேதாகமத்தில் அதை குறித்து வைத்திருக்கிறேன். கர்த்தர் என்னைப் பார்த்து “ இதோ பார்! நீ சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் என் செவிக்கு எட்டி விட்டது. நீ என் செவிகேட்க சொன்னதை அப்படியே உனக்கு செய்வேன்! என்று கூறுவதுபோல இருந்தது.

அல்லேலுயா! நாம் அவரிடம் கூறுகிற காரியங்களுக்கு அவர் செவிசாய்க்கிறார். என் தேவைகளைப் பற்றி நான் கூறியதைக் கேட்கிறார்! என் நோயைப் பற்றி நான் முறையிட்டதைக் கேட்கிறார்! நான் அவரை அன்போடு ‘அப்பா’ என்றழைத்ததைக் கேட்கிறார்! நன்றியோடு ’ஸ்தோத்திரம்’ என்று உச்சரித்ததைக் கேட்கிறார்

அதேசமயத்தில், கர்த்தர் நமக்கு எப்பொழுதும் செவிசாய்ப்பதால், நம் முறுமுறுப்பையும், நாம் அவிசுவாசத்தல் பேசும் வார்த்தைகளையும், நாம் மற்ற விசுவாசிகளைப் பற்றியும், ஊழியக்காரர்களைப் பற்றி பேசுவதையும் கூடக் கேட்கிறார்!

கர்த்தர் இஸ்ரவேல் மக்களைப் பார்த்து என்ன சொல்லுகிறார் தெரியுமா? நீங்கள் சொன்னதையெல்லாம் நான் காது கொடுத்து கேட்டுவிட்டேன், இப்பொழுது நான் சொல்லுவதை நீங்கள் கேளுங்கள்!

”…….நீங்கள் நான் உங்களை குடியேற்றுவேன் என்று ஆணையிட்டுக் கொடுத்த தேசத்தில் பிரவேசிப்பதில்லை.

…….நீங்கள் அசட்டை பண்ணின தேசத்தை அவர்கள் (உங்கள் பிள்ளைகள்) கண்டடைவார்கள்.

நீங்கள் தேசத்தை சுற்றிப்பார்த்த நாற்பது நாள் இலக்கத்தின்படியே, ஒவ்வொரு நாள் ஒவ்வொரு வருஷமாக, நீங்கள் நாற்பது வருஷம் உங்கள் அக்கிரமங்களை சுமந்து, என் உடன்படிக்கைக்கு வந்த மாறுதலை உணர்வீர்கள்”  (எண்ணா: 14: 30,31,34)</

இஸ்ரவேல் மக்கள் முறுமுறுத்து, கலவரம் பண்ணி, நாங்கள் எகிப்திலே செத்து போயிருந்தால் நலமாயிருக்கும் என்று கூறியதைக் கர்த்தர் கேட்டார். அவர்கள் விருப்பத்தின்படியே அவர்கள் அசட்டை பண்ணின தேசத்துக்குள் அவர்கள் பிரவேசிக்காமல், நாற்பது வருட காலம் வனாந்தரத்தை சுற்றி வந்து, அங்கேயே அவர்கள் மரித்துப் போகும்படி செய்தார்.

நாற்பது நாட்கள் நாற்பது வருடங்களுக்கு சமமாயிற்று!

எத்தனை முறை முறுமுறுத்தாய், எத்தனை முறை அவிசுவாசித்தாய், எத்தனைமுறை கர்த்தருடைய வார்த்தையை அசட்டை பண்ணினாய்! நீ அசட்டை பண்ணினதால் நீ அதில் பிரவேசிப்பதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார். கர்த்தர் ஏன் எனக்கு வாக்குத்தத்தம் பண்ணினதை நிறைவேற்றவில்லை? ஏன் என் ஜெபத்துக்கு பதிலில்லை என்று நீங்கள் எண்ணலாம்! காரணம் அவரல்ல! நம் அக்கிரமங்களே!

நாற்பது நாட்கள் நாற்பது வருடங்களுக்கு சமமான சாபமாக மாறுமுன் மனந்திரும்பு!

ராஜாவின் மலர்களில், தொடர்ந்து நாம் இஸ்ரவேல் மக்களின் நாற்பது வருட வனாந்தர அனுபவத்தைப் பற்றி படிப்போம். உங்கள் நண்பர்களுக்கும் ராஜாவின் மலர்களை அறிமுகப்படுத்துங்கள்.

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

premasunderraj@gmail.com

Leave a comment